வியாழன், 18 நவம்பர், 2010

பாக்யராஜ் எழுதிய முதல் கதை.இன்றுவரைக்கும் படமாக்கப்பட வில்லை.


‘‘நான் சினிமாவுக்கு உதவி இயக்குநரா சேர வந்த காலத்துல எந்த துறைக்குப் போனாலும் முன் அனுபவம் இருக்கான்னு கேட்பாங்க. ஆனா கதை சொல்றதுக்கு மட்டும்தான் அதை கேட்கறதில்லை. கதை நல்லா இருந்தா போதும்.இதை தெரிஞ்சு வெச்சுகிட்டு ‘நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’னு ஒரு கதை எழுதினேன்.அதுதான் சினிமாவுக்காக நான் எழுதுன முதல் கதை.அந்தக் கதையோட கோயம்புத்தூர்லருந்து வந்துட்டேன்.

கதை ரெடியா இருந்தாலும் அதைக் கேட்க ஆள் வேணுமே. கோடம்பாக்கம் முழுக்க அலைஞ்சேன்.என் கதையைக் கேட்க ஆளில்லை.இதற்கிடையில எங்க வீட்ல வேற என்னைய தேடிக்கிட்டிருந்-தாங்க. நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பணம் வாங்கி அதுலதான் சாப்பிட்டேன்.அந்தப் பணம் தீர்ந்து சென்னையில எங்க ஊர்க்காரங்கள தெரிஞ்சுகிட்டு அவங்க கிட்ட சின்னச்சின்ன உதவி வாங்கி சென்னையில தங்கினேன். அப்புறம் தி நகர்ல ஒரு வீட்டோட கார் ஷெட்ல நிரந்தரமா தங்க, அந்த வீட்டு அம்மாகிட்ட அப்படி இப்படி பேசி சம்மதம் வாங்கினேன். அங்க ரிப்பேராகி நின்ன பழைய காருலயும், மழை வந்தா கார் ஷெட்டுலயும் படுத்து காலத்தை ஓட்டுனேன்.அந்த கார்ல பின் சீட் மட்டும் தான் உருப்படியா இருந்துச்சு. அதுல நைட்ல படுத்துப்பேன். ஒரு நாள் கையில காசு தீர்ந்து போச்சு. குளிர்காய்ச்சல் வேற. பசி ஒரு பக்கம்,காய்ச்சல் மறு பக்கமா அப்படியே சுருண்டு கார்ல படுத்திருந்தேன். இதைப் பார்த்து பயந்து போன அந்த வீட்டம்மா என் பையில இருந்த வீட்டு அட்ரஸை பார்த்துட்டு தந்தி அடிச்சி விட்டுட்டாங்க. இது எனக்குத் தெரியாது. காலையில ஒரு உருவம் என்னை எழுப்பிச்சு. கண் திறந்து பார்த்தா...எதிர்ல எங்க அம்மா.என் நிலைமையைப் பார்த்துட்டு கதறிட்டாங்க.அப்பவே என்னை ஊருக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க. அதுக்கப்புறம் வீட்ல சொல்லாம கிளம்பி வந்து திரும்பவும் சினிமாவுக்கு முயற்சி பண்ணினேன்.

எப்படியோ ஒரு கம்பெனியை பிடிச்சு இந்தக் கதையை ஓ.கே. பண்ணிட்டேன். கதாசிரியரா எனக்கு ரூம் போட்டுத் தந்தாங்க. எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. தேவதாஸ்ன்னு ஒரு மியூசிக் டைரக்டரை வைச்சு ஒரு பாட்டும் பதிவானது. பாடினது எஸ்.பி.பி., பாட்டு எழுதினது புலமைப்பித்தன். நான் எங்கேயோ பறந்தேன். சந்தோஷம் தாங்கலை. ஒரு நாள் ரூம் கதவை யாரோ தடதடன்னு தட்டினாங்க. எங்க டீம்ல இருந்த ஒருத்தர்தான்.‘சார் நாம மோசம் போய்ட்டோம் சார். புரடியூசரா நாம பார்த்த ஆளுங்க லாட்ஜுக்கு பணம் கொடுக்காமகூட ஓடிட்டாங்க சார்’னு பதறினார். எனக்கு மயக்கமே வந்திருச்சு. அப்பதான் புரடியூசரோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு அங்க வந்தாங்க. பரிதாபமா நின்னுருந்தாங்க. ‘சார் நாங்க கரூர் ஜமுக்காளம் வியாபாரிங்க. சினிமா ஆசையில கையில இருந்த பணத்தை வெச்சு இந்தாள நம்பி சென்னைக்கு வந்தோம். எங்க பணம் தீர்ந்ததும் ஓடிட்டான் சார்’ன்னு அவங்க ஒரு பக்கம் பதற, என்ன செய்யறதுன்னே தெரியல. லாட்ஜ் பில் எக்கச்சக்கமா இருந்தது. எல்லாரும் தனித்தனி ரூமை காலி பண்ணிட்டு ஒரே ரூமுக்கு வந்தோம். பணம் இல்லாமல் இனி லாட்ஜில தங்க முடியாத நிலை.அப்பதான் நான் ஒரு ஐடியா பண்ணி ஒவ்வொருத்தரையா வெளிய போக வெச்சு கடைசியில நான் வெளியேறி லாட்ஜ் பிரச்னையிலருந்து தப்பிச்சு வந்தோம். நான் மறுபடியும் ஊருக்குப் போயிட்டேன். வீட்ல செம டோஸ் விட்டாங்க. சரி, அசிஸ்டெண்ட் டைரக்டரா சேரலாம்னு முடிவு பண்ணி நண்பர்கள் சிபாரிசுல பாரதிராஜா சார்கிட்ட சேர்ந்தேன்.



அவர் ஒரு கம்பெனிக்கு - கதை சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த நேரத்துல அவசரமா நான் ஒரு கதையை ரெடி பண்ணிச் சொன்னேன். அந்தக் கதைதான் ‘நிறம் மாறாத பூக்கள்’. முதல் முறை 1000 ரூபா அட்வான்ஸ் வாங்கினேன். அப்படியே ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துல கதை வசனத்தில் உதவி. ‘புதியவார்ப்பு’களில் ஹீரோன்னு நம்ம ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு.சினிமாவுல ஜெயிச்சவுடனே செய்த முதல் வேலை, கடன் வைச்சுட்டு வந்த லாட்ஜுக்குப் போய் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டேன். என் பேர்ல பில் கூட இன்னும் அங்க இருக்கு’’ என்று சிரித்தார் பாக்யராஜ்.

கொசுறுச் செய்தி : பாக்யராஜ் எழுதிய முதல் கதை.இன்றுவரைக்கும் படமாக்கப்பட வில்லை.

கருத்துகள் இல்லை: