இஸ்லாமாபாத், மே 6: அல் காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபட்டாபாத் நகரில் கடைசியாகக் வசித்த வீடு தரைமட்டமாக இடித்துத் தள்ளப்படும் என்று பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஒசாமா பின் லேடனுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர். அவர்கள் அவர் வசித்த வீட்டை புனித இடமாகக் கருதி அந்தப் பகுதிக்கு இதே நாளில் ஆண்டுதோறும் யாத்திரை வந்தாலும் வருவார்கள் என்பதால் கட்டடத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிடுவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் தீவிரவாதம் மேலும் வளரும் என்ற அச்சம்கூட இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதைவிட இது பாகிஸ்தானிய அரசுக்கு பெரியதொரு அவமானச் சின்னமாக இருக்கிறது. உலகையே ஆட்டிப்படைத்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்துவிட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் சேர்ந்து போரிடுவதாகக் கூறுவது ஏன் என்று எல்லா நாடுகளின் தலைவர்களும் பாகிஸ்தானைக் கேட்கக்கூடும். இதற்கு எந்தப் பதிலைக் கூறினாலும் அது பாகிஸ்தானுக்கு மேலும் அவமானத்தைத்தான் தேடித்தரும்.
பயங்கரவாதி தன்னுடைய குடும்பத்துடன் வசித்ததே தனக்குத் தெரியாது என்றால் பாகிஸ்தானின் போலீஸன்ம் உளவுப்பிரிவும் எதற்கும் தகுதியற்றவர்கள் என்ற கெட்ட பெயர் சர்வதேச அளவில் நிலைபெற்றுவிடும்.
இந்தக் கட்டடத்தில் நுழைந்து அமெரிக்கக் கடற்படை கமாண்டோக்கள் (சீல்) தாக்குதல் நடத்திவிட்டனர் என்ற போதிலும் பாகிஸ்தானிய ராணுவத்தினரைத் தவிர வேறு யாரையும் இன்னமும் இந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த வீட்டைச் சுற்றிக் காவல் பார்க்க வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை முதல் உத்தரவிட்டார்களே தவிர அந்த வீட்டுக்கு உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்கக்கூட எங்களுக்கு அனுமதி தரவில்லை என்று அந்தப் பகுதி போலீஸ் நிலைய அதிகாரி நாசிர் கான் வருத்தம் தோயக் குறிப்பிட்டார்.
இந்த இடத்தை அர்ஷத்கான் என்பவர்தான் விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டுக்கான மின்சார நுகர்வு அட்டை, கேஸ் கார்டு ஆகியவை அவருடைய பெயரில் தான் வாங்கப்பட்டிருக்கிறது.
அர்ஷத் கானும் அவருடைய தம்பி தாரிக் கானும் அந்த வீட்டில் குடியிருந்தனர். அவர்களுடைய தேசிய அடையாள அட்டையானது கைபர் - பக்டூன் பிரதேசத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது.
அக்கம்பக்கத்தார் ""நீங்கள் யார், ஏன் இங்கு குடி வந்தீர்கள்?'' என்று கேட்டபோது ""நாங்கள் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், வேறு பழங்குடிகளுக்கும் எங்களுக்கும் சண்டை மூண்டதால் அங்கு இருக்க முடியாமல் இங்கே குடிவந்துவிட்டோம்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்த வீட்டை நூர் முகம்மத் என்ற ஒப்பந்ததாரர்தான் கட்டித் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு 7.5 லட்சம் ரூபாய் தந்திருக்கின்றனர். அந்த வீட்டில் இருந்தவர்கள் யாருடனும் அதிகம் பேசியதில்லை. அந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தனர், அந்த வீட்டுப் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்றுகூட யாருக்கும் தெரியாமலே இருந்திருக்கிறது.
பக்கத்து வீட்டில் இருந்த காசிம் ஆலம் மட்டும் அர்ஷத் கானிடம் விடாமல் பேச்சு கொடுத்து, ""எப்போதும் வீட்டிலேயே இருக்கிறீர்களே சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள், செலவுக்கு எப்படிப் பணம் வருகிறது?'' என்று கேட்டிருக்கிறார்.
ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டில் தாங்கள் வியாபாரம் செய்வதாகவும் அவ்வப்போது அங்கு சென்று திரும்புவதாகவும் பணம் ஒரு பிரச்னையே அல்ல என்றும் பதில் அளித்திருக்கிறார்.அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மற்ற வீடுகளைக் காட்டிலும் மிக உயரமாக இருந்ததால் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியிலிருந்து பார்க்கிறவர்களால் தெரிந்துகொள்ள முடிந்ததில்லை.
அந்த ஊரில் பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான் சுற்றுச்சுவரை உயரமாக எழுப்பியிருந்தார்கள். ஆனால் இந்தக் கட்டடத்தில்தான் சுவர் ரொம்ப உயரமாக இருந்திருக்கிறது. மற்ற வீடுகளில் சுவரின் உயரத்தைக் குறைத்துவிட்டு அதன் மேல் முள்கம்பி வேலி போட்டிருக்கின்றனர்.
இப்போதும்கூட அந்த வீட்டை ஏராளமானோர் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
பின் லேடனும் குடும்பமும் அங்கே எப்படி வசித்திருக்கும், அமெரிக்க கமாண்டோக்கள் வந்தபோது என்ன நடந்திருக்கும், எப்படிச் சுட்டிருப்பார்கள் என்றெல்லாம் அவரவர் கற்பனை வளத்துக்கு ஏற்ப பேசிச் செல்கின்றனர். ராணுவம், போலீஸ் இரண்டும் அந்த வீட்டை இப்போது காவல்காக்கின்றன. வீட்டிலிருந்து சேகரிக்க வேண்டிய தடயம் ஏதும் இல்லை, எனவே வீட்டை இடித்துவிடலாம் என்று போலீஸப்ர் தெரிவித்துள்ளனர்.
உலகின் பெரும்பாலான செய்திப்பத்திரிகைகளில் இந்த வீடும் வீட்டைப்பற்றிய வர்ணனையும் இடம் பெற்றுவிட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக