திங்கள், 25 செப்டம்பர், 2017

90 மாணவிகளை.... ஆரோக்கியசாமி தலைமை ஆசிரயர் 55 ஆண்டுகள் சிறை!

நன்னெறி போதிக்க வேண்டிய தலைமை ஆசிரியர், காமுகனாக மாறி சுமார் 90 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்த மிருகத்துக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது, மதுரை மாவட்டச் சிறப்பு நீதிமன்றம்.
மதுரை மாவட்டம், பொதும்பு என்ற கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 2011-ம் ஆண்டில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி. அந்தப் பள்ளி மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். தலைமை ஆசிரியர் என்பதால், அந்த மாணவிகள் பயத்தில் வெளியே சொல்லவில்லை. தைரியத்துடன் எதிர்ப்புத் தெரிவித்த, உடன்படாத மாணவிகளை அடிப்பது, அசிங்கப்படுத்துவது என டார்ச்சர் செய்துள்ளார் ஆரோக்கியசாமி.

தலைமை ஆசிரியரின் பாலியல் வக்கிரம் தொடரவே, தங்கள் பெற்றோர்களிடம் அந்தக் குழந்தைகள் சொல்ல ஆரம்பித்தனர். அதைக்கேட்டு பெற்றோர் கொந்தளித்து விட்டனர். காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில்தான், ஊர் மக்களுடன் சேர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் மதுரைக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டு, கைதானார்.
இதனையடுத்து, கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் பதிவானது. ஆரோக்கியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்தனர். அந்தக் கேடுகெட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சில ஆசிரியர் சங்கங்கள் வேலைசெய்தன.
மாதர் சங்கத்தின் அப்போதைய மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய் மற்றும் பெற்றோர் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். நிர்மலாராணி, பரிமளாதேவி, ராஜ்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிபதி, “மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்தவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
தற்போது வழக்கு விசாரணை முடிந்து, குற்றவாளிக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைக் கேட்டு, நீதிமன்றத்தில் குழுமியிருந்த பொதும்பு மக்களுடன் சேர்ந்து மாதர் சங்கத்தினரும் உணர்ச்சிவயப்பட்டுக் கண்ணீர் சிந்தினர்.
மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் முத்துராணி ஆகியோர், ‘‘குழந்தைகளைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தும் வழக்கில், இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனையை மதுரை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது ஒரு முன்னுதாரணத் தீர்ப்பு. மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் வக்கிரம் பிடித்த அந்தத் தலைமை ஆசிரியரைக் காப்பாற்ற முயன்றது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு, இந்த வழக்கு ஓர் உதாரணம். இதை அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
*
- செ.சல்மான், ஜெ.அன்பரசன், ஈ.ஜெ.நந்தகுமார், கா.முரளி.
ஜூனியர் விகடன்.

கருத்துகள் இல்லை: