திங்கள், 12 ஜூலை, 2010

கொலையுண்ட மனைவி, ஆவியாக வந்து மிரட்டல்: கணவன் அலறல்

போலீசில் சரணடைந்த நபர், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்
கருமத்தம்பட்டி : "எனது முதல்மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன் கோவில் கிணற் றில் தள்ளி கொலை செய்துவிட் டேன்; அவள் இப்போது எனது கனவில் வந்து மிரட்டுகிறாள்' எனக் கூறி, கருமத்தம்பட்டி போலீசில் சரணடைந்த நபர், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கோவில் கிணறு மூடப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால், பிரேதத்தை எவ்வாறு மீட்டு புலன்விசாரணை நடத்துவது, எனத்தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர், போலீசார்.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த சோலை என்பவரது மகன் அழகர்சாமி (35). கருமத்தம் பட்டி அடுத்த பொன்னாண்டாம்பாளையம் தனியார் மில்லில் முன்பு பணியாற்றி வந்தார். அங்கு, உடன் பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் அழகர்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறியாத அழகர்சாமியின் பெற்றோர், சிவகாசியைச் சேர்ந்த அமுதாவை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின் அமுதா, கணவர் வேலை செய்யும் அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, தனது கணவருக்கு, மற்றொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்து கண்டித்தார். மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்த அழகர்சாமி, கடந்த 2000, ஏப்., 24ல் தனது மனைவி அமுதாவை சென்னியாண்டவர் கோவிலுக்கு அழைத்துச் சென் றார். அங்கு சாமி கும்பிட்ட பின், கோவிலின் வெளிப்புறம் இருந்த 150 அடி ஆழ கிணற்றை அமுதாவுக்கு காட்டிய அழகர்சாமி, "இந்த கிணற்றுக் குள் அதிசய லிங்கம் உள்ளது. அதைக்கும்பிட்டால் மிகவும் நல்லது' என கூறியுள்ளார்.

இதை நம்பிய அமுதா, கிணற்றுக் குள் எட்டிப்பார்த்த போது, அவர் கால்களைப் பிடித்து தூக்கிய அழகர்சாமி கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தார். பின் வீட்டுக்கு வந்த அவர், "அமுதாவைக் காணவில்லை' என, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதன்படியே உறவினர்களையும் நம்ப வைத்தார். அதன் பின் அழகர்சாமி, தனது காதலியிடம், அமுதாவைக் கொலை செய் ததை கூறி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள் ளார். அதிர்ச்சியடைந்த காதலி "கட்டிய மனைவியைக் கொலை செய்தவனை  நம்பி எப்படி வாழ்க்கை நடத்துவேன்' எனக்கூறி, அழகர்சாமியை வெறுத் தார். இதனால் விரக்தியடைந்த அழகர்சாமி, வேலை செய்யும் மில்லில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றார்; மில் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து, விரட்டிவிட்டது. சிறிது நாட்களுக்கு பின் தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார். அதன் பின், முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு விருதுநகர், செவல்பட்டியில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கனகராஜன்(4), செல்வஈஸ்வரி (8) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனது பெற்றோரை சந்தித்த அழகர்சாமி, "நான் கிணற்றில் தள்ளி கொலை செய்த முதல் மனைவி அமுதா ஆவியாக எனது கனவில் வந்து பயமுறுத்துகிறாள். கொலை செய்ததை ஒப்புக் கொண்டு ஒழுக்கமாக போலீசில் சரணடைந்துவிடு என மிரட்டுகிறாள்' என்று தெரிவித்துள்ளார். பயந்துபோன பெற்றோர், "அவள் கூறியபடி செய்துவிடு' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீசில் சரணடைந்த அழகர்சாமி, அமுதாவை கொலை செய்த விஷயத்தை வாக்குமூலமாக அளித்தார். திடுக்கிட்ட போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்
படுத்தியுள்ளனர்.


அமுதாவை 1999ம் ஆண்டில் திருமணம் செய்த அழகர்சாமி, 2000ம் ஆண்டில் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். அமுதாவை தள்ளி கொலை செய்த கோவில் கிணறு, கடந்த 2005ல் வாஸ்து சரியில்லை என்று கூறி மூடப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் திருப்பணிகள் செய்து கிணறு இருந்த இடமே தெரியாத வகையில் மட்டம் செய்யப் பட்டுள்ளது.

அழகர்சாமி தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், கொலை செய்யப்பட்ட அமுதாவின் உடலை எப்படி கண்டுபிடித்து மீட்பது, பிரேத பரிசோதனை நடத்தி கொலையை எவ்வாறு உறுதிப்படுத்துவது, வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆதாரங்களை எப்படி சமர்ப்பித்து எனத்தெரியாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர். இக்கொலை சம்பவம், போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: