செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டத்தில் தோற்றுவிட்ட மத்திய மாநில அரசுகள் பிரகடனம் செய்த.... போலீஸ் வன்முறை

Image may contain: 2 people, outdoorமாணவர்களின் அமைதி போராட்டம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக தமிழக அரசும்.. அடியாள் போலீசும் செய்த திட்டமிட்ட கலவரம்.. அயோக்கியத்தனம்..! தமிழர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அமைதி போராட்டத்தின் வெற்றி குறித்து கொண்டாட்டத்துடன் எழுதியிருக்க வேண்டிய இந்த பதிவை மிகவும் வேதனையுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரினாவில் நடத்திய முதல் ஊர்வலத்தில் ஆரம்பித்து, மெரினாவில் அமைதி போராட்டமாக உருவெடுக்க ஆரம்பித்து வரலாறாக மாறிய போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அணு அணுவாக ரசித்து வந்தவன் நான்.
ஒவ்வொரு நாளும் பார்வையாளனாக சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். முதல் இரு நாட்கள் மாணவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போராட்டம் பின்னர் ஊடகங்களின் தொடர் நேரலையால் லட்சக்கணக்கானோரின் வருகையாக மாறி போராட்டம் திருவிழா கொண்டாட்டமாக மாறியது.
ஊரில் திருவிழா பார்க்க கிராம மக்கள் வண்டி கட்டி வருவதுபோல் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியாக கலந்துகொண்டுவிட்டு சென்றனர். வேண்டும் வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்.. தமிழன்டா என்ற கோசங்கள் வரும்போதெல்லாம் மக்களில் உற்சாக குரல் பார்க்க பரவசமாக இருக்கும்.

இதுவரை எல்லாம் சரியாக நடந்தது. கடைசி இரு நாட்கள் போராட்டம் மாணவர்கள் ஆதிக்கத்திலிருந்து விலகி தனி தனி குழுக்கள் வசம் செல்வதை கவனித்தேன். தீவிர இடதுசாரி குழுக்களும் அதில் இருந்தன.
லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் பெருந்திரளான ஒரு போராட்டத்தில் பலதரப்பட்ட அரசியல் பார்வை கொண்டவர்கள் கலந்து கொள்வார்கள். அதை தவிர்க்க முடியாது. போராட்டக்காரர்கள் ஒவ்வொன்றையும் கவனிக்க முடியாது. அமைதியாக அவர்களின் கருத்தை சொல்கிறார்கள் என்ற வகையில் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
(போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் மட்டுமில்லாமல் பாதுகாப்பு அரணாகவும் இருந்தார்கள். ஆனால் வேறு தப்பான எண்ணத்துடன் சில கட்டப்பஞ்சாயத்து கும்பலும் அரசியல் ரவுடிகளும் கூட கூட்டத்தில் கலந்திருப்பார்கள்.)
ஆனாலும் போராட்டம் அதே கட்டுக்கோப்புடன் எந்தவித வன்முறையும் இல்லாமல் அமைதி வழியில் தொடர்ந்தது. உணவு, போக்குவரத்து ஒழுங்கு.. பாதுகாப்பு என்று மாணவர் குழுக்கள் காவல்துறைக்கு பக்கபலமாக இருந்தார்கள். சொல்லப்போனால் காவல்துறையினர் பணியை மாணவர்களும் இளைஞர்களும் மிக நேர்த்தியாக செய்தனர்.
போராட்டத்தில் பாரபட்சமில்லாமல் மோடியும் பன்னீரும் சசிகலாவும் விமர்சிக்கப்பட்டனர். ஏனெனில் ஆட்சியாளர்களாக அவர்கள்தான் இருக்கின்றனர்.. ஆக அவர்கள்தான் விமர்சிக்கப்படுவார்கள்.
இதில் பாஜக டோட்டல் டேமேஜ் ஆனது. தமிழகத்தில் எந்த முகத்துடன் ஓட்டு கேட்க செல்ல முடியும்.. மக்கள் காறி துப்புவார்களே என்ற நிலைதான்.
தமிழகம் மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகள் எங்கும் போராட்டம் விரிவடைந்தது. கிராமங்கள் உட்பட போராட்டகளத்தில் மக்கள் தொலைக்காட்சிகளில் பேசிய அரசியலை பார்த்து பார்த்து வியந்தேன்.
ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் விவசாயிகள் தற்கொலை காவிரி நீர் என்று விரிந்தது. பெப்ஸி கோக் பானங்கள் விற்கப்படாது என்று அறிவித்து வியாபாரிகள் அவற்றை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.. (போராட்டத்தில் இது ஒரு முக்கியமான இடம். அது ஒரு சர்வதேச அரசியல் போர்.)
மெரினாவில் சிறு கூட்டம் போட்டாலே கொதிக்கும் போலீஸ் எப்படி மாணவர்களின் பெருந்திரள் போராட்டத்தை அனுமதித்தது என்பதற்கு பின் வேறொரு அரசியல் உண்டு. அது மோடியின் பன்னீருக்கும் சசிக்குமிடையிலான பனிப்போர்.
இந்த போராட்டத்திற்கு மேலிட ஆதரவு உண்டு என்பதை போலீசார் ஆரம்பத்தில் காட்டிய பணிவே சாட்சி. ஆனால் போராட்டம் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் அளவுக்கு விரிவடையும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதோடு ஜனவரி 26 வேறு நெருங்கவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டெல்லி நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தது.
போராட்டம் தீவிரமடையவே தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்ற டெல்லிக்கு ஓடியது. ஒருவழியாக அவசரச் சட்டம் என்று ஒன்றை கொண்டு வந்தார்கள். ஜல்லிக்காட்டுக்காக ஆரம்பத்திலிருந்து போராடிய சிலரும் அழைக்கப்பட்டார்கள். அவர்களும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நிர்பந்திக்கப்பட்டார்கள். அவர்களும் சொல்லிக்கொடுத்ததை ஊடகங்களில் ஒப்பித்தார்கள்.
இதுவரை சரியாக போனது பன்னீர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பார் என்பது பெரும் நெருடலாக சிலருக்கு தோன்றியது. அலங்காநல்லூரிலிருந்து பன்னீர் திருப்பி அனுப்பப்பட்டார்.
(அது ஏன் என்பதற்கு இன்றைய தேதிவரை மற்ற ஊடங்களில் எல்லாம் முதல்வர் பன்னீர் செல்வம் என்கிறார்கள். ஜெயா டிவியில் முதல்வர் என்று மட்டும் குறிப்பிடுவது ஏன் என்று இந்த இடத்தில் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். )
ஆக மாணவர்கள் இளைஞர்கள் என தமிழர்களால் தொடங்கப்பட்டு வரலாறாக மாறிய இந்த போராட்டம் அமைதியாக முடிவது பன்னீர் அரசுக்கு பெயரையும், வருங்காலத்தில் மெரினாவில் போராட்டம் நடந்தால் கலந்து கொள்ளும் உற்சாகத்தை பொதுமக்களுக்கும் கொடுத்துவிடும்.. இது நல்லதல்ல என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இதற்கிடையே மாணவர்கள் தரப்பில் தொடர்பில் இருந்தேன் என்பதால் கவர்னர் உரைக்குப்பின் மாணவர்களும் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ளும் மனநிலையில் இருப்பதை அறிந்தேன்.
தமிழ் பிள்ளைகள் ஆரம்பித்த இந்த போராட்டத்தில், சினிமாகாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.( லாரன்ஸ் உதவி செய்வதாக வந்து மாணவர்களிடம் நுழைந்து மேடையை கைப்பற்றிக்கொண்டார்.) அரசியல் கட்சியினருக்கு அனுமதி மறுப்பு.. அமைதி என்று பல சிறப்பான முன்னுதாரணங்கள் இருந்தன.
எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த சூழலில் போலீசார், மேலிடத்தின் உத்தரவுபடி இன்று அதிகாலயிலேயே வந்து மாணவர்களை கலைந்து போக சொல்லி நிர்பந்தித்திருக்கிறார்கள். கவர்னர் உரைக்குப்பின் போவதாக சொன்னவர்களை உடனடியாக இழுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.
மறுத்தவர்கள் மீது தடியடி நடத்தப்படவே தப்பிக்க மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என பலரும் கடற்கரையை நோக்கி தஞ்சம் புகுந்தார்கள். மீனவ மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக கிளம்பி வந்தார்கள். அந்த காட்சியை பார்த்த நொடி அந்த மக்களின் அன்பு சிலீர்க்க செய்துவிட்டது.
நண்பர் அருள்எழிலனும் நானும் ஆளுக்கொரு திசையிலிருந்து மெரினாவுக்கு நோக்கி கிளம்பிச்சென்று, வாகன நெருக்கடி போலீஸ் குவிப்பால் பாதி வழியிலே திரும்பி வந்தோம்.
கடற்கரையில் நீருக்குள் தஞ்சம் புகுந்த மாணவர்கள் பெண்கள் உள்ளிட்டோர்களை நினைக்க நினைக்க தாமிரபணி படுகொலை கொடூரம் தான் நினைவுக்கு வந்து பதட்டத்தை உண்டு பண்ணியது. அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து மீடியா ஆட்களுடனும் போராட்டக்காரர்களுடனும் போலீஸ் தரப்பு நண்பர்களுடனும் தொடர்பு ஏற்படுத்தி செய்திகளை கடத்தும் பணியை செய்ய ஆரம்பித்தேன்.
ஆனால் காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரே நோக்கம் தான். அது பொதுமக்களிடையே போராட்டக்காரர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் என்பது. அதை சிறப்பாக செய்தார்கள்.
ஆட்டோக்களுக்கு தீ வைப்பது குடியிருப்புகளில் நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து உடைப்பது என எல்லாமே போலீஸ் செய்ததுதான். இதற்கான வீடியோ ஆதாரங்கள் எல்லாம் வெளியாகியிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக கடற்கரையில் இருந்தவர்களை காப்பாற்ற வந்த இளைஞர்கள் மீது தடியடி நடத்தினார்கள். பதிலுக்கு அவர்கள் கற்கள் வீச என சிலர் எதிர்பார்த்தது எல்லாம் சிறப்பாக நடந்தது.
பெரும்பாலான மாணவர்கள் வெளியேறிவிட்ட நிலையில் இப்போதும் நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் நிலை என்னாகும் என்று தெரியவில்லை.
அமைதி வழியில் தொடங்கிய போராட்டம் அமைதி வழியில் முடிக்கப்பட்டு வெற்றிக்கொண்டாட்டத்துடன் மிகச்சிறப்பாக முடிந்திருக்க வேண்டிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை சீர்குலைத்துவிட்டார்கள்.
இதை காவல்துறையினர் தவறுதலாக செய்தார்கள் என்று நினைக்காதீர்கள்.. இதையெல்லாம் செய்தால் இதெல்லாம் நடக்கும் என்று திட்டமிட்டே செய்தார்கள்.
அதற்கான உத்தரவு எங்கிருந்து வந்தது எனபது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். ஆட்டோக்களுக்கு அவர்கள் நெருப்பு வைப்பதே அதற்கு சிறு சாட்சியம்தான்.
தமிழ் பிள்ளைகள் அமைதி வழியில் நடத்திய இந்த போராட்டம் நிச்சயமாக தோல்வி அல்ல.. வரலாற்றில் பெருமிதமாகவே குறிப்பிடப்படும்..
ஆனால் ஏழு நாட்களும் அமைதிவழியில் போராடிய மாணவர்களிடம் வாங்கி தின்ன சோத்துக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்து கொண்ட தமிழக காவல்துறையின் செயல் வரலாற்றில் கேவலமாக பதிவு செய்யப்படும்..
ஆம் மிகக்கேவலமாக..!
-கார்ட்டூனிஸ்ட் பாலா<  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: