ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

யார் நண்பர்கள்? பாடகர் மலேசியா வாசுதேவன்.முன் போல என்னால் பாடவும் முடியாது

ன்னை விருகம்பாக்கம், கம்பர் தெருவில் உள்ளடங்கி அமைதியாக இருக்கிறது அந்த வீடு.
‘‘ஸார் இருக்காருங்களா...?’’
‘‘உள்ளே வாங்க...’’
கதவுக்குப் பின்னால் மெதுவாக நடந்து வருகிறார் அவர். லேசாக கால்கள் தடுமாறுகின்றன.பக்கவாதத்தால் இடதுகை பாதிக்கப்பட்டிருக்கிறது. நெற்றிச் சந்தனம்.. சவரம் செய்யப்படாத முகம்... ஒருவித மென்சோகத்தோடு நம்மை வரவேற்கிறார் அவர்.  அவர்... பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன்.
80-களில் சிவாஜி, ரஜினி என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்தவரா இப்படி?;ரொம்ப வருஷமா பார்க்கவே முடியலையே? என்ன வாயிற்று? பேசினோம்.
“2003-ல் மலேசியாவில் மேடை நிகழ்ச்சிகளுக்காக போனபோது கடுமையான மூளைக் கோளாறு ஏற்பட்டு பக்கவாதம் வந்துச்சு. அதுக்கப்புறம் உடம்பு சுத்தமா செயல் படலை. கடந்த ஆறு வருஷமா இப்படித்தான் இருக்கேன்.சுத்தமா பாட முடியலை.எங்கேயும் போறதில்லை.
 நோய்க்காலம்...?
“ரொம்பவும் அவஸ்தையான நாட்கள். வாத நோய் தாக்கிய சில வருடத்துலயே மறுபடியும் உடம்பு மோசமானது. இப்பயாச்சும் பேசவும் நடக்கவும் முடியுது. ஆனா, அந்தச்  சமயத்துல சுத்தமா பேசவோ, நடக்கவோ முடியாம நிறையக் கஷ்டங்களை அனுபவிச்சேன். ஒரு வழியா பாபா என்னை எனக்கே மீட்டுக் கொடுத்துட்டார்.’’ ஷீரடி சாய் பாபாவின் புகைப்படத்தை நோக்கி நெகிழ்வோடு கைகூப்புகிறார் வாசுதேவன்.
சினிமா நண்பர்கள் உடல் நலம் விசாரித்தார்களா...?
‘‘யார் நண்பர்கள்? (விரக்தியாக சிரிக்கிறார்). சினிமாவுல பலருக்கும் நட்பு கிடையாதுங்க. இங்கே மார்க்கெட் போயிட்டா அன்பு, தோழமை எல்லாமே போயிடும்.ஒருத் தனுக்கு உடம்பு சரியில்லையென்றால் மனித நேயத்தோடு விசாரிப்பது அவசியம்.ஆனா,என் சககலைஞர்களுக்கு மனமில்லையோ,மறந்து விட்டார்களோ என்னவோ. ‘எப்படிய்யா... இருக்கே’ன்னு விசாரிக்கக் கூட ஆளில்லை.இத்தனைக்கும் இங்கே விஜயா ஆஸ்பிட்டல்லதான் கிடந்தேன்.எஸ்.பி.பி.,கங்கை
அமரன் இருவரைத் தவிர யாரும் வந்து என்னைப் பார்க்கவில்லை. ஒரு தொலைபேசி அழைப்புக் கூட கிடையாது.’தமிழ் சினிமா உங்களை சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டதாக...?
“இல்லை. நான் அப்படி நினைக்கலை. என்னை பாடக் கூப்பிடலையே... நடிக்க வைக்கலையேன்னு எனக்கு இப்போதும் வருத்தமில்லை. எனக்கு ஏதாச்சும் பணம், காசு கொடுக்கணும்ன்ற எதிர்பார்ப்பும் கிடையாது. என்னை மறந்துட்டாங்களேன்னு நினைக்குறப்பதான் மனசு வலிக்குது. எத்தனையோ ஹீரோக்களுக்கு நான் பாடியிருக்கேன். ஆனா,‘மலேசியா வாசுதேவன்’னு ஒருத்தன் இருந்தானே... அவன் எங்கேய்யா..ன்னு யாருமே கேட்கலையே... அன்பான விசாரிப்புக்காகத்தான் நான் ஏங்கினேன். நான்  எதிர்பார்த்ததெல்லாம் வெறும் வார்த்தைகள்தான்.இந்த நட்பு கூட இல்லாத சினிமா உலகத்துல இருந்து என்ன புண்ணியம்?அதான் விலகிவிட்டேன்.
;இளையராஜா?
“நட்பின் அடிப்படையில் ஏற்கெனவே அவர் எனக்கு நிறைய செய்துவிட்டார். என் பேரை வெளியே கொண்டுவந்தவர் ராஜாதான். அவர் என்னை நலம் விசாரிக்கவில்லை  என்ற வருத்தமெல்லாம் எனக்கு இல்லை. அவரை, அவரின் அன்பை எனக்கு நல்லாத் தெரியும். அவரும் நானும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை,  அவ்ளோதான்.’’
‘ஆசை நூறுவகை’, ‘வெத்தலைய போட்டேண்டி’, ‘தண்ணி கறுத்திருச்சி’ என நீங்கள் பாடிய நிறைய பாடல்கள் இப்போது ரீமிக்ஸ் செய்யப்படுகிறதே? கேட்டீர்களா...?
“ம்.. கேட்டேன். என்ன செய்யறது? இதையெல்லாம் தடுக்க முடியாதே.அதே குரல்ல முன் போல என்னால் பாடவும் முடியாது.இப்போ இளைஞர்களோட ரசனை  வெறும் குத்துப் பாட்டு அளவுலதான் இருக்கு. சினிமாக்காரர்களும் இதைக் தேவையில்லாம திணிக்குறாங்கன்னு சொல்லலாம். சிந்தனை, கருத்து, மெல்லிசை இதெல்லாம்  அந்தக் காலத்தோடு முடிஞ்சுப் போச்சு.’’

 ஒரு பாடகராக, குணச்சித்திர நடிகராக போதிய கவுரவம் உங்களுக்கு அளிக்கப்படவில்லையே என்ற ஏக்கம்?
“ஒரேயொரு பாடலைப் பாடிவிட்டு ஊருக்குப் போயிடலாம்ங்கிற முடிவோட இங்கே வந்தவன் நான். ஆனா, ஏழாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியாச்சு.இது வரைக்கும் எண்பத்தஞ்சு படங்கள்ல நடிச்சுருக்கேன். எந்த ஏக்கமும் என்னிடமில்லை. எல்லாமே கிடைத்தவரை லாபம்தான். நான் எதுவுமே சாதிக்கலைதான். ஆனா, தமிழ்  சினிமாவுல இவரும் இருந்தார்னு ஓர் அடையாளம் கொடுக்கணும் இல்லையா...?
உரிய அங்கீகாரம் கொடுத்திருக்கலாம். ஆனா, இதுவரை அது நடக்கலை.’’
திரும்பவும் சினிமாவுக்கு வரும் எண்ணம்?
“குரல் போயிடுச்சுங்க. பாட முடியாது. இப்போது நான் இருக்கும் எனது உடல் நிலையைக் கருதி ஏதாச்சும் கேரக்டர் கொடுத்தால் செய்யலாம். ஆனா, ஒரு சின்ன  வேஷமாவது இவருக்குக் கொடுக்கலாம்னு யாருக்கும் தோணமாட்டேங்குதே... டி.வி. நிகழ்ச்சிகள்ல மட்டும் எப்பயாச்சும் ஜட்ஜா இருக்கச் சொல்லிக் கூப்பிடுறாங்க. போய்  உட்கார்ந்துட்டு வர்றேன்.
மத்தபடி மனசு நிம்மதிக்காக ஆன்மிக நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டிருக்கேன்.ஓய்வு சமயத்துல மனசுல பட்டதை வைச்சு ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். சீக்கிரமே அதை  வெளியிடணும். அவ்ளோதான். கடைசியா இன்னொரு விசயம்,ஒரு காலத்துல உச்சத்துல இருந்து இப்போ முடியாமப் போனவன் மீது அரசாங்கம் கண் வைக்கணும்.  சிறிய உதவிகளைச் செய்யலாம்.
மத்தபடி, இந்த மலேசியா வாசுதேவனை மறந்துடாதீங்க... மறதியும் அலட்சியப்படுத்துதலும்தான் சக மனிதனுக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரிய தண்டனை..’’ லேசாக கண் களில் நீர்த்துளியுடன் முடிக்கிறார் மலேசியா வாசுதேவன்.
மா.மணிவண்ணன்

கருத்துகள் இல்லை: