திங்கள், 13 செப்டம்பர், 2010

அமெரிக்காவிலிருந்து 50 பேர் தூதுக் குழுவொன்று வட மாகாணத்திற்கு விஜயம்

Flag of America
அமெரிக்காவிலிருந்து 50 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.வட மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இவர்களுக்கு இலங்கையின் முதலீடு தொடர்பாக விளக்கமளிக்கப்பட வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் அமெரிக்க வர்த்தகத் தூதுக் குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்தும் ஆராயவுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த தூதுக் குழு இலங்கை வரவுள்ளது என்றார்.
வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர் மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றார்.
வடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.வடக்கை நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவையான ஹோட்டல்கள், தங்குமிட உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
தற்பொழுது அதிகமான நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: