ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

திராவிடம் தான் உண்மையான தமிழ் தேசியம் - தொல். திருமாவளவன் கருத்து.


Ravishankar Ayyakkannu : இந்து-இந்தி-இந்தியா என்ற அடக்குமுறையை முன்வைக்கும் இந்திய தேசியத்தை எதிர்ப்பது தான் தனி தேசிய இனமான தமிழர்கள் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியலாக இருக்க முடியும். தமிழகத்தை சாதியால் தமிழரான ஒருவர் தான் ஆள வேண்டும் என்பதோ தமிழ்நாடு தனி நாடு ஆனால் அதில் சாதியால் தமிழர்களானவர்களே ஆட்சி அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதோ தமிழ் தேசியம் ஆகாது. தமிழ்நாட்டு நிலப்பரப்பில் வாழும் அனைத்துக் குடிகளின் இறையாண்மையையும் தன்னாட்சியையும் பாதுகாக்கும் ஒன்றாகவே முதிர்ந்த, உண்மையான தமிழ் தேசியம் இருக்க முடியும்.
கருநாடகா, கேரளா, ஆந்திராவுடன் நமக்கு இருப்பது நிலம், நீர் பங்கீடு மற்றும் இதர சிக்கல்களே. இதே சிக்கல் இந்த மாநிலங்களில் தமிழ் பேசுவோர் இருந்தாலும் வரும். ஒரே ஊரில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையே சொத்துப் பங்கீட்டுப் பிரச்சினை வருவது இல்லையா? தெலங்கானாவுக்கும் ஆந்திராவுக்கும் வராத சிக்கலா? அந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரே மொழி பேசுவோர் தானே இருக்கிறார்கள்?
இச்சிக்கல்கள் இலங்கையில் உள்ளது போல் சிங்களர், தமிழர் என்று இனத்தால், மொழியால் வரும் பாகுபாட்டுச் சிக்கல் இல்லை.
பிறகு ஏன் மொழியின் அடிப்படையில் அரசியல் வெறியைத் தூண்டுகிறார்கள்? ஏன் என்றால் கன்னட தேசியமோ மலையாள தேசியமோ தெலுங்கு தேசியமோ தமிழ் தேசியத்துக்கு எதிரானவை அன்று. மாறாக, இந்திய தேசியத்துக்கு எதிரான முன்னெடுப்பில் இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் நம் கூட்டாளிகளாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். இந்தத் தேசிய இனங்கள் ஒன்று கூடி வலு பெறுவதைத் தடுக்கவே இந்திய தேசியம் போலி தமிழ் தேசியச் சித்தாந்தத்தை முன்வைத்து இளைஞர்களைக் குழப்புகிறது. நட்புடன் இருக்க வேண்டிய நம் அண்டை மாநில உறவுகளை மொழியை முன்வைத்து தனிமைப்படுத்துகிறது. பகையை வளர்க்கிறது. ஒரே மொழி பேசும் பெரிய மாநிலங்களைத் துண்டு துண்டாக்குகிறது. தமிழ் பேசும் அனைவரும் ஆதி இந்துக்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்துத்துவத்தைத் திணித்து ஒரு மொழி பேசும் தேசிய இன மக்களை மதத்தாலும் பிறகு சாதியாலும் துண்டாடுகிறது. இந்து-இந்தி-இந்தியா என்பதற்கு நேர் எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கும் திராவிட அரசியலை வில்லனாக்கி மற்றவர்களை வெற்றி பெறவைக்க துடிக்கிறது.

கருத்துகள் இல்லை: