ரெண்டாவது 'பசுமை வறட்சி' வேணாமுங்க !"
முறையீடு
'ரெண்டாவது பசுமை புரட்சி' கொண்டு வரணும்னு துள்ளிக்கிட்டு கிளம்பியிருக்கற 'முதலாம் புரட்சித் தலைவரோட வாரிசு, முதலாம் புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு... ரொம்ப ரொம்ப வருத்தத்தோட வணக்கம் சொல்லிக்கறான் கோவணாண்டி.
'இப்பத்தானே ஒரு கடுதாசியை எழுதித் தொலைச்சே... அதுக்குள்ளயே மறுபடியுமா?’னு கோவப்படாதீங்க. போன தடவை அவ்வளவு தூரம் வரிஞ்சு வரிஞ்சு நான் சொல்லியும், எதையுமே காதுல போட்டுக்காம, இந்த அதிகாரிக சொல்றத மட்டுமே மனசுல ஏத்திக்கிட்டு, அதுக்குத் தகுந்தா போல திட்டத்தைத் தீட்டக் கிளம்பிட்டீங்களே... இது நியாயமா?
'இந்தத் தடவை அம்மா ரொம்பவே மாறியிருக்காங்க... மாறியிருக்காங்க...' அப்படினு நீங்க ஆட்சியைப் பிடிச்ச தருணத்தில இருந்து பல அரசியல்வாதிகளும், மீடியாக்களும் மாறி மாறி சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, 'மாறினது நீங்கதான்... நானில்ல'னு சொல்லாம சொல்றது கணக்கா... சும்மா சுழட்டி சுழட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களே!
சமச்சீர் கல்வி விஷயத்துலயே ஒங்க வண்டவாளம், தண்டவாளம் ஏற ஆரம்பிச்சுடுச்சு. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுல 67% பேர் இந்த விஷயத்துல ஒங்க மேல கடுப்புல இருக்கறதா... சர்வே பண்ணி சொல்லியிருக்காங்க. நீங்கதான் இந்தத் தடவை ஆட்சியைப் பிடிப்பீங்கனு ஏற்கெனவே கணிச்சு சொன்ன அதே லயோலா காலேஜு ஆளுங்கதான், இதையும் சொல்லியிருக்காங்க அப்படிங்கறத மறந்துடாதீங்க.
'இருண்டு கிடக்குற நம்ம பொழப்பு, விடியட்டும்னுதான் போன ஆட்சியில எல்லாத்தையும் சொல்லிப் புலம்பிக்கிட்டிருந்தேன். பெருசா ஒண்ணும் பெயரல. கம்பெனிக்காரனுங்களுக்கு கால் பிடிச்சு விடற வேலைதான் முக்கியமா நடந்துச்சு. சரி, ஐயா போய்... அம்மா வந்திருக்காங்க. இனிமேயாச்சும் களத்துல இறங்கி, உண்மையைத் தெரிஞ்சுகிட்டு ஆட்சி நடத்துவாங்க. நம்ம பிரச்னைகளையும் சொல்லலாம்னு நம்பிக்கிட்டு இருந்தோம். ஆனா, 'புலியூருக்கு பயந்து அலியூருக்கு போனா... அலியூரும் புலியூராயிடுச்சு'ங்கற கதையா மாறிடுமோனு மனசு படபடக்க ஆரம்பிச்சுடுச்சுங்கோ... நீங்க விடுற அறிவிப்புகளைக் கேட்டு.
மெத்த படிச்ச விஞ்ஞானிங்கதான், 'படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்... எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்'கிற கதையா... 'மொதல் பசுமைப் புரட்சி... ரெண்டாவது பசுமைப் புரட்சினு பேசிக்கிட்டே திரியறாங்க. நிஜத்துல... 'மொதல் பசுமைப் புரட்சி' போட்ட போடுல இருந்து இன்னிக்கு வரைக்கும் எந்திரிச்சு வரமுடியாம திணறிக்கிட்டு இருக்கோம். பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள பத்தி, வேளாண் விஞ்ஞானி சாமிநாதனே பொலம்பிக்கிட்டிருக்காரு. அதையெல்லாம் கண்டுக்காம... புதுசா பொறப்பட்டு வந்திருக்கற விஞ்ஞானிங்க, அதிகாரிங்க, ஆலோசகருங்க பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு, 'ரெண்டாவது பசுமைப் புரட்சி'னு நீங்க உறும ஆரம்பிச்சுட்டீங்களே! இது, 'ரெண்டாவது பசுமை வறட்சி'க்கான ஆரம்பம்கிறதுதான் நெசம்!
வழக்கமா நீங்கதான் குட்டிக் கதை சொல்லுவீங்க. இப்ப நானொரு கதை சொல்றேன் கேட்டுக்கோங்க. ரோட்டுல நடந்து போயிக்கிட்டு இருந்தவன் மேல லாரி மோத, ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. ரத்தம், குளுகோஸ் எல்லாம் ஏத்துனாங்க. கொஞ்ச நாள்ல உடம்பு சரியானதும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் குளுகோஸா ஏத்திக்கிட்டு இருந்தான். கொஞ்ச நாள்லயே ஆள் ரொம்ப சோர்ந்து போயி, எலும்பும் தோலுமா ஆயிட்டான். ஒரு நாளு அவனைப் பாக்க வந்த உறவுக்காரரு, 'அடே கிறுக்கா, ஆஸ்பத்திரியில ஆபத்தான நிலமையில இருந்தப்ப குளுகோஸ் ஏத்துனது சரிதான், உடம்பு சரியான பிறகும் அதையே செய்றது மடத்தனம் இல்லியா? குளுகோசை தூக்கிப் போட்டுட்டு சாப்பாட்டைச் சாப்பிடுடா’னு சொன்னாரு. அதுக்குப் பிறகு... சோறு, குழம்புனு வெளுத்து கட்டுனதுல ஆறே மாசத்துல உடம்பு தேறி நடக்க ஆரம்பிச்சுட்டான்.
நாட்டுல பஞ்சம் வந்ததாவும்... விளைச்சல் குறைஞ்சதாவும் சொல்லப்படுற காலத்துல... குளுக்கோஸ் கணக்கா உப்பு உரமெல்லாம் நிலத்துல போட்டாங்க. போனா போகுதுனு விட்டுடலாம். ஆனா, அதையே தொடர்ந்து செய்துகிட்டு இருக்கறதாலதான் நிலம் நஞ்சாகி, குத்துயிரும், கொலை உயிருமா கெடக்கு. முதலாம் பசுமைப் புரட்சியோட 'ஃபாதர்’ சாமிநாதனே, 'இயற்கை உரம் போடுங்க'னு சொல்லிட்டிருக்காரு.
நம்ம வயக்காட்டுலயும், மாட்டுக் கொட்டகையிலயும் இருந்த வளமான உரங்கள வெச்சேதான் ஒரு காலத்துல ராகி, சோளம், கம்புனு மானாவாரியா விளைஞ்சுது. அதையெல்லாம் காவு வாங்கினது... 'பசுமைப் புரட்சி. விவசாயிகள், தற்சார்போட செய்துகிட்டிருந்த விவசாயத்தை அழிச்சது... பசுமைப் புரட்சி. ஊருக்கொரு மருந்துக் கடை இருந்த நிலமை போயி, வீட்டுக்குள்ளயே மருந்துக் கடையை கொண்டு வந்து, மக்களை நோயாளிகளா மாத்துனது... பசுமைப் புரட்சி. இது உண்மையா... இல்லையானு ஒங்களுக்கு ஆலோசனை சொல்ற அதிகாரிககிட்ட, அவங்களுக்கெல்லாம் மனசாட்சினு ஒண்ணு இருந்தா அதைக் கேட்டுப் பார்த்துட்டு சொல்லச் சொல்லுங்க... எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துடும்.
அதிகாரிகளோட லட்சணத்துக்கு சின்ன உதாரணம்.... பி.ஏ.பி. வாய்க்கா பாசனத்துல, வளமான நிலத்துல, 40 ஏக்கர்ல ஆரம்பிச்ச பொங்கலூர் அரசு விதை உற்பத்திப் பண்ணை இப்ப புல்லு முளைச்சு, புதர் மண்டி கிடக்கு. போன வாரம் அங்க ஆய்வுக்குப் போன உங்க விவசாய மந்திரி செங்கோட்டையன், 'ஏன் இப்படி இருக்கு?'னு கோபமா கேட்டாராமாம்.
அதுக்கு. 'கூலி ஆள் கிடைக்கல... கூடுதல் கூலி கொடுத்து விதை உற்பத்தி செஞ்சா நஷ்டம்தான் வரும். அதனாலதான் உற்பத்தியை நிறுத்திட்டோம்'னு பதில் சொல்லியிருக்காங்க அதிகாரிங்க.
விஷயம் என்னன்னா... நம்ம பல்கலைக்கழகமே, மான்சான்டோங்கற அமெரிக்க விதைக் கம்பெனிக்கு கிட்டத்தட்ட பி.ஆர்.ஓ. வேலை பார்த்துக்கிட்டிருக்கு. இந்த நிலையில, அந்தப் பல்கலைக்கழகமே விதையை உற்பத்தி பண்ணா எப்படி? ஆனா, இந்த உண்மையை சொல்லாம... 'ஆள் கிடைக்கல, அது கிடைக்கல'னு சொல்லி மந்திரியோட வாயையே மூடிட்டாங்க.
'இயற்கை விவசாயத்து பக்கம் எல்லா விவசாயியும் போயிட்டா... விதை விக்கிறவன், உரம் விக்கிறவன், பூச்சிக்கொல்லி விக்கிறவன்னு விவசாயி தலையில மொளகா அரைச்சிக்கிட்டிருக்கற அத்தனை பேரோட பொழப்பும் நாறிப் போயிடும். அதுக்குப் பயந்துகிட்டுதான், அதிகாரிக மூலமா ஆட்டம் காட்டுறாங்க. நீங்களும் உண்மை புரியாம அதையெல்லாம் கேட்டுத் தலையாட்டறீங்க.
ரூமுக்குள்ள உக்காந்துகிட்டு, கம்யூட்டர்லயே கடலை நட்டு, உரம் போட்டு, களை எடுத்து, வரவு- செலவு கணக்கு காட்டுற அதிகாரிக, அறிவாளிக, ஆலோசகருங்களையெல்லாம் வெச்சு யோசிச்சு திட்டம் போடுறீங்க. ஆனா.... தினம் தினம் மண்ணோட மல்லுகட்டிக்கிட்டு, வயல்லயே வாழ்ந்துகிட்டு இருக்குற எங்களுக்குத்தானே தெரியும் நிஜமான கஷ்ட, நஷ்டம். இந்த உண்மையை உணர்ந்து, கோவணாண்டிகளையும் கூப்பிட்டு கருத்து கேட்டு, விவசாயம் சம்பந்தமா எந்த முடிவையும் எடுங்க.
'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்,
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’னு ஒங்க புரட்சித் தலைவர் பாடினது சும்மாயில்லா... நூத்துக்கு நூறு நிஜம்!
நிலைத்த, நீடித்த நிஜமான பசுமைப் புரட்சி செய்யணும்னா... ஒங்க தேர்தல் அறிக்கையில சொல்லியிருக்கற 'இயற்கை விவசாயம்'ங்கற அறிவிப்பைக் கையில எடுங்க. ஊரும், உலகமும் உங்கள வாழ்த்தும். இந்த மனுஷப் பயலுகள விட்டுத் தள்ளுங்க. சுயநலத்தோட ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு, இதுக்கும்கூட குறைசொல்லிக்கிட்டுதான் இருப்பானுங்க.
ஆனா, இந்த மண்ணுல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம... யாரையும் கெடுக்காம... மத்தவங்களுக்காகவே வாழ்ந்துகிட்டிருக்கற லட்சோப லட்சம் மரங்களும்... வாயில்லா ஜீவன்களா வாழற கோடானுகோடி உயிருங்களும் நிச்சயமா ஒங்கள மனசார வாழ்த்தும்.
இதையெல்லாம் மறந்துட்டு, 'ரெண்டாவது பசுமைப் புரட்சியை கொண்டு வந்தே தீருவேன்'னு பிடிவாதம் பிடிச்சீங்கனா, 'தமிழ்நாட்டை தரிசா மாத்துன தங்கத் தாரகை’னு வரலாறு உங்க பேரை கொட்டை எழுத்துல எழுதிப்புடும் ஜாக்கிரதை!
இப்படிக்கு,
கோவணாண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக