kaattaaru.com : தொடக்கத்திலேயே ஜாதிமறுப்பு – சுயமரியாதைத்
திருமணம்,
அதை நடத்தி வைப்பவர்கள் பெண்கள். அதுவும் ப்ளூ ஜுன்ஸ், கருப்பு டிசர்ட் அணிந்தவர்கள். பெரியார், அம்பேத்கர் படங்கள், மோடியின் ‘சுவச் பாரத்’ விளம்பரப்பின்னணியில் சாக்கடை அள்ளும் தொழிலாளர்களின் இழிநிலை என அடுத்தடுத்த காட்சிகளில் ஆர்வத்தைக் கூட்டிவிடுகிறார்கள். அப்போது தொடங்கும் ஆர்வம் இறுதிவரை குறையாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதை நடத்தி வைப்பவர்கள் பெண்கள். அதுவும் ப்ளூ ஜுன்ஸ், கருப்பு டிசர்ட் அணிந்தவர்கள். பெரியார், அம்பேத்கர் படங்கள், மோடியின் ‘சுவச் பாரத்’ விளம்பரப்பின்னணியில் சாக்கடை அள்ளும் தொழிலாளர்களின் இழிநிலை என அடுத்தடுத்த காட்சிகளில் ஆர்வத்தைக் கூட்டிவிடுகிறார்கள். அப்போது தொடங்கும் ஆர்வம் இறுதிவரை குறையாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு ஜோதிகா அவர்களுடன்
இயக்குநர் பிரம்மா பேச்சுவார்த்தை நடத்தும் போது, இரண்டு கதைகளைக்
கூறியுள்ளார். இரண்டிலிருந்து இந்தக் கதையை ஜோதிகாவே தேர்ந்தெடுத்
துள்ளார். அதற்காக முதலில் அவருக்கு நன்றி கூறவேண்டும். நடிகர்
சிவக்குமாரின் குடும்பத்தினர் இதுவரை பேய்களையும், ஜாதி ஆதிக்க
வெறியர்களையும் முதன்மைப் பாத்திரங்களாகக் காட்டி வந்தனர். அந்தக்
குற்றங்களைச் சரிசெய்யும் விதமாக முதன்மைப் பாத்திரத்தை ஒரு பெரியாரிஸ்ட்
போல வடிவமைத்துள்ளனர்.
1978 ம் ஆண்டு, மதுரையில் கிறிஸ்தவக்
கல்லூரி ஒன்றில் பி.யுசி படித்த மாணவிகளின் வாழ்க்கைதான் இத்திரைப்படம்.
கலை இயக்குநர் மிகவும் கவனமாகப் பணியாற்றியுள்ளார். 1978 ம் 2017ம் மாறி
மாறி வந்து போகிறது. ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக
கல்லூரி விடுதியின் காம்பவுண்ட் சுவற்றை ஏறிக்குதித்து, காதலில் விழுவது –
ப்ரின்ஸ்பலிடம் மாட்டிக்கொண்டு தண்டனை பெறுவது – திருமணமுறையை வெறுப்பது –
தோழியின் திருமணத்தைத் தடுக்க திட்டம் போடுவது – பி.யு.சி யைத் தாண்ட
முடியாமல் திருமண முறைக்குள் சிக்கிச் சீரழியும் பெண்களின் நிலை என அந்தக்
காலத்து மகளிர் கல்லூரிகளில் படித்த அம்மாக்களையும், அக்காக்களையும்
கண்முன் நிறுத்துகின்றார் இயக்குநர்.
இந்தியா முழுவதும் சமையலறைகள் இன்னும்
சேரிகளைப் போலவே உள்ளன. சேரிகளில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள்
வாழவேண்டும் என்ற மனுதர்மச்சட்டம் இன்றும் அழியாமல் இருக்கிறது. அந்தச்
சேரி வாழ்வைவிடக் கொடுமையானது இந்தச் சமையலறை வாழ்வு. அக்ரஹாரம் தொடங்கி,
பிற்படுத்தப்பட்டவர்களின் ஊர்களிலும், தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளிலும்,
பெரும் பணக்காரன், ஏழை என அனைத்து வர்க்கங்களின் வீடுகளிலும் ‘சமையலறை’
என்பது பெண்களுக்கான இடமாகவே உள்ளன. சமையல், வீட்டைப்பராமரிப்பது,
குழந்தைகளைப் பராமரிப்பது, பெரியவர்களைப் பராமரிப்பது என அனைத்தும்
பெண்ணுக்குரிய அத்தியாவசியமான கடமையாக இருக்கிறது.
ஜாதி அடிப்படையிலான தீண்டாமைகளை ‘இரட்டைக்
குவளைகள்’, ‘இரட்டை இருக்கைகள்’ என்பவை மூலம் நாம் காண்கிறோம். அவற்றுக்கு
எதிராக இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டங்களை நடத்தினோம்.
நடத்துகிறோம். நடத்துவோம். இரட்டை டம்ளர்கள் வைத்திருந்த கடைகளை அடித்து
நொறுக்கினோம். அதேபோல, ஊர் – சேரி என அனைத்து இடங்களிலும் உள்ள பாலினத்
தீண்டாமையின் அடையாளமான ‘சமையலறை’களை இதுவரை விவாதிற்குள்ளாக்கி
இருக்கிறோமா? பாலினப் பாகுபாட்டின் அசைக்க முடியாத அடையாளமாக உள்ள
சமையலறைகளை உடைத்தெறிய வேண்டும் என்பவை போன்ற போராட்டங்களை
அறிவித்திருக்கிறோமா?
காட்டாறு ஏடு ஒரு சிறு குழுவால்
நடத்தப்படும் ஏடு. ஒரு அமைப்பு என இயங்கும் அளவுக்கு இதில் தோழர்கள்
இல்லை. ஆனால், காட்டாறு ‘சமையல் மறுப்புப் போராட்டத்தை’ அறிவித்தது.
அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்
அப்படி அறிவிக்க வில்லை. சமையலறைகளிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்
என்பது சமத்துவத்தின் முதல் படி. அந்தச் ‘சமையலறைப் பாகுபாடு’ என்ற
கொடுமை, ‘கொள்கை அளவில்’ என்ற நிலையில் இருந்து, செயல் தளத்திற்கு
வரவேண்டும். அதுபற்றி ஒரு விவாதமாவது வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த
அறிவிப்பு வெளியிடப்பட்டது. சமையல் மறுப்புப் போராட்டத்திற்கு முன்
நிபந்தனையாக, 20 மேற்பட்ட கோரிக்கைகளைக் காட்டாறு வெளியிட்டது.
தோழர் பெரியாரின் காலத்திற்குப் பிறகு,
சில பெரியார் தொண்டர்களும், காட்டாறு இதழும் எழுத்து வடிலில் தொடங்கிய
அந்தக் கருத்துக்கள், நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத இயக்குநர் பிரம்மா
அவர்களால் காட்சி வடிவில் ஒரு பெரும் விவாதமாகத் தொடங்கி
வைக்கப்பட்டுள்ளது.
மகளிர் மட்டும் நாயகி ஜோதிகா, சமையலறைத்
தீண்டாமைக்கு எதிராகவும், ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்ற பாலின வன்கொடுமைக்கு
எதிராகவும் டாக்குமெண்ட்ரி எடுக்கிறார். அப்படித்தான் படம் தொடங்குகிறது.
சமையலை மறுப்பது, ‘ஹவுஸ் ஒய்ஃப்’ முறையை மறுப்பது, திருமண முறையை மறுப்பது,
சுயமாக முடிவெடுப்பது, சொந்தக் காலில் நிற்பது, பிள்ளைகள் பெறுவதை
மறுப்பது, பெண்களுக்கு என தனியாக வாகனம் வடிவமைப்பதை எதிர்ப்பது என
பலவற்றைக் காட்டாறில் எழுதினோம். அவை அனைத்துமே இப்படத்தில்
விவாதிக்கப்படுகிறது.
பெண்ணின் முதல் காதல், பெண்ணின் கோபம்,
பெண்ணின் அடக்கப்பட்ட மன உணர்வுகள் என அனைத்தையும் பேசுகிறது. 500 சி.சி.
ராயல் என்ஃபீல்ட் பைக்கை ஜோதிகா ஒட்டும்போதும், பானுப்பிரியா காரை வேகமாக
ஓட்டும் போதும் திரையரங்கில் பெண்கள் எழுப்பும் விசில் ஒலியை ஆண்கள்
கவனத்தில் கொண்டு திருந்தவேண்டும்.
நள்ளிரவு 12 மணிக்கு தங்க நகைகளை அணிந்து
கொண்டு தனியாக ஒரு பெண் நடந்து செல்வது பெண் சுதந்திரம் அல்ல; நமது
வாழ்க்கையை நாமே முடிவு செய்வதும், மனதுக்குப் பிடித்தவனுடன் மட்டுமே
வாழ்வதுமே பெண் சுதந்திரம் என்கிறார் ஜோதிகா.
கொடுமைக்காரக் கணவன் என்றால், தினமும்
குடித்து விட்டு அடிப்பது, மனைவியைச் சந்தேகப்படுவது, சிகரெட்டால் சூடு
வைப்பது போன்ற காரியங்களைச் செய்பவர்கள் மட்டுமே என்று அர்த்தம் இல்லை.
மனைவியை வீடு என்ற வலைக்குள், திருமணம் என்ற சிறைக்குள் அடைத்துள்ளவர்கள்
அனைவருமே கொடுமைக்காரர்கள் தான் என்று முகத்தில் அறையப்படுகிறது.
பூ, புடவை, நகைகள் வாங்கிக்கொடுத்து, அது
தான் மகிழ்ச்சி – அவற்றை அணிந்து கொண்டு வாழ்வது தான் உயர்ந்த வாழ்க்கை
என்ற சிந்தனையைப் பெண்களிடம் திணித்து அதை இன்றவிலும்
நடைமுறைப்படுத்தியுள்ளது மனுசாஸ்திரம். அந்த மனுவின் சட்டங்களைப்
பானுப்பிரியாவின் கேரக்டர் மூலம் அடித்து நொறுக்குகிறார் இயக்குநர்
பிரம்மா. “நான் இந்த வீட்டின் தலைமை வேலைக்காரி” என்று பானுப்பிரியா பேசும்
ஒரு சில வசனங்களில் அவர் வெளிப்படும் முகபாவங்கள், நிச்சயமாக ஆறறிவுள்ள
ஆணைக் குற்றஉணர்வுக்கு உள்ளாக்கும். ‘திருமணமுறை’ என்பது ‘பெண்களுக்குரிய
மேஜிக்கல் ஜெயில்’ என்று காட்சி மொழியால் விளக்கியுள்ளனர்.
பெண்கள், தாம் விரும்பிய நேரத்தில், ஒரு
டீக்கடைக்குச் சென்று ஒரு சிங்கிள் டீயைக் கூடக் குடித்துவிட்டு வரமுடியாத
கேவலமான சமுதாய நிலையை நாம் அனைவருமே மிக எளிதாகக் கடந்து
போய்க்கொண்டிருக்கிறோம். இதில் பெண்கள் வெளியூருக்குச் சுற்றுலா
செல்வதெல்லாம் கனவில்கூட நடக்காது. ஆண்களால் நினைத்தால், நினைத்த உடனே ஒரு
பிக்னிக்கைத் திட்டமிட்டுப் போய்வர முடிகிறது. அப்படிப் போவது மிகவும்
நல்லது தான். ஆனால், அப்படி அதிரடி பிக்னிக் போகும் ஆண்களின் வீடுகளிலேயே
அவர்களது துணைவியோ, தாயோ, தங்கையோ அப்படிச் சென்றுவர முடியாது.
வெகு மக்களாக உள்ள, பக்திமான்களின்
வீடுகளில் கூட சமயபுரம், மேல்மருவத்தூர், பழனி, திருப்பதி என பக்தியின்
பேரிலாவது வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால்
இயக்கங்களில் பணியாற்றும் சமுதாயப் போராளிகளின் வீடுகளில் சிக்கிய
பெண்களின் நிலை மிக மிகக் கொடுமையானது. அப்படி, திருமணச் சிறைக்குள்
சிக்கிய மூன்று தோழிகள் ஒரு மூன்று நாள் தனியாக – ஆண் துணை இல்லாமல்
சுற்றுலா செல்கிறார்கள். அது தான் இந்தப் படத்தின் ஹைலைட். இதைத்தான்
காட்டாறு குழு ‘விடுதலைவெளி’ என்ற பெயரில் மகளிர் சுற்றுலாக்களாகத்
திட்டமிட்டு நடத்தி வருகிறது.
பெண்ணியப் படமென்றால், அதை மட்டுமே
பேசாமல், அதோடு நெருக்கமான தொடர்புடைய ஜாதி ஆணவக் கொலைகளையும்
பேசுகிறது. உடுமலை சங்கரும், பெரியாரின் விடுதலைப் பெண் கெளசல்யாவும்
இப்படத்தில் வாழ்கிறார்கள்.
அனைத்து வகையான ஆணாதிக்கங்களுக்கும் காரணம்
ஆண்கள் மட்டுமே என்று மேலோட்டமாகப் பேசாமல், இவற்றுக்கு அடிப்படைக்
காரணம் இந்த ‘சமுதாய அமைப்பு முறை’ என்று சிஸ்டத்தைக்
குற்றவாளியாக்கியுள்ளனர். அதுதான் இந்தப் படத்தின் தனிச்சிறப்பு.
இராணுவ முகாமில் ஒரு பெண் அதிகாரி,
பானுப்பிரியாவின் மகனிடம் பேசும்போது, குழந்தை வளர்ப்பு என்பது
பெண்ணுக்குரியது என்ற தொனியில் ஒரு வசனம் வரும். அதைத்
தவிர்த்திருக்கலாம். இறுதிக் காட்சியில், அக்டோபர் 30 ல் மூன்று
தோழிகளுக்கும், பட்டுப்புடவைகளைப் பரிசளிப்பார் ஜோதிகா. இந்தப் பட்டு,
நகை, நட்டுக்கள், அலங்காரம் இவையெல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் அடையாளங்கள்
தான். அதற்குப் பதிலாக, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா மூவருக்கும் ஜுன்ஸ்,
டிசர்ட்டுகளைப் பரிசளித்திருக்கலாம். இன்னும் கெத்தாகவும்,
கதைக்களத்திற்குப் பொருத்தமாகவும் இருந்திருக்கும். பெண் விடுதலைக்குத்
தடையாக உள்ள இந்து மதத்தின் வேதங்களும், சாஸ்திரங்களும் வெளிப்படையாக,
நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்ற முக்கியமான குறையைத் தவிர,
‘மகளிர் மட்டும்’ பெரியாரின் விடுதலைப் பெண்ணியத்தைப் பேசுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களும், கல்லூரி
மாணவிகளும், இளம் வயதுப் பெண்களும் அவசியம் இப்படத்தைப் பாருங்கள். அதை விட
முக்கியம். உங்களுடன் ஏதாவது ஒரு ஆணை அவசியம் இழுத்துச் சென்று
தியேட்டரில் உட்கார வையுங்கள். கணவன், காதலன், இணை, துணை, க்ளாஸ்மெட்,
அண்ணன், தம்பி, மகன், அப்பா, தாத்தா என யாராவது ஒரு ஆணை அவசியம் அழைத்துச்
செல்லுங்கள். யாரும் திருந்தாவிட்டாலும், தாம் என்ன தவறு செய்கிறோம்
என்பதாவது அவர்களுக்கு விளங்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக