வெள்ளி, 19 நவம்பர், 2010

அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலத்தைத் திருப்பிக் கொடுத்த எதியூரப்பா குடும்பம்

குமாரசாமி முதல்வராகவும், எதியூரப்பா துணை முதல்வராகவும் இருந்தபோது, அடிமாட்டு விலைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கிய எதியூரப்பாவின் மகன்கள், மகள் ஆகியோர் தற்போது அந்த நிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டனர்.

அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கி விட்டு பின்னர் திருப்பிக் கொடுத்து தப்பிய ஜெயலலிதாவைப் போல இப்போது எதியூரப்பா குடும்பத்தினர் வாங்கிய நிலத்தைத் திருப்பிக் கொடுத்து எதியூரப்பாவின் பதவியைக் காக்க முயன்றுள்ளனர்.

எதியூரப்பாவின் இரு மகன்கள், மருமகன், மகள் ஆகியோருக்கு எதியூரப்பா துணை முதல்வராக இருந்தபோது பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்குச் சொந்தமான நிலம் அடிமாட்டு விலைக்கு தரப்பட்டது. இதன் காரணமாக ரூ. 500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது தெரிய வந்தது. சமீபத்தில் குமாரசாமி இதை அம்பலப்படுத்தி ஆதாரங்களையும் வெளியிட்டார்.

இதனால் எதியூரப்பாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தனது குடும்பத்தினர் வாங்கிய நிலங்களை திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று எதியூரப்பா அறிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

எதியூரப்பாவின் மூத்த மகனும், எம்.பியுமான ராகவேந்திராவுக்கு பெங்களூர் ராஜா மஹால் விலாஸ் விரிவாக்கப் பகுதியில் 4000 சதுர அடி நிலம் கொடுக்கப்பட்டிருந்தது. இது வீட்டு மனையாகும்.

அதேபோல, இளைய மகன் விஜயேந்திராவுக்கு பெங்களூர் புறநகரில் உள்ள ஜிகானி தொழிற்பேட்டையில், 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு நிலமும் கடந்த 2007ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

மேலும் எதியூரப்பாவின் மகள் உமாதேவிக்கு பெங்களூர் புறநகரில் உள்ள ஹோரஹள்ளி என்ற இடத்தில் பிபிஓ அமைப்பதற்காக 2 ஏக்கர் நிலம் தரப்பட்டிருந்தது. இது 2008ம் ஆண்டு எதியூரப்பா முதல்வர் பதவிக்கு வந்த பின்னர் வழங்கப்பட்டதாகும்.

இதில் ராகவேந்திராவுக்கு தரப்பட்ட நிலம்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜி என்ற சிறப்பு அந்தஸ்தின் கீழ் ராகவேந்திராவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தின் கீழ், பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் இடம் வாங்குவதாக இருந்தால், அவர் சமூகத்தில் ஏதாவது சாதனை செய்தவராக இருக்க வேண்டும. மேலும் அவருக்கு ஏற்கனவே பெங்களூரில் சொத்து இருக்கக் கூடாது. ஆனால் ராகவேந்திராவுக்கு ஏற்கனவே பெங்களூரில் சொத்து உள்ள நிலையில், எந்த சாதனையும் படைக்காத அவருக்கு ஜி சிறப்புஅந்தஸ்தின் கீழ் நிலம் தரப்பட்டிருந்தது. அதுவும் அடிமாட்டு விலைக்கு.

இதேபோல, எதியூரப்பாவின் சகோதரி, அவரது மருமகள் ஆகியோருக்கு பெங்களூர் மேற்கில் சந்திரா லேஅவுட் பகுதியில் இரண்டு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதுதவிர எதியூரப்பாவின் மருமகனுக்கு ஷிமோகாவில் இடம் தரப்பட்டிருந்தது.

எதியூரப்பா குடும்பத்தினருக்கு தரப்பட்ட அனைத்து நிலங்களின் உண்மையான மதிப்பு ரூ. 500 கோடிக்கு வருகிறது. ஆனால் மிக மிக குறைந்த விலைக்கு இவற்றை எதியூரப்பா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விற்றது அம்பலமானதால்தான் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நில மோசடியால், எதியூரப்பா பதவிக்கே ஆபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று வாங்கிய அனைத்து நிலத்தையும் எதியூரப்பா குடும்பத்தினர் கர்நாடக தொழில் பகுதி வளர்ச்சி வாரியத்திடம் ஒப்படைத்து விட்டனர்.

இதை இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் எதியூரப்பா. இதன் மூலம் இப்போதைக்கு அவரது பதவிக்கு வந்த ஆபத்து நீங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த சர்ச்சையை முன்வைத்து பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினால் எதியூரப்பாவுக்கு நிச்சயம் பெரும் சிக்கலாகி விடும். ஏற்கனவே 61 பாஜக எம்.எல்.ஏக்கள் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கட்சித் தலைவர் கத்காரிக்கு மனு அனுப்பியுள்ளதாகவும், இதன் பின்னணியில் ரெட்டி சகோதரர்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்ட கமிஷன் ஒன்றை அமைக்க கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நீதிபதியின் பெயர் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், மறுபக்கம் எதியூரப்பாவைக் காப்பாற்றுவதற்காக கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா டெல்லி விரைந்துள்ளார். அங்கு கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். எதியூரப்பாவும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை செல்கிறார்.

கருத்துகள் இல்லை: