வியாழன், 5 மே, 2011

கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா

டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி
சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், "டி.பி., ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. "கலைஞர் "டிவி'க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபாய் வழங்க, "டி.பி., ரியாலிட்டி' குழுமம் ஏன் முன் வர வேண்டும்?' என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் "டிவி' கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், "கலைஞர் "டிவி'க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், "ராஜா கைது இருக்காது' என்று அளித்த உறுதியும், "குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது' என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

வக்கீல் யார்? கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழிக்கு சம்மனா? இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பணம், "கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,' என்று தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: