வெள்ளி, 19 நவம்பர், 2010

'கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, மாநிலம் முழுக்க யாகம், ஹோமம், பில்லி சூனியம்,

பி.ஜே.பி. என்றால் 'மத நம்பிக்கைக் கட்சி' என்பது தெரியும். ஆனால், 'இந்த

அளவுக்கு மூட நம்பிக்கையும் பயங்களும்கொண்ட தலைவர்களும்இருப்பார்களா?' என்று பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து வியக்க வைத்து வருகிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதன் உச்சமாக அமைந்துள்ளது, அவரது லேட்டஸ்ட் பில்லி சூனியப் பேச்சு!

நவம்பர் 8-ம் தேதி கர்நாடக மாநிலம் ரெய்ச் சூரில் நடந்த பி.ஜே.பி. பொதுக் கூட்டத்தில் எடி யூரப்பா, ''தென்னிந்தியாவில் முதன் முறையாக பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்து, நான் முதல் அமைச்சர் ஆனதைப் பொறுக்க முடியவில்லை எதிர்க் கட்சிகளுக்கு. அவர்கள் மாண்டியா, தும்கூர், கொள்ளேகால் பகுதிகளில் உள்ள மந்திரவாதிகளின் மூலம் கழுதையை, அதுவும் தலைச்சன் ஆண் கழுதையைப் பலியிட்டு, 'நான் ரத்தம் கக்கிச் சாக வேண்டும், கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்' என்பதற்காகத் திட்டமிட்டு யாகம் நடத்தி... பில்லி சூனியம் வைத்து உள்ளனர்.'' என்று பயம் கலந்த கோபத்தோடு கொந்தளித்தார்!



இதுபற்றி கர்நாடக மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியபோது, ''கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, மாநிலம் முழுக்க யாகம், ஹோமம், பில்லி சூனியம், மாந்திரீக தாந்திரீக செய்வினைகள் போன்ற ரவுசான வார்த்தைகள் கன்னட மீடியாக்களில் தொடர்ந்து அடிபடுகின்றன. 2008-ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு முதல் அமைச்சர் பதவி தராமல் தேவகவுடா ஏமாற்றியபோதே, 'நான் ரத்தம் கக்கிச் சாவதற்காக 12 மந்திரவாதிகளின் மூலம் பில்லி சூனியம் செய் துள்ளார் தேவகவுடா' என மீடியாக்களிடம் குமுறினார் எடியூரப்பா. அதை விடுங்கள்... தான் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடி வதற்குள், 22 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

ஆட்சிக்கு எப்போது எல்லாம் பிரச்னைகள் வருகின்றனவோ, அப்போது எல்லாம் கோயில் தரிசனம், ஜோசியர் தரிசனம், யாகம், ஹோமம், பரிகாரப் பூஜைகள் என மூட நம்பிக்கைகளில் மூழ்கி நீச்சலே அடிக்கிறார் எங்கள் முதல்வர்.

கடந்த அக்டோபர் 5-ம் தேதியில் இருந்து தொடங்கி அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த அக்டோபர் 24-ம் தேதிக்குள் எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 35 கோயில்களில் தரிசனம் செய்தார் எடியூரப்பா. அதோடு, 'சங்கடஹரா யாகம்' என்ற ஒன்றைத் தன் எதிரிகளைப் பணியவைக்கவும், 'சத்ரு ஹோமம்' என்ற ஒன்றை அவர்களை அழிப்பதற்காகவும் நடத்தினார். மேலும், தன் ஆட்சியையும், தன்னையும் காப்பாற்றிக்கொள்ள 'சண்டிகா ஹோமம்' நடத்தினார். இந்தக் கூத்துகளை எல்லாம் தாண்டி, கேரள நம்பூதிரிகளிடம் தனது ஜாதகத்தைத் தந்து கணித்து, அவர்கள் சொற்படி ஆடி வருகிறார். பல கோயில்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடையும் வழங்கி வருகிறார். அப்படி வழங்கியதுதான், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலுக்கு ` 1 கோடி. அதன் மூலம் தங்க ரத ஓடுபாதை, மார்க்கண்டேய மண்டபம், பசு மடம், தங்க ரத மண்டபம் ஆகியவை சீரமைக்கப்படுமாம். 'பெங்களூருவில் சோழர் கட்டிய சோமேஸ்வரர் ஆலயம், தலைநகரின் தலைமாட்டில் இருக்கிறது. அது புனரமைக்கப்படாமல் கிடப்பதால்தான் ஆட்சிக்கே ஆபத்து' என்று சில ஜோசியர்கள் கூறியதால், அந்தக் கோயிலை ` 1 கோடி செலவில் புனரமைத்து, அதன் தாமரைக் குளத்தில் விரைவில் ஒரு மெகா யாகமும் நடத்த இருக்கிறார் எடியூரப்பா!'' என்று அடுக்கி முடித்தனர்.

எடியூரப்பா, எதிர்க் கட்சிகளின் பில்லி சூனிய ஏவல்களை(!) எதிர்கொள்வதற்காக இப்படி தன்னால் முடிந்த காரியங்களை துரிதமாகச் செய்துகொண்டு இருக்க... மதசார்பற்ற ஜனதா தள முன்னாள் முதல்வர் குமாரசாமியோ, பிளேட்டை மாற்றிப்போட்டுப் பாய்கி றார்.

''யாகம், ஹோமம், பில்லி சூனியம், செய்வினை... இவை எல்லாவற்றையும் எங்களை வீழ்த்துவதற்காக தன் மகன் ராகவேந்திரா எம்.பி. மூலமாக எடியூரப்பாதான் செய்து வருகிறார். அவர் கூறியதுபோல, கழுதையைப் பலியிட்டு எதிர்க் கட்சிகள் யாகம் நடத்தி இருந்தால், கால்நடை வதைச் சட்டத்தின்கீழ் இந்நேரம் எங்களை கம்பி எண்ணவைத்து இருப்பார். கடந்த மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 'தான் ஜெயிக்க வேண்டும்' என்பதற்காக அதே தினமான கடந்த 14-ம் தேதி நிறைந்த அமாவாசை நள்ளிரவில் விதான சவுதாவின் மேற்கு நுழைவாயில் கேட்டில் மந்திரவாதிகள் மூலம் இவர் என்ன செய்தார் என்பது எங்களுக்குத் தெரியும்!

7 கோழித் தலைகள், ஆணி அடித்த எலுமிச்சை, மஞ்சள், குங்குமம், அரிசி என செய்வினை செய்து இருந்தனர். விதான சவுதாவின் மற்ற மூன்று நுழைவாயில்களை மூடிவிட்டு, மேற்கு நுழைவாயிலைத் திறந்துவிட்டதுகூட மந்திரவாதிகளின் சொற்படிதான். அது மட்டும் இல்லாமல், நள்ளிரவு வேளைகளில் மஞ்சள் தண்ணீர், 15 முட்டை, செப்புக் குடம் என மந்திர தந்திர வேலைகளில் இடையறாமல் ஈடுபட்டு வருகிறார் எடியூரப்பா. இப்படி எல்லாவற்றையும் தானே செய்துவிட்டு, எதிர்க் கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதே அவருக்கு வேலை. கூடிய விரைவில் எடியூரப்பாவின் அத்தனை மந்திர தந்திர வேலைகளையும் கையும் களவுமாகக் கண்டுபிடித்து, மக்களுக்குத் தெரியப்படுத்தி, கர்நாடகாவைவிட்டே பி.ஜே.பி-யை விரட்டு வோம்!'' என சூளுரைக்கிறார் குமாரசாமி.

''பில்லி - சூனியம் - வசியம் எல்லாம் உண்மையா இருந்தா, எதுக்காக தேர்தல் நேரத்தில் கட்டுக்கட்டாப் பணத்தை வாரி இறைக்கணும். வசிய மந்திரம் பண்ணியே ஜனங்க ஓட்டை எல்லாம் வாங்க வேண்டியதுதானே?'' என்று கேட்டு தலையில் அடித்துக்கொள்கிறார் இந்த ஏடாகூட நம்பிக்கைகளில் சிக்காத கர்நாடக மந்திரி ஒருவர்.

கருத்துகள் இல்லை: