திங்கள், 6 ஜூன், 2011

"தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க., உருவாகும்' : நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் இனி தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க., செயல்படும் என்று, 18ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், புதிய தகவலை தெரிவித்தார். சென்னை செங்குன்றத்தில் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், ம.தி.மு.க.,வின் 18ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: பொதுத் தேர்தல் என்ற குருசேத்திரம் முடிந்து, ஜெயலலிதா முதல்வராக மகுடம் சூட்டிக்கொண்டார்.

ம.தி.மு.க.,விற்கு வயது 18. நாங்கள் இப்போது தான் பூப்படைந்திருக்கிறோம். தொண்டர்களின் எழுச்சியால் துவங்கப்பட்ட, எங்கள் கட்சியில் யாரும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஆனால், எங்கள் இயக்கத்தின் பிறந்த நாளை தவறாமல் கொண்டாடுகிறோம். தமிழகத்தில் பல கட்சிகள் அடையாளமின்றி அழிந்து போய்விட்டன. எங்களுக்கு பத்திரிகை பலம், ஊடகங்களின் செல்வாக்கு, சினிமா நடிகர், நடிகையர் மூலமான விளம்பரம் என்று எதுவுமில்லை. எங்களிடம் இருந்த ஒரே சினிமா தயாரிப்பாளரும் ஓடிவிட்டார்.

போட்டியிட்டிருக்கலாம். ஆனால், வீண் பழிகள் வந்திருக்கும். அதனால் தான் நாங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம். தமிழகத்திற்கு வைகோவின் தலைமை தேவை என்பதை மக்கள் உணரத் துவங்கிவிட்டனர். இந்நிலையில், தி.மு.க.,விற்கு மாற்றாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க., செயல்படும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

கருத்துகள் இல்லை: