வெள்ளி, 19 நவம்பர், 2010

புலிகள் அதிகளவில் சிவில் உடையுடனேயே போரிட்டனர் - சவேந்திர டி. சில்வா

புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றிகொண்ட நாங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் மக்களினால் முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டியுள்ளது. அத்துடன், இறுதி யுத்தத்தின்போது அதிகளவான புலிகள் சிவில் உடையிலேயே எம்முடன் போரிட்டனர். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி கூட சிவில் உடையில் போரிடுகையிலேயே கொல்லப்பட்டார் என்று அப்போதைய 58 ஆவது படையணியின் தளபதியும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தற்போதைய பிரதி வதிவிட பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி. சில்வா தெரிவித்தார்.

புலிகள் அவர்களுக்கு எதிரான மக்களை ரகசிய சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் எம்மிடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் பாடசாலைகளை கெரில்லா கூடங்களாகவும் ஆலயங்களை மோட்டார் தாக்குதல்களின் மையமாகவும் பயன்படுத்தினர். ஆனால் பாதுகாப்பு வலயங்களை நோக்கி எந்த நேரத்திலும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தவில்லை. அதாவது இறுதிக் கட்டத்தில் நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை அமர்வில் இரண்டாவது தடவையாக கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: