மின்னம்பலம்: மும்பை, ரயில் நடை பால விபத்தில் உயிரிழந்தவர்களின் நெற்றியில், மருத்துவமனை நிர்வாகம் வரிசை எண்ணை எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. மும்பை எல்பின்ஸ்டன் சாலை ரயில் நிலையத்தில் இருந்து, நடை பாலம் மூலம் அருகில் உள்ள பரேல் ரயில் நிலையத்துக்குச் செல்ல முடியும் என்பதால் மக்கள் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினர். இந்த நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு ரயில் பாதைகளில் ரயில்கள் வந்து சேர்ந்தன. மேலும், கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, நடை பாலத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.
38க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி தங்கள் இரங்கலைத் தெரிவித்திருந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிங் எட்வர்டு மெமோரியல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இறந்தவர்களின் நெற்றியில் அடையாளத்துக்காக வரிசை எண்களை எழுதிய மருத்துவமனை நிர்வாகிகள், அவர்களைப் புகைப்படம் எடுத்து, பெயருடன் வளாகத்தில் தகவல் பலகை வைத்துள்ளனர். இந்தச் சம்பவம், மும்பை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களை, மருத்துவமனை நிர்வாகம் அவமானப்படுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் மும்பை மக்கள் கருத்துகளைப் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்ட பலகை உடனடியாக அகற்றப்பட்டது.
நேற்று (செப்டம்பர் 30) பிரேத பரிசோதனை அறைக்குள் சென்ற சிவசேனா அமைப்பினர், பலியானவர்களின் நெற்றியில் எண்கள் எழுதியதைக் கண்டித்து அங்கு இருந்த மருத்துவர் ஹரிஷ் பதாக்கைத் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர் ஹரிஷ் பதாக், “விபத்து, இயற்கை பேரிடர் உள்ளிட்ட நேரங்களில் பலர் உயிரிழந்தால், அவர்களை அடையாளம் காண்பதற்காக இறந்தவர்களின் நெற்றியில் வரிசை எண் எழுதுவது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. மக்கள் இதைத் தவறாக கருதுகின்றனர். இறந்தவர்களின் உடலைப் புகைப்படம் எடுத்து எண்ணால் எழுதிய பிறகு, அதனை லேப்-டாப் மூலம் உறவினர்களுக்குக் காட்டினோம். அதன் பின்னர் தகவல் பலகை வைத்தோம்” எனத் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக