eathuvarai.net உங்ககிட்ட ரேசன் கார்டு இருக்கா? இல்லை. ஓட்டுநர் உரிமம் இருக்கா? இல்ல. வாக்காளர் அட்டை? இல்ல. ஆதர் அட்டை இருக்கா? இல்லை. அப்ப உங்கள் கிட்ட என்னதான் சார் இருக்கு? நீங்க கேட்ட எதுவுமில்லை.
வேற்றுக்கிரக வாசிபோல் அந்த பெண் என்னைப் பார்த்தாள்.என்னிடமிருந்த எனது பதிவுப் பேப்பரை காண்பித்தேன். அதைப்பார்த்த அந்தப் பெண் , உங்க அக்காள் தான் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாம் வச்சிருக்கிறாங்க. நீங்களும் எடுக்க வேண்டியது தானே. நான் இந்திய குடிமகனில்லை. அதனால ரேசகர்கார்டு எடுத்தால் சட்டப்படி குற்றமாகும்.
அப்ப எப்புடி உங்க அக்காள் ரேசன்கார்டு எல்லாம் எடுத்தாங்க?.வார்த்தை இல்லாத மௌனத்தை புரிந்து கொண்ட அப்பெண் சார் உங்க பேப்பர் எதுவும் செல்லுபடியாகாது, சாரி சார்.
மேலே குறிப்பிட்டது சிம்கார்டு வாங்க சென்ற கடையில் இருந்த பெண்ணுடைய சிறிய உரையாடல் இது. பத்தினாதனுக்கு நடந்த விசயமில்லை. தமிழ்நாட்டில் வாழும் அகதிக்கு தினம் தினம் ஏதோ ஒரு வகையில் நடக்கும் விசயம். இந்த நிலை ஓராண்டு, இரண்டாண்டு நடப்பதல்ல. கால்நூற்றாண்டை கடந்து வாழும் அகதிகள் அத்தனை பேருடைய நிலையும் இதுதான்.
இன்றைய நவீன உலகில் ஒரு சிம்கார்டு கூட வாங்க முடியாத நிலையில் தான் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் அகதிகளுக்கு மேல் கேட்பாரற்று வாழ்கிறார்கள். இப்படி தொடர்ந்து வாழ்பவனுடைய மனநிலை வாழ்க்கை என்னவாக இருக்கும் இன்றைய அவசர வாழ்க்கை சூழலை அவனால் எதிர் கொள்ள முடியுமா?
எதிர்நிலையைப் பற்றி (சிங்கள அரசு) கவலைப்பட்ட அளவுக்கு , யோசித்த அளவுக்கு நாம் சுயவிமர்சனத்தை வளர்த்தோமா? சுயபரிசோதனை பண்ணினோமா? என்ற கேள்வி பலமாக எழுகிறது.
இதை இந்தக் கட்டுரையில் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கு. தமிழகம் வாழ் அகதிகள் பற்றி தமிழகத்தில் மக்களிடம் ஒரளவு பரிதாபப்படும் நிலையிருக்கு. இலங்கை வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும் தமிழகம் வாழ் அகதிகள் பற்றிய மோசமான மனநிலையில்லை. ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் மட்டும் இந்த அகதிகள் பற்றி மோசமான மதிப்பீடு இருக்கு. இதற்கு காரணம் என்ன? பெரும்பான்மையில் ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆதிக்க சாதியான சைவ வெள்ளாளர்கள்.யாழ்ப்பாண ஆதிக்க மன நிலை குடி கொண்டோர் , அதன் வழி சிந்திப்பவர்கள்.
இவர்கள் மேற்கு , ஐரோப்ப நாடுகளில் அகதி என்ற பதத்தையும் வாய்ப்பையும் கச்சிதமாக பயன்படுத்தி புலம்பெயர்ந்த இடத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். இவர்களுக்கு தமிழகம் வாழ் தமிழர்கள் பற்றிய மதிப்பீடு மட்டமானது. அதனால்தான் இலங்கையில் இந்திய வம்சாவழி ஈழத்தமிழருக்கு குடியுரிமை சார்ந்த பிரச்சனை வந்தபோதும் வாய்துறக்க மறுத்தார்கள். இன்று தமிழக முகாம்களில் பாதிக்கு மேல் இந்திய வம்சாவழித்தமிழர்கள் , மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைமக்கள்தான் வாழ்கிறார்கள் என்கிறபோது அவர்களின் மதிப்பீடு பழைமை மாறாமல் அப்படியே பின்பற்றப்படுகிறது என்பதில் என்ன வருத்தமிருக்கிறது எனும் கேள்வி எழுகிறது.
வெளி நாடுகளில் போருக்காக வரிந்து கட்டி செயற்பட்டவர்கள், பணம் கொடுத்தவர்கள் இன்று பாதிக்கப்பட்ட எஞ்சியபோராளிகளுக்கு ஆயுதத்திற்காக அன்று செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பகுதியை செய்தாலே போதுமானது. அதையே தமிழகத்தில் வாழும் அகதிகள் விசயத்தில் கண்டு கொள்ளாமலிருப்பது ஆச்சர்யமான விசயமில்லை.
அகதி முகாம்களில் இருப்பவர்கள் யாழ்பாணத்து சைவ வெள்ளாளராகவும், அங்கு கஷ்டப்படும் எஞ்சிய போராளிகள் சைவ வெள்ளாளராகவும் இருந்தால் அவர்கள் இத்தகைய ஒதுக்குதலுக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். இங்கு எல்லாத்தையும் விவாதத்திற்குட்படுத்தாமல் இருக்கும் கள்ள மௌனமே பெரும் விமர்சனத்திற்குட்பட்டது. அம்மாவுக்காக பேசிய நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, அகதிகளுக்காக பேசாதது ஆச்சர்யமானது இல்லை. ஏனைய அமைப்பினருக்கும் மேற்குறிப்பிட்ட விசயங்கள் பொருந்தும்.
ஒரு அகதி முகாமிற்கு என்னோடு இரு சக்கர வாகனத்தில் வந்து உச்சப்பட்டி அகதிகள் முகாமை சுற்றிப் பார்த்து விட்டு அங்குள்ள ஓலைக் கொட்டிலில் இருந்த அகதிகளுக்கு உதவ மனமில்லாமல், ஐரோப்பா ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் பிளாக் டீ சாப்பிட்டு விட்டு வந்த ஒருவரை நாம் சந்தித்தோம் . இந்த சம்பவத்திற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்னும் சாட்சியாக இருக்கிறார். எத்தனை ஐரோப்பா எழுத்தாளர்கள் தமிழகம் வந்து படம் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள். தமிழக எழுத்தாளர்கள் எத்தனைபேர் ஐரோப்பாவுக்கு படம் காட்ட சென்றிருக்கிறார்கள். (ரவிக்குமார் போன்ற ஒருசிலர் தவிர்த்து) இவர்கள் காலடி இல்லை காத்தாவது அகதிகள் முகாம் பக்கம் பட்டிருக்குமா? தமிழக வெகுசனப் பத்திரிக்கையில் எழுதிய , எழுதிவரும் புலம்பெயர் ஈழ எழுத்தாளர்கள் எவராவது , தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் பற்றி எழுதியிருக்கிறார்களா? (ஒரிருவரைத் தவிர)
இன்று புலம் பெயர் தமிழர்கள் , தமிழக அகதிமுகாமில் சொந்தக்காரர்கள், உறவுகள் இருக்கிறார்கள் என்று சொல்வதையே அவமானமாக நினைக்கிறார்கள் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது.
மண்டபம் அகதிகள் முகாமிற்கு பாரம்பரிய வரலாறு உள்ளதுபோல் உச்சப்பட்டி அகதிகள் முகாமிற்கு சமகாலவரலாறு உண்டு. தமிழகம் வாழ் அகதிகள் பற்றிய முதல் புத்தகம் உச்சப்பட்டி அகதிகள் முகாமிலிருந்து தான் ஆரம்பமானது (போரின் மறுபக்கம்) அதுபோல் ரவீந்திரனின் மரணம் சிறு வெடிப்பாக உச்சப்பட்டியிலிருந்து தான் வந்திருக்கிறது. ஆறுபிள்ளைகளுக்கு தகப்பனான 48வயதுடைய ரவீந்திரனின் அன்றைய மரணம் அகதிகள் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது என்று சொல்லும் அதே வேளை அன்றைய தமிழக தேர்தல் சூழல் அதனை மழுந்கடித்துவிட்டது என்று சொன்னால் மிகையில்லை.
ரவீந்திரனின் எதிர்ப்பு மரணம்
முகாம்களில் மாதத்தில் மூன்று தடவைகள் செக்கிங் (தணிக்கை) நடைபெறுவது வழக்கம். 06.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை தணிக்கை நடைபெற்றது. ரவீந்திரனின் 13வயது பொடியனுக்கு ரத்தம் உறையாமை நோய் இருந்ததன் காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரைக் காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த வருவாய்த்துறை அதிகாரி கடுமையாக கூறியிருக்கிறார்;.அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் நடந்திருக்கிறது. அந்த அதிகாரி கடுமையாக மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார் என்ற சலசலப்பு ஏற்கனவே அங்கிருந்திருக்கிறது. வாக்குவாதம் செய்த ரவீந்திரன் உயர்மின்னழுத்தம் கொண்ட கோபுரத்தில் ஏறி மின்சாரம் தாக்கி இறந்து போகிறார்.
அதிகாரிகளின் அலட்சியமும், அராஜகமும் சொல்லிமாளாது. கீழ்நிலை அதிகாரிகளின் நிலை பற்றியே ஏற்கனவே பலதடவைகள் பதிவு செய்திருக்கிறேன். அகதிமுகாம்களின் அமைப்பு முறையும், அங்கு வாழும் மக்களும் முகாம் சார்ந்த நிர்வாக முறைகளும் அகதிகளுடன் நேரடி தொடர்பிலிருக்கும் கீழ்நிலை அதிகாரிகளின் நடத்தையும், கடுமையான விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
தற்காலிகமாக கால்நூற்றாண்டு வாழ்க்கை உளவியல் ரீதியான பாதிப்பை உருவாக்கும். அத்தகைய சூழல் நிறையவே முகாம் வாழ்க்கை அனுபவத்திலிருக்கிறது. கீழ்நிலை அதிகாரிகளுடன் மல்லுக்கட்டமுடியாமல்தான் இதே உச்சப்பட்டி முகாமிலிருந்து நான்வெளியேறினேன்.
அகதிகள் முகாம் நிர்வாகமும் பாதுகாப்பும் தமிழக அரசுடையது. அகதிகள் பற்றிய கொள்கைமுடிவு மத்திய அரசுடையது. ஐநாவினர் அகதிகள் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதுதான் அகதிகளின் தலையெழுத்து. அகதிகள் தொடர்ந்து இவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்வதற்கு முக்கிய காரணம் தமிழகத்தை ஆள்கிற தலைமைகளும் , தமிழினத்திற்கு தலைவர்கள் என்று சொல்பவர்களுமே முதற் காரணம்.
ஒரு சிம்கார்டு வாங்க முடியாமல் 8கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் கால்நூற்றாண்டை கடந்து வாழ்கிறேன். தமிழ் தேசியங்களுக்கும், ஆண்ட ஆள்கிற அரச பரம்பரைக்கும் குறைவில்லை. என்னை எவர் என்ன செய்தாலும் எனது நாடும் என்னை கண்டு கொள்வதில்லை. உலகம் பூரா பரவியிருக்கும் எனது மக்களுக்கும் நான் கேவலமாய்த் தெரிகிறேன் என்கிறபோது….
மொழி, இனம், என இன்னும் பேசிக் கொண்டிருக்கலாமா?
000000.
இப்பதிவாளர் தொ.பத்தினாதன் தமிழகத்தில் கடந்த 26 வருடங்களாக ஈழ அகதியாய் வாழ்ந்து வருகிறார். மன்னார் , வட்டக்கண்டலை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது 16வது வயதில் அகதியாக 1990ம் ஆண்டு தமிழகம் சென்றவர் .போரின் மறுபக்கம் என்னும் அகதியின் தன்வரலாற்று நூலையும், தமிழகத்தின் ஈழ அகதிகள் எனும் நூலையும் எழுதி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக