திங்கள், 18 அக்டோபர், 2010

பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்,எங்களை யார் பாடசாலையில் சேர்ப்பார்கள்’

அறிவூட்டலுக்கு பெருமை சேர்க்கும் அபூர்வ ஆசிரியை
நடைபாதை குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றுக்காக மக்களிடம், உதவிகள் பெற்று ஒரு ஆசிரியை அவர்களை பராமரித்து வருகிறார். ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை கன்டா சக்ரவர்த்தி (44), கல்கத்தாவில் உள்ள டம்டம் ரயில்வே ஜங்ஷன் வழியாக தனது பாடசாலைக்கு சென்று வந்தார். அந்த ரயில் நிலைய மேடையில் தங்கியிருந்த சில சிறுமிகள் அவரிடம் பிச்சை கேட்பார்கள். சில நாட்கள் காசு கொடுத்த கன்டா சக்ரவர்த்திக்கு, அவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழ, நாமே அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது, என நினைத்தார்.
கடந்த 2007ம் ஆண்டு, அந்த பிள்ளைகளுக்கு நடை பாதையிலேயே அமர்ந்து கன்டா, பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். அப்போது அவரிடம் நான்கைந்து சிறுமிகள் வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு அதனை மறுவாழ்வு மையமாக கன்டா பதிவு செய்தார். எனினும் அந்த மறுவாழ்வு மையத்திற்கு கூரை கிடையாது. ரயில்வே நிலைய மேடை தான் அவர்களின் உறைவிடம். தற்போது கன்டாவின் பாதுகாப்பில் மூன்று முதல் 10 வயது வரையுள்ள 20 சிறுமிகள் உள்ளனர். அவர்களை அங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறது.
கன்டா, காலை 5.30 மணிக்கு எழுந்து, தயாராகி 7.30 மணிக்கு ரயில்வே நிலையத்துக்கு வருவார். பிள்ளைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சாமி கும்பிட வைத்து, உணவு செய்து கொடுத்து, பாடசாலைக்கு அனுப்பி வைப்பார்.
அவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிடுவார். மாலையில் பள்ளி முடிந்ததும், மீண்டும் ரயில்வே நிலையத்துக்கு வந்து பாடசாலையிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு இரவு வரை, பாடம் சொல்லிக் கொடுப்பார். பின்னர், உணவு அளித்துவிட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டுச் செல்வார். பிள்ளைகள் அங்கேயே தங்கிக் கொள்வர்.
கன்டாவின் சேவையைப் பார்த்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்துள்ளனர். அந்த சிறுமிகளில் ஒருத்தியின் தந்தை, எல்லா சிறுமிகளையும் பாடசாலை அழைத்துச் சென்று விட்டு மாலையில் அழைத்து வருவது வரை பாதுகாப்பாக இருக்கிறார்.
இரவில் ரயில்வே நிலையத்தில் தங்கிக்கொள்ளும் பிள்ளைகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை பொலிசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மேலும் உணவு, உடை, பள்ளி பாட புத்தகங்கள் உள்ளிட்ட உவிகளையும் பல்வேறு தரப்பிலும் அளித்து வருகின்றனர். கன்டாவின் சேவையைப் பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிகின்றன. கன்டாவின் கணவர் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இதுகுறித்து, கன்டா கூறியதாவத :
தினமும் நான் அந்த ரயில்வே நிலையம் வழியாக பாடசாலை சென்று வருவேன். நடைபாதையில் தங்கியிருக்கும் அந்த பிள்ளைகள் என்னிடம், பிச்சை கேட்பார்கள். ஒரு தடவை அவர்களிடம், ‘நீங்கள் பாடசாலை போகவில்லையா?’ என்று கேட்டேன். எங்களை யார் பாடசாலையில் சேர்ப்பார்கள்என்று கேட்டனர். அந்த வார்த்தைகள் தான், எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.
என் முயற்சியைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்த பிள்ளைகளுக்காக பாடசாலை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளைகள் தங்குவதற்கு கூரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் இலட்சியம் இவ்வாறு கன்டா கூறினார்.

கருத்துகள் இல்லை: