ஞாயிறு, 14 நவம்பர், 2010

Mayan.எவ்வளவு பெரிய நாகரிகமாக இருந்தாலும் கால ஓட்டத்தில் வீழ்ச்சியடையும் என்பதற்கு மாயா நாகரிகம்

எல்லாம் மாயா!   Mayan civilazation 

7. டியாகோ டி லாண்டா
ஒரு  நாகரிகத்தைக் காணாமல் போக வைக்க வேண்டுமென்றால் அவர்களது மொழியினை முதலில் அழிக்க வேண்டுமென்பது வில்லன்கள் வகுத்த இலக்கணம். இதன் அடிப்படையில், மாயா நாகரிகத்தை ஒழிக்க ஸ்பானிய மதகுருவான பிஷப் டியாகோ டி லாண்டா 16ம் நூற்றாண்டில் செய்த முயற்சி அந்த மக்களின் விலைமதிக்க முடியாத ஆயிரக்கணக்கான பண்பாட்டு பொக்கிஷங்களையும் புத்தகங்களையும் அழித்து விட்டது.
கிறிஸ்து பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அமெரிக்கப் பகுதியில் மாயா நாகரிகம் தோன்றி விட்டது. அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மெல்ல வளர்ந்து அப்பகுதி முழுவதும் மாயா மக்களின் கட்டுப்பாட்டில் வந்தது.  கி. பி. மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டம் மாயா பண்பாட்டின் பொற்காலமென்று அறியப்படுகிறது.  மாயா மக்கள் தங்கள் புகழின், சக்தியின் உச்சத்தில் இருந்த காலமது.  வியக்கவைக்கும் பல நகரங்களும், கோவில்களும், பிரமிடுகளும் இக்காலகட்டத்தில் தான் எழுந்தன.  அரசியல், போர், கட்டிடக் கலை, கணிதம் என பல்வகைத் துறைகளில் மாயா மக்கள் பெரும் முன்னேற்றங்கள் கண்டனர். ஆனால் அவர்கள் என்றும் ஒரு ஒருங்கிணைந்த பேரரசாக இருக்கவில்லை. தனிப்பட்ட நகர அரசுகளே ஒரு கூட்டமைப்பாகச் செயல்பட்டு வந்தன.  எவ்வளவு பெரிய நாகரிகமாக இருந்தாலும் கால ஓட்டத்தில் வீழ்ச்சியடையும் என்பதற்கு மாயா நாகரிகம் விதிவிலக்கல்ல. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பல்வேறு காரணங்களால் மாயா நகர அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து மாயா நாகரிகம் சுருங்கிப் போனது. அடுத்த அறுநூறு ஆண்டுகளுக்கு மாயா நகரங்கள் குறுநில அரசுகளாக மாறி மத்திய அமெரிக்காவின் ஒரு பகுதியை ஆண்டு வந்தன. அவ்வப்போது ஏதேனும் ஒரு நகரத்தின் சக்தி அதிகமானாலும் பொற்காலத்தில் விளங்கியது போல மீண்டும் அவைகளால் எழுச்சியடைய முடியவில்லை.  பதினாறாம் நூற்றாண்டில் புதிய உலகைத் தேடி ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்த போது, மாயா அரசுகளை அவர்கள் ஒரு பலம் பொருந்திய எதிரியாகக் கருதவில்லை. மாயா பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலுமிருந்த ஆஸ்டேக் மற்றும் இன்கா பேரரசுகளே புதிய உலகில் ஐரோப்பிய காலனியவாதிகளின் முக்கிய இலக்குகளாக இருந்தன.
அமெரிக்காவைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த பந்தயத்தில், மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் ஸ்பானியப் பேரரசு தான் முந்தியது. அமெரிக்கக் கண்டத்தில் காலெடுத்து வைத்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக இன்கா மற்றும் ஆஸ்டெக் பேரரசுகள் ஸ்பானிய பீரங்கிகளின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்ந்தன.  ஸ்பானிய பேரரசின் நோக்கம் முதலில் புதிய பகுதிகளைக் கொள்ளையடிப்பது மட்டுமே.  நாடுகளைக் கைப்பற்றிப் பேரரசில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை.  புதிய உலகின் வளங்களை முடிந்தவரை கொள்ளையடிக்க வேண்டுமென்று எண்ணிதான் செயல்பட்டார்கள். ஆனால் ஆஸ்டெக், இன்காப் பேரரசுகள் எளிதில் வீழ்ந்து விட்டதால் அவசரம் அவசரமாகக் கொள்ளையடிப்பதற்கு பதில், நிதானமாக இருந்து அரசாண்டு கொள்ளையடிக்கலாம் என்ற ஐடியா அவர்களுக்குத் தோன்றி விட்டது.  கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் போல மெதுவாக தென், மத்திய அமெரிக்காக்களின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.  வெடிமருந்து, துப்பாக்கிகள், குதிரைப்படைகள், எஃகு ஆயுதங்கள் போன்ற புதிய போர் தொழில் நுட்பங்களின் முன்னால், உள்ளூர் நாடுகளாலும், பண்பாடுகளாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு ஸ்பானியர்கள் தங்களுடன் கொண்டு வந்த காலரா, பெரியம்மை போன்ற ஐரோப்பிய வியாதிகளுக்கு இயற்கையில் எதிர்ப்பு சக்தி கொஞ்சமும் இல்லாத உள்ளூர் அமெரிக்கர்கள்  லட்சக்கணக்கில் செத்து மடிந்தனர்.  இப்படிப் புதிய ரக ஆயுதங்களும், புதிய கொடிய நோய்களும் வெகு விரைவில் ஸ்பானியர்களை அமெரிக்காவின் எஜமானர்கள் ஆக்கி விட்டன.
ஆஸ்டெக், இன்காப் பேரரசுகளுக்கு நேர்ந்த கதி மாயா அரசுகளுக்கு உடனடியாக ஏற்படவில்லை. ஏனென்றால், அவற்றைப் போல மாயா அரசுகள் ஒருங்கிணைந்த பேரரசுகள் இல்லை, பணக்கார நாடுகளும் இல்லை. எனவே ஸ்பானிய தளபதிகள் மாயா நாடுகளை முதலில் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மற்ற பேரரசுகளை வீழ்த்திய பின்னரே மெதுவாக மாய நாடுகளின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். ஸ்பெயினின் மாயா ஆக்கிரமிப்பும் தொடங்கியது.  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் மாயா அரசுகள் இருந்த யுகாடான் தீபகற்பம் முழுவதும் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ராணுவ ரீதியாகக் கைப்பற்றியது போதாதென்று அடுத்து மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் யுகாடானைக் கைப்பற்ற ஸ்பானிய அரசு யத்தனித்தது. அப்போது (இப்போதும்) ஸ்பெயினின் முக்கிய மதம் ரோமன் கத்தோலிக்கம்.  புதிய உலகு ராணுவ ரீதியாக   அடக்கப்பட்ட உடனே, கத்தோலிக்க மிஷனரிகள் பைபிளைத் தூக்கி கொண்டு அமெரிக்கக் காடுகளுக்குள் நுழையத் தொடங்கி விட்டார்கள்.  பேரரசின் புதிய குடிமக்களை “காட்டுமிராண்டி” மதங்களிலிருந்து  வெளிக்கொணர்ந்து அவர்களது ஆத்மாக்களை “காப்பாறு” வதே அவர்களது குறிக்கோள். . ரோமன் கத்தோலிக்கம் கொள்கை இறுக்கத்தின் உச்சியில் இருந்த காலமது.  புதிய உலக மக்களை கத்தோலிக்கத்துக்கு மாற்றக் கிளம்பிய பாதரியார்களுள் ஒருவர் தான் டியாகோ டி லாண்டா.
ஸ்பெயினில் பிறந்த லாண்டா,  கி.பி. 1549 ல் மத்திய அமெரிக்காவில் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்காக யுகாடானுக்கு வந்து சேர்ந்தார்.  அப்போது தான் யுகாடான் ஸ்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் வந்திருந்தது. பல இடங்களில் மாயா மக்கள் தங்கள் புதிய எஜமானர்களைக் கோபத்துடனும் வெறுப்புடனும் பார்த்தனர்.  ஆங்காங்கே ஸ்பானிய ஆட்சிக்கெதிராகப் புரட்சிகள் வெடித்த வண்ணம் இருந்தன. புதிதாக யுகாடானுக்கு வந்த லாண்டா பயப்படாமல் யுகாடினின் மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். மற்ற பாதரியார்கள் போவதற்கு அஞ்சிய பிரதேசங்களுக்கெல்லாம் சென்று கத்தோலிக்கத்தைப் போதித்தார். மாயா மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது பண்பாட்டைப் புரிந்து கொள்ள முயன்றார். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அவருக்கு ஆற்றாமையும் ஆத்திரமும் அதிகரித்தன.  கத்தோலிக்கம் வேகமாகப் பரவினாலும், மாயா மக்கள் தங்கள் பாரம்பரியப் பழக்க வழக்கங்களையும் கடவுள்களையும் விடத் தயாராக இல்லை.  கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கூட கிருத்துவக் கடவுளைத் தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போலத்தான் வழிபட்டனர். உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் கூடாதென்று கத்தோலிக்கம் கூறினாலும் மாயா கத்தோலிக்கர்கள் கிருத்துவக் கடவுளுக்குத் தங்கள் பிற கடவுளரைப் போல உருவம் கொடுத்து அவர்களுள் ஒருவராக மாற்றி விட்டனர்.  அவர்களது பழக்கவழக்கங்களை மாற்ற மிஷனரிகள் முயன்றால் ஆவேசம் கொண்டு எதிர்த்தனர். இப்படி கத்தோலிக்கம் லோக்கல் மதமாக மாறுவதை லாண்டாவால் ஒத்துக்கொள்ள முடியவிலை.  ஐரோப்பாவில் உள்ள சுத்தமான கத்தோலிக்கமே இருக்க வேண்டும். மற்ற பழக்க வழக்கங்களையெல்லாம் சுத்தமாக ஒழிக்க வேண்டும் என்று அவர் கங்கணம் கட்டினார்.
பழைய மாயா மதத்தின் பூசாரிகள்தான் ரகசியமாக ஒன்றிணைந்து மக்களை உண்மையான கத்தோலிக்கர்களாக மாற விடாமல் தடுத்து வருவதாக நினைத்த லாண்டா, பழைய மாயா மதச் சின்னங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஸ்பெயினில் வழக்கமான இன்குவிசிஷன் (inquisition) என்ற விசாரணை முறையை  யுகாடானில் அறிமுகப்படுத்தினார்.  விசாரணை என்றால் சும்மா பேச்சு விசாரணை இல்லை. அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொண்டே விசாரிப்பார்கள்.  உண்மையான கத்தோலிக்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் (heretics and apostates) என்று சந்தேகப்படும் யாராக இருந்தாலும் தூக்கி வந்து சித்ரவதைக் கருவிகளில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்டனர். இதில் மாயா சமூகத்தில் சாதாரணக் குடிமக்களிலிருந்து பெரும் பிரபுக்கள் வரை யாரும் தப்பவில்லை. ஒருவர் உருவ வழிபாடு செய்கிறார், பழைய மாயா மதத்தைப் பின்பற்றுகிறார் என்று கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டால் போதும் அவர் தூக்கிச் செல்லப்பட்டு நையப் புடைக்கப்படுவார். வலி தாங்க முடியாமல்,  “உண்மையான” கிருத்துவனாக இருப்பதாக ஒத்துக்கொள்வார். அடி விழுந்தும் செய்த “பாவங்களை” உடனே ஒத்துக்கொள்ளாமல், சித்ரவதையின் போதே உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள்.  ஒரு புறம் மாயா மக்களுக்கு அடி உதை விழுந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு புறம், பழைய மாயா புத்தகங்களையும்,  விக்கிரகங்களையும் எங்கு கண்டாலும் பிடுங்கி வர ஆணையிட்டிருந்தார் லாண்டா.
இப்படிச் சேகரிக்கப்பட்ட புத்தகங்களையும், விக்கிரகங்களையும் ஜூலை 12, 1562ல் பொது இடத்தில் போட்டுக் கொளுத்தினார். இந்தச் சம்பவம், அவரது சக மிஷனரிகளிடையே கூட பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  லாண்டாவின் செய்கைகள் வரம்பு மீறிப் போய்விட்டன என்று யுகாடானின் பிஷப் அவர் மீது குற்றஞ்சாட்டி விசாரணைக்காக ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டார். மதமாற்றத்துக்கு  வன்முறையைப் பயன்படுத்தினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஸ்பெயினில் அவரை விசாரித்த தேவாலய அதிகாரிகள் அவர் செய்தது சரியே என்று அறிவித்து, அவரையே அடுத்த யுகாடான் பிஷப்பாக அறிவித்து விட்டனர். அப்புறம் என்ன, யுகாடான் திரும்பிய லாண்டா புதிய அதிகாரத்துடன் முன் செய்த வேலைகளையே மீண்டும் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்.  பிஷப்பாக அவர் இருந்த காலத்தில் ஸ்பெயினின் மத்திய அமெரிக்க ஆட்சியாளர்களைக் கூட அவர் மதிக்கவில்லை. இதனால் அவரது ஆட்சி காலத்தில் ஸ்பானிய ஆளுனர்களுக்கும் அவருக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.  ஆனால் அவர்களால் லாண்டாவின் அராஜகத்தை அடக்க முடியவில்லை. சித்ரவதையும்,  புத்தக எரிப்பும் லாண்டா 1579ல் இறக்கும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. லாண்டாவின் மறைவுக்குப் பின் அவரது இறுக்கமான கொள்கை அதிகாரப்பூர்வமாகத் தளர்த்தப்பட்டாலும் மிஷனரிகளுள் அவரைப் பின்பற்றியவர்கள் இருக்கத்தான் செய்தனர்.
லாண்டாவின் இந்த செயல்களால் எவ்வளவு மாயா பண்பாட்டுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன என்று இதுவரை கணக்கிடப்படவில்லை. ஆனால லாண்டா மற்றும் அவரைப் பின் தொடர்ந்த கலாச்சார தீவிரவாதிகளின் செய்கைகள் மாயா மொழியை அழிப்பதில் ஓரளவு வெற்றி கொண்டு விட்டன.  சில நூறாண்டுகளுக்குப் பிறகு மாயா எழுத்துருவை வாசித்து மொழிக்கு அர்த்தம் சொல்ல ஒரு மாயருக்குக் கூட தெரியாமல் போனது.  யுகாடானும் சுற்றியுள்ள பிரதேசங்களும் பெரும்பாலும் கத்தோலிக்கத்தைத் தழுவின. இப்படி ஒரு மொழியை அழிப்பதில் லாண்டா வெற்றியடைந்தாலும்,  ஒரு வழியில் அவரது முயற்சிகள் தான் இன்று மாயா எழுத்துகளை வாசிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளன. மேலும் லாண்டா மாயா சமூகத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியும் எழுதி வைத்த குறிப்புகள் இன்று மாயா நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்யும் இனவியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் பெரும் துணையாக உள்ளன. மாயா நாகரிகத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு தான் அவர் மாயா மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதத் தொடங்கினார்.  மேலும் அவரது குறிப்புகளை அவர் புத்தகமாக வெளியிட்டது அவர் மீது விசாரணை நடந்ததால் தான். மாயா நாகரிகம் சாத்தானின் கைவேலை என்பதை ஸ்பானிய மத அதிகாரிகளுக்குப் புரிய வைப்பதற்காகத்தான் அக்குறிப்புகளை அவர் புத்தகமாக்கினார். அவரை யாரும் தட்டிக்க் கேட்கவில்லையென்றால் இன்று மாயா நாகரிகத்தைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.  வேறு எந்த வேற்றாளிடமும் நம்பிக்கை வைக்காத மாயா மக்கள் லாண்டா மீது மதிப்புக் கொண்டு அவரிடம் தங்களது பாரம்பரிய நூல்களைக் காட்டினர். ஆனால் மான்தோலில் எழுதப்பட்டிருந்த இந்தப் புத்தகங்களைச் சாத்தானின் கைவேலையாகக் கருதினார் லாண்டா. அவரால் அந்தப் புத்தகங்களைப் படிக்கக் கூட இயலவில்லை – அவருக்கு மாயா எழுத்து முறையைப் படிக்கத் தெரியாது.  ஆனால் அவற்றை அழிக்க வேண்டுமென்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்.  மாயா மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குத் துரோகமிழைத்து அவர்களது மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்கத் தன்னால் இயன்றதைச் செய்தார். அந்த முயற்சியில் தற்காலிகமாக அவர் வெற்றி பெற்றாலும் அவர் விட்டுச் சென்ற குறிப்புகளைக் கொண்டுதான் 20ம் நூற்றாண்டில் மாயா எழுத்துக்களைப் படிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பிற கலாசாரங்களை எடை போடக்கூடாது என்பதற்கு லாண்டா போன்றவர்கள் தான் நல்ல எடுத்துக்காட்டுகள்.

கருத்துகள் இல்லை: