திங்கள், 2 மே, 2011

புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்


                       எஸ்.எம்.எம்.பஷீர்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை செய்வாரடி! – கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி.” (சுப்ரமணிய பாரதியார்)

அண்மையில் நான் பிரான்சில் இருந்து இயங்கும் பிரபல வானொலி ஒன்றில் அரசியல் கலந்துரையாடலில் பங்குகொண்டபோது, என்னிடம் விடுக்கப்பட்ட கேள்வி ஐரோப்பாவில் புலிகளினால் முடுக்கிவிடப்பட்டிருக்கும் முஸ்லிம் விரோத விசமப்பிரசாரம் பற்றியது. கிழக்கிலே இருந்து ஐரோப்பாவிலே குடியேறி புலிகளுக்காக பரப்புரை செய்யும் ஒரு புலியின் ஒலி(ளி)பரப்பாளர் ஒருவர் தமது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிழக்கிலே மீண்டும் பொருளாதார சமூக செயற்பாடு ஜனநாயக அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் திடமாகவும் தீர்க்கமாகவும் கட்டி எழுப்பப்படும் இன சௌஜன்யத்தை, சீர் குலைக்க, தமிழ் மக்களை முஸ்லிம் மக்களின் மீது பகைமை கொள்ளச்செய்ய பகீரத் பிரயத்தனம் செய்வதாகவும், அவர் ஒரு நிகழ்வொன்றில் முஸ்லிம்களின் மீது புலிகள் நடத்திய இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்ப்பிற்கும் காரணம் கண்டுபிடித்து நியாயம் கற்பிக்க முனைவதாக நான் அந்நபர் பற்றி முன்னரே அறிந்திருந்தேன்,

எனவே அத்தகைய விசமப்பிரச்சாரங்களை குறித்து கேள்வி எழுப்பிய நண்பரிடம் புலிகளின் முஸ்லிம் உறுப்பினர்கள் குறித்து, புலிகளின் வரலாறு எழுதிய புலி உறுப்பினரின் பதிவு ஒன்றினை விரைவில் வெளியிடுவேன் என்று குறிப்பிடிருந்தேன்; அவ்வண்ணம் இங்கு புலிகளின் வரலாற்று ஏட்டில் ஒரு பக்கத்தினை சான்றாக வைக்க விரும்புகிறேன். இதன் மூலம் புலிகளின் வலையில் விழுந்து மாண்டு போன ஒரு முஸ்லிம் புலியின் சரிதை மட்டுமல்ல இது; முஸ்லிம்கள் அன்று புலிகளுக்கு வழங்கிய உதவியையும் ஒத்தாசையையும் புலிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பதுடன் பின்னர் முஸ்லிம் விரோதகொள்கையை கைக்கொண்டு மிலேச்சதனமாக முஸ்லிம்களை எவ்வாறு நடத்தினர் என்ற கேளவிக்கு இன்றைய பின்னணியில் பரிசீலிப்பதறகும் , பதில் சொல்வதற்கும் உதவும்; இது குறித்து கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே இதனை பிரசுரிப்பதன் நோக்கமுமாகும்.
அண்மையில் இலங்கையில் முன்னாள் எம் பியும், பிரபல முஸ்லிம் சட்டத்தரணி தனது ஆங்கில கட்டுரையொன்றில் அக்கரைப்பற்றை சேர்ந்த அட்வொகேட் ஹாசிம் (Advocate Cassim ) என்பவரது மகனை புலிகள் அக்கரைப்பற்று பகுதி தலைவராக (Area leader) நியமித்ததை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால் அவர் தன்னை வெறுதததாகவும் அவரால் அதை (தனது மகன் புலிகளில் சேருவதை) தடுப்பதற்கு எதுவும் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு புலியில் சேர்ந்து தம்மை அழித்துக்கொண்ட சில முஸ்லிம் இளைஞ்ர்கள் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.இனி புலிகளின் பதிவேட்டைப் பார்ப்போம்

 அக்கரையூர் தந்த அல்லி கப்டன் பாறூக்
அகமது லெவ்வை முஹம்மது ஹனிபா, அக்கரைப்பற்று -06 அம்பாறை
                               வீரஉயிர்ப்பு 06.12.1959. வீரச்சாவு 07.01.1987


தென்னை இளநீரும் தேங்கியோடும் வாய்க்காலின் அருகில் வளர்ந்திருக்கும் நாணல் பற்றைகளில் கூடுகட்டிவாழும் வயலான், தேனோடு பாலும், தெவிட்டாத அழகும; கலையோடு பின்னிப்பிணைந்து மாறாத வீரமும் கானான், கொக்குக் குருவிகள் ஒலிக்கும் ஒலியோடு சேர்ந்து இனியகானமாக தினம் ஒலித்து மெய்சிலிர்க்க வைக்கும் கவிகளும் வயல்களில் இருந்து பாட்டமாய் பறந்துவரும் வயல் குருவிகளை களிமண் உருண்டை கொண்டு கவிக்கு இசை சேர்க்குமாப்போல் கலைக்கும் ஆடவர்களும் அந்த அக்கறைப்பற்று வயலுக்கும், நகருக்கும் தனியழகைத் தரும்
சுற்றி வளைக்க விரும்பாமல் சுருக்கமாகச் சொல்லப்போனால் விடுதலை வேண்டிப் புறப்பட்டு இருந்த இடம் தெரியாமல் தமிழீழத்திலிருந்து சிதறிப்போன விடுதலை இயக்கங்கள் முப்பத்தெட்டு என்றாலும் அக்கரைப்பற்று மண்ணில் மிக ஆழமாக முளைத்ததில் வியப்பில்லையல்லவா.
நீண்டுயர்ந்து நிற்கும் பெரியதொரு ஆலமரம். அதில் பல விழுதுகள் அங்கே ஒரு விழுதுதான் இந்த முகமது கனிபாவை 06.12.1959 தனில் ஈன்றெடுத்த அகம்மது லெவ்வை எனும் பெரு விருட்சம்.வாணிபத்தால் மட்டுமல்லஇ கமத்தொழிலிலும் சிறந்து விளங்கிய தனிப்பெரும் குடும்பம் இது. 1985ம் ஆண்டு இறுதிமாதப் பகுதியில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்துகளை மக்கள் மனங்களில் விதைப்பதற்காக அம்பாறை மாவட்ட அரசியல் வேலைக்கென்று தேசியத் தலைவர் அவர்களால் யாழ் மண்ணிலிருந்து தென் தமிழீழ மண்ணுக்கு அனுப்பட்டவர்தான் மேஜர் டயஸ்.
“தங்கத் தமிழீழத் தானைத் தலைவனின்” கருத்துகளை மிக உன்னிப்பாக கேட்ட மேஜர் டயஸ் அப்படியே அம்பாறை வாழ் தமிழ் பேசும் இளைஞர்களின் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு பற்றிய கருத்துக்ககளை மிக ஆழமாக விதைத்தான்.
முத்தமிழை மிக முதன்மையாகப் பேசியும் அதற்கு விழாவெடுத்தும், கவி, கதைகள் அடங்கிய நூல்கள் பலதை வெளியிடுவதிலும் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்த அந்த அக்கரைப்பற்று மண்ணிலிருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்ட முஸ்லிம் புலிவீரர்கள் பலர். அதில் முதன்மையானவன்தான் இந்த முகம்மது கனிபா. ஏனென்றால் இவரது சகோதரன் விடுதலைப் புலிகளில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டதன் பின் தானும் இயக்கத்தில் இனைந்து தனது சகோதரனின் பெயரையே தனக்கு வைக்க வேண்டும் என்று கூறி அதன்படியே செயற்பட்டு வந்தவன் இந்த கனிபா என்னும் பாறுக்
மாண்பில் முஸ்லிம் என்றாலும் மேஜர் டயசின் கனல் கக்கும் கருத்துகளைக் கேட்டு இந்த கதாநாயகன் மேஜர் டயஸ், மேஜர் அன்ரனி, கப்டன் டேவிட் ஐயா, நியூட்டன்,கப்டன் நகுலன் இன்னும் பல விடுதலை வீரர்கள் தனது உம்மா வாப்பா உறவினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து இன்னமுதூட்டிப் பொருளுதவிகளும் தன் வாப்பாவால் உதவச் செய்த இஸ்லாமியத் தமிழனிவன்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கொப்ப இந்த கப்டன் பாறுக்கின் குணாதிசையங்களை நன்கு புரி;ந்துகொண்ட விடுதலைப் புலிவீரர்கள் இவன் தம்பியின் பெயரான பாறுக் எனப் பெயரிட்டனர்.
அதுஇ அம்பாறை கஞ்சிகுடிச்சாறு விடுதலைப் புலிவீரர்களின் பயிற்சிமுகாம், இருந்தாலும் சில புலிவீரர்கள் யாழ் மண்ணை நோக்க வேண்டியிருந்தது. பாறுக் படிப்பிலும் மிக கவனம் செலுத்தியவன். அக்கரைப்பற்று முஸ்லிம் மகாவித்தியாலயம் க.பொ.த.சாதாரணதரம் வரை படித்தவன; பரிச்சைக்காலவேளை இருந்தும் இவனது யணம் யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
யாழ் மண்ணில் முதலாவது பயிற்சிப் பாசறையில் இந்த பாறுக் புகுந்தான். சுருண்டிருக்கும் கொறுக்காய் போன்ற தலைமுடி, பூரண சந்திரனையும் மிஞ்சிவிடுமாப்போன்ற அழகிலும் அழகான வட்டமுகம் கரியவிழிகள், அரும்பு மீசை குறும்புப் பார்வை கம்பீரமான தோற்றம் எத்தனை அழகு எப்படிச் சொல்வது.பயிற்சி என்ன பாராட்டுகள்தான் அதிகம் சோர்வையே காட்டிக் கொள்ளாத சிவந்த மேனி அந்த ஏ.கே 47 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சிங்கநடைபோட்டுவரும் அழகைக் கண்டு லெப். கேணல் ராதா அவர்களே பாராட்டிய பைந்தமிழ் வேங்கையன்றோ.
இவனது வீரச் செய்தி கேட்டு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் தும்பக் கடலில் மூழ்கியது, ஆனாலும் வீரச்சாவுச் செய்தி மட்டக்களப்பு அம்பாறை மண்ணில் குறிப்பாக அக்கரைப்பற்றை எட்டியதும் கப்டன் டேவிட் ஐயாவால் வெளியிட்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று மதிற் சுவர்களை அலங்கரித்ததும் மாவிலைத் தோரணங்களும் வாழை மரங்களும் வீரப்புலிகளின் அரைக்கம்ப கொடிகளும் அக்கரைப்பற்றுவாழ் முஸ்லிம் மக்களின் கண்களைக் குளமாக்கத் தவறவில்லை.
உண்மைதான்! யாழ் மண்ணில் முதலாவது பயிற்சிப் பாசறையை தன் விடாமுயற்சியினால் சிறப்பாகச் செய்து ஒன்பது மாத காலத்துக்குள் முடித்தவன். அன்று நடந்த சிறுசிறு தாக்குதல்களில் கலந்துகொண்டவன். பாறுக் ஒரு முஸ்லிம் இளைஞன் என்று சொல்லாது தன் குடும்ப உறவினன் என்றே அனைவரும் அழைத்தனர். அதைவிட மேலான அன்பையும், பாசத்தையும் அண்ணன் (தலைவர்) மீது பொழிந்தவன் அதனால் தேசியத் தலைவர் அம்பாறை மண்ணைப்பற்றியும் அங்கு போராட்ட நிகழ்வு பற்றியும் வழிமுறைகளைச் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்;டவன்.
யாழ் மண்ணில் தனது போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்தாலும; மட்டு – அம்பாறையில் இருந்து போராடிய புலிவீரர்கள் இந்த வீரனின் இல்லம் செல்லத் தவறுவதில்லை. அப்படி தவறும் பட்சத்தில் தந்தை அகமது லெவ்வை புலிவீரர்கள் யாரையாவது அக்கரைப்பற்று நகரினுள் கண்டால் உடனே தன் இல்லம் அழைத்துச் சென்று அன்னமிட்டு பல உதவிகளையும் வழங்கி வழியனுப்பத் தவறுவதில்லை. அந்த பாசமழையில் நனைந்த புலிவீரர்கள் யாராக இருந்தாலும் வாப்பா உம்மா தங்கச்சி தம்பி போறன் வாறன் என்று சொல்லிப் புறப்படுவார்கள்
வந்து போய்ப் பழகிச் சென்ற வீரர்களின் வீரச்சாவுச் செய்தி கேட்டாலும் இந்த பைந்தமிழ் உரைக்கும் வாப்பா உம்மாக்களின் கண்களும் குளமாகும். பல களங்களைப் பல முனைகளில் இவன் யாழ் மண்ணில் கண்டாலும் தன் தாய் மண்ணில் காலூன்றி களங்காணப் பல முஸ்லிம் இளைஞர்கள் திரட்ட தங்கத் தலைவனிடம் கேட்டுப் பதில்வரும் நாளையும் பார்த்துக் கிடந்தான். 07.01.1987ம் ஆண்டு காலை பத்து முப்பது மணிபோல் யாழ் கோட்டையில் குடிகொண்டிருந்த சிங்களக் கூலிப் பட்டாளங்கள் யாழ் மண்ணை அழிக்க படைகொண்டு வந்தனர். விடுதலைப் புலிவீரர்கள் எதிர்கொண்டனர். துப்பாக்கி ரவைகளும் எறிகணைகளும்தான் அன்று பொழிந்தது. புலிவீரர்கள் எதிர்த்தனர். எதிரிகளை அழித்தனர். அவன் போட்டுவந்த திட்டத்தினை முறியடித்தனர். பகைவன் கோட்டையை நோக்கி ஓடினான்.
வீறுகொண்ட வேங்கை கப்டன் பாறுக்கின் விரிந்த நெஞ்சிலிருந்து சுதந்திரம் தேடிய குருதி பெருக்கெடுத்தது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம” என்று அவனது நாவிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. ஆனால் அந்தக் கப்டன் பாறுக் என்றும் எங்கள் தானைத் தலைவனின் மனங்களில் வாழ்கிறான்.


( இவ்வாக்கத்தின் அம்சங்கள் குறித்து நான் “பொழிப்புரை” எழுத தேவையில்லை. இக்கட்டுரையினை வேறு இணையத்தளத்தில் அல்லது பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்பவர்கள் அல்லது மொழி பெயர்பவர்கள் தயவுசெய்து கட்டுரையின் மூலத்தை குறிப்பிடவும்-எஸ்.எம்.எம்.பஷீர். . )
– thenee -

கருத்துகள் இல்லை: