ஞாயிறு, 14 நவம்பர், 2010

கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது

புதுச்சேரி: கடல்கோளினால் அழிந்துபோன பூம்புகார் நகரின் எழில்மிகு தோற்றத்தை, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் தத்ரூபமான ஓவியமாகத் தீட்டி உள்ளார்.

தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1,800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்ட பூம்புகார் நகரின் அழகிய தோற்றத்தை, புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன், பிரமாண்ட ஓவியமாகத் தீட்டி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்.  "டிரை பேஸ்டல்' எனும் வண்ணக் கட்டிகளை கொண்டு, 12 அடி நீளம், 6 அடி அகலமுள்ள காகிதத்தில், இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில், பூம்புகாரின் அன்றைய காட்சிகளை இலக்கிய நயத்தோடு மிகப்பெரிய ஓவியமாகத் தீட்டியுள்ளார்.

பூம்புகார் நகரின் பிரதான வீதி, வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள் உள்ளிட்டவை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.மேலும், சாலையோர கடைகளும், கடலில் நங்கூரமிட்டுள்ள வர்த்தக கப்பல்களும், பரபரப்பான பண்டக சாலைகள் என ஓவியக் காட்சிகள் நீள்கிறது. ஓவியத்தின் இடதுபுறம் சோழ மன்னரின் யானையும், அருகில் பாதுகாப்புக்காக அரேபிய குதிரையில் யவன வீரர் செல்லும் காட்சியும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நெடிய அகன்ற வீதியில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறு தேசத்தவர்கள் தமிழர்களுடன் நடந்து செல்வதும், அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த சதுக்க பூதம் (நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது) என, பூம்புகாரின் எழிலான காட்சிகளை ராஜராஜனின் ஓவியம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கு, "டிரை பேஸ்டல்' ஓவியம் தீட்டும் நுட்பத்தையும், இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கும் முறையைக் கற்பிற்கும் நோக்கிலும் இந்த பூம்புகார் நகர ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மூன்றாமாண்டு ஓவிய பட்டப்படிப்பு வகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: