விகடன் : மனம் திறக்கும் துர்கா ஸ்டாலின்!
கணவரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி, மகனது வெற்றி, வாக்கு எண்ணிக்கை நாளின் மனநிலை என்று தன் எண்ணங்களை விகடனுடன் முதல்முறையாக விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் துர்கா ஸ்டாலின். VikatanExclusive
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார். வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது தமிழகமுதல்வர் ஸ்டாலின் இல்லம்.
`முத்துவேல் கருநிதி ணாஸ்டாலின் எனும் நான்' என்ற வார்த்தைகளை ஸ்டாலின் உச்சரித்து முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அந்தத் தருணத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் வெடித்துக் கண்கலங்கிய காட்சி, அரசியல் தாண்டி அனைவரையும் நெகிழச் செய்த தருணம்.
பத்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அரியணையில் அமர்ந்து மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது வெற்றியில் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் நிச்சயம் பெரும் பங்குண்டு. கணவரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி, மகனது வெற்றி, மக்களின் மனநிலை என்று தன் எண்ணங்களை மூத்த பத்திரிகையாளர் மற்றும் முன்னாள் பத்திரிகை ஆசிரியர் #லோகநாயகியிடம் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொள்கிறார்
மிகச் சவாலான நேரத்தில் முதல்வராகப் பொறுப்பேற்று இருக்கிறார். அவர் முன்னே நிற்கும் மிகப் பெரிய சவாலாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?
இப்போதைக்கு கொரோனாதான் மிகப்பெரிய சவாலா இருக்கு. அதுல ஜனங்களோட நலனை விரைந்து காப்பாற்ற என்னென்ன செய்யணும்னு செஞ்சுட்டு இருக்காங்க. தினமும் அது சம்பந்தமா மீட்டிங்ஸ் நடக்குது. அவங்களோட தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கியமான விஷயங்கள் அத்தனையும் நிறைவேற்றும் முனைப்பில் இருக்காங்க. இவங்க கையெழுத்து போட்ட முதல் 5 விஷயங்களும் ரொம்ப முக்கியமானதுதான். அதிலும் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் ட்ரீட்மென்ட், 4,000 உதவித்தொகை, பெண்களுக்கு பஸ்ஸில் இலவச பயணம், பால் விலை குறைப்புன்னு எல்லாமே இப்போ ரொம்ப அவசியமானது. இதேபோல் நல்ல விஷயங்கள் தொடரும்னு நம்பறேன். நிச்சயம் செய்வாங்க.
தேர்தலுக்கு முந்தைய ஸ்டாலினின் மனநிலை எப்படி இருந்தது?
எங்க வீட்டுக்காரங்க ரொம்ப ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருந்தாங்க. அவங்க மனசுல ஜெயிப்போமாங்கிறது குறித்து கொஞ்சம்கூட தயக்கமே இல்ல. சொல்லப்போனா, இன்னும்கூட கொஞ்சம் அதிகமாக சீட் வரும்னு எதிர் பார்த்தாங்க. இந்த முறை கண்டிப்பா ஆட்சிக்கு வந்துடுவோம்னு ரொம்ப உறுதியா நினைச்சாங்க. நான்தான் அங்கங்க வரக்கூடிய சில செய்திகளையும், சிலர் பேசுவதையும் கேட்டுட்டு கொஞ்சம் பயந்தேன். ஆனா, இவங்க பயங்கர மன உறுதியோட இருந்தாங்க.
தேர்தல் களம் பற்றி உங்களிடம் கலந்து ஆலோசித்தாரா? நீங்கள் சொன்ன முக்கியமான விஷயம் எது?
அரசியல் விஷயத்தில் எல்லாம் எப்பவும் எங்கிட்ட கருத்து கேட்க மாட்டாங்க. தவிர, நானும் அப்படியெல்லாம் கருத்து சொல்ல மாட்டேன். நான் ஓட்டுக் கேட்கப்போன இடங்களில், ஜனங்க என்னைத் தேடி வந்து சொன்ன குறைகளை, அவங்களோட கோரிக்கைகளைத் தொகுத்து நான் இவங்ககிட்டே சொன்னேன். நிறைய பேர் முதியோர் உதவித்தொகை வேணும்னு கேட்டாங்க. அந்த மாதிரி நான் கேட்ட விஷயங்களைச் சொல்வேன். அதுவும் கூட,
என் கணவருக்கும் மக்களுக்கும் இடையில் ஒருபாலம் மாதிரிதான்.
உங்கள் மகன் உதயநிதிதான் இந்த தேர்தலின் மேன் ஆஃப் தி மேட்ச் என்கிறது சமூகவலைதளம். அவர் அரசியலுக்குப் பொருத்தமானவர் என்று உங்களுக்கு எப்போது முதலில் தோன்றியது?
உதயாவுக்கு இது கொஞ்சம் ரத்தத்திலேயே ஊறின விஷயம்தானே? அது, அரசியல் செயல்பாடுகளைத் தன்னோட சின்ன வயசுல இருந்தே பாத்துக்கிட்டேதானே இருக்கு. தவிர, எலெக்ஷன் நேரங்களில் உதயா, அவங்க தாத்தாவுக்கு, அப்பாவுக்குன்னு எல்லாம் ஜனங்ககிட்டே பேசி ஓட்டு கேட்கப் போயிருக்கு. உதயா முதன்முதல்ல மேடையேறி அல்லது வேன்ல ஏறி பிரசாரம்னு போனதுன்னா, இதுக்கு முன்னாடி நடந்த எம்பி எலெக்ஷன் போதுதான். அந்த பிரசாரம் அப்பவே, `உங்க பையன் ரொம்ப நல்லா பேசறாரு. அவர் மக்களை அணுகும் முறையும் நல்லா இருக்கு. அவருக்கு நல்லா கூட்டம் கூடுது. குறிப்பா, யங்க்ஸ்டர்ஸ் ரொம்ப அவர் பேச்சை ரசிக்கிறாங்க' அப்படின்னு பலர் சொல்லிட்டு இருந்தாங்க. அப்போவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால இந்த சட்டசபை எலெக்ஷன்ல உதயா பிரசாரம் பண்றப்போ ரொம்ப சுலபமா பண்ணிடுச்சு. குறிப்பா, இந்த முறை #எய்ம்ஸ்செங்கலை வச்சு சொன்ன விஷயங்கள் ரொம்பப் பேருக்கு பிடிச்சு போயிடுச்சு
தேர்தலுக்குப் பிறகு குடும்பத்துடன் அந்தக் கோடை ட்ரிப் எப்படி இருந்தது?
தேர்தல் பிரசாரத்துக்காக ராத்திரியும் பகலுமா ரொம்ப உழைச்சு களைச்சுப் போன இவங்களுக்கு ஒரு மாற்றம் வேணும்னு ஒரு மனைவியா நான் நினைச்சேன். தவிர, இந்த முறை எங்க பையனும் தீவிர பிரசாரம் செஞ்சது. எங்காவது ஒரு நாலு நாள் ரெஸ்டுக்கு போகணும்னு நினைச்சோம். கொரோனா நேரம் வேற. அதனால எங்க போறதுன்னு தெரியலை. திடீர்னுதான் கொடைக்கானல்னு பிளான் பண்ணி போனோம். தவிர நாங்க குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடக்கூட ரொம்ப நாளா முடியல... வீட்ல எல்லாரும் சேர்ந்து ஒண்ணா சாப்பிட்டோம். சேர்ந்து பேசினோம். இவங்களும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தாங்க. பசங்களோட பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ் விளையாடினாங்க. இவங்களோட ஸ்ட்ரெஸ் எல்லாம் கொஞ்சம் குறைஞ்சு, உடம்பும் பழையபடி உற்சாகமா ஆச்சு.
தேர்தலில் வெற்றி அறிவிக்கப்பட்ட பின் இவர் பேசிய அந்த முதல் தருணம்?
தேர்தல் ரிசல்ட் வந்த அன்னிக்கு காலையில் 8 மணிக்கு நான் பூஜை ரூமுக்குள்ள போனதுதான் எனக்குத் தெரியும். அங்கேயேதான் இருந்தேன். எங்க குல தெய்வமான அங்காளம்மன்கிட்டே வேண்டிகிட்டிருந்தேன். அந்த தெய்வத்துகிட்ட பேசிட்டே இருந்தேன். டிவி இருந்த பக்கமே நான் வரல. எனக்கு ரொம்ப டென்ஷனாதான் இருந்தது. இவங்களோ காலைல இருந்தே கான்ஃபிடன்ட்டா, ஹால் டிவி முன்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. மதியம் 1 மணி போல எங்க மருமகள் வந்து, பூஜை ரூமுக்குள்ளே இருந்த என்னைப் பார்த்துட்டு, ``ஏன் அத்தை இங்கேயே உக்கார்ந்துட்டு இருக்கீங்க... நாமதான் ஜெயிச்சிருக்கோம். வந்து டிவி பாருங்க" அப்படின்னு கூப்பிட்டுச்சு. எங்க வீட்டுக்காரங்க தன்னோட ஜெயிச்ச சர்டிஃபிகேட்டை என்கிட்ட பூஜை ரூம்ல வச்சுத் தந்தப்போ, நான் அப்படியே கலங்கி அழுதுட்டேன். `ஏன் அழுறே... நாமதான் ஜெயிச்சிட்டோமில்லே... எல்லாம் சரியாயிடுச்சு... நல்லபடியா ஆயிடுச்சு!' அப்டினு சொல்லி இவங்க என் தோள்தொட்டு ஆறுதல் படுத்தினாங்க
வென்ற பிறகு உதயநிதி உங்களைச் சந்தித்தபோது சொன்ன விஷயம்?
உதயா நிச்சயமா ஜெயிச்சுடும்னு எனக்குத் தெரியும். அதுவும் அந்த சேப்பாக்கம் தொகுதி, மாமா நின்ன தொகுதி வேற.அங்கே உதயாவுக்காக ஓட்டு கேட்க நான் ரெண்டு நாள்தான் போனேன். அப்பவே உதயா, அம்மா நாம ஜெயிச்சுடுவோம்னு சொல்லுச்சு. அதுலயும் அதிக ஓட்டு வாங்கி ஜெயிச்சதில் ஒரு அம்மாவா எனக்கு இன்னும் ரொம்ப சந்தோஷம்
ஜெயிச்ச சர்டிஃபிகேட்டை உதயா கொண்டாந்து கொடுத்தப்போ, நான் அப்படியே கண் கலங்கிட்டேன். ``உங்க தாத்தாவை விட, அப்பாவை விட நீ இன்னும் அதிகமா உழைக்கணும். ஜனங்களுக்கு நிறைய நல்லது செய்யணும். நல்ல பெயர் வாங்கணும்" அப்படின்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணிட்டு கொடுத்தேன்.
மறக்க முடியாத ஒரு தருணம்?
என்மாமனார் கலைஞர் அவர்கள் தவறினப்போ, மெரினாவில் இடம் கிடைக்காமல் பட்டபாடு இருக்கே. அது உண்மையிலேயே எங்களால வாழ்க்கையில் மறக்கவே முடியாத தவிப்பான, கொடுமையான நிமிடங்கள்! எங்க வீட்டுக்காரங்களை அப்படியொரு டென்ஷனோடு நான் பார்த்ததே கிடையாது... கடைசில அந்த இடம் கிடைச்சதுன்னு தீர்ப்பு வந்தாச்சுன்னு சொன்னப்போ, இவங்க அப்படியே வெடிச்சு அழுதாங்க பாருங்க, உண்மையிலேயே அந்த நாளை மறக்க முடியாது.
தோல்விகளைச் சந்திக்கும்போது ஸ்டாலின் அதை எப்படி எடுத்துக்கொள்வார்?
இவங்க எப்பவுமே தன்னோட உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டாங்க. போன தடவை சட்டசபைத் தேர்தல்லகூட ரொம்ப சின்ன வித்தியாசத்தில்தான் வெற்றி பறிபோனது. எல்லாருமே அந்தத் தடவை ஜெயிச்சிடுவோம்னுதான் நினைச்சுட்டு இருந்தோம். நான் இதுல ரொம்ப அப்செட் ஆயிட்டேன். அப்புறம் இவங்கதான் வந்து என்னை ஆறுதல்படுத்தினாங்க. லேடீஸ் உணர்ச்சிகளை டக்னு வெளிகாட்டிடுவோம். ஆண்கள் அப்படிக் காட்ட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அவ்வளவு உழைச்சும் தோல்வி கிடைச்சுட்டது அப்படிங்கிற நிலையிலேயும், இவங்க சோர்வடையாம அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ஐயோ... நம்மளால எல்லாம் ஆகாது!
`இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடம் எடுத்துக்கணும், அதை எப்படி சரி பண்ணணும்' அப்படிங்கற விஷயத்தில் இவங்க பிஸியா இறங்கிடுவாங்க. அந்த மாதிரி சீரமைப்பு விஷயங்கள்ல அவங்க கவனம் போறதால், தோல்வியால் துவளாம, அந்த உணர்வுகள்ல இருந்து சுலபமா வெளியில் வந்து வேலை பார்க்கிறாங்க போலிருக்கு.
முன்னே இவங்க நண்பர் பொய்யாமொழி இருந்தார். எதுன்னாலும் மனசுவிட்டுப் பேசுவாங்க. இப்போ இவங்க யார்கிட்டேயும் மனசு திறந்து எந்த மனச்சுமையையும் காட்டிக்க மாட்டாங்க. என்கிட்டேகூட குடும்ப விஷயங்கள்தான் பேசுவாங்க. அதனால் இவங்க, தன்னோட ஸ்ட்ரெஸ் குறையறதுக்காக விளையாடுறதுண்டு. தவிர அவங்களுக்கு விளையாடுறதும் ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் வேளச்சேரியில் இருந்தவரைக்கும், கிரிக்கெட்கூட விளையாடுவாங்க. இப்போ பில்லியர்ட்ஸ் ரொம்ப பிடிச்சு விளையாடுறாங்க. ஃபிரண்ட்ஸோட சேர்ந்தோ, இல்லன்னா வீட்டிலேயே இருக்கக் கூடிய சூழலில் பசங்களோடவோ சேர்ந்து விளையாடுவாங்க.
உதயநிதி மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு வழக்கம்?
பொதுவா லேட் நைட்டில் படுக்காதீங்க, வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு சீக்கிரம் படுங்க. சீக்கிரம் எழுந்திரிங்கன்னு நான் சொல்வேன். மற்றபடி பணி விஷயமா நாலு இடத்துக்குப் போகக்கூடிய பையன் அப்படிங்கிறதால, உடல்நிலையில் கொஞ்சம் கவனம் எடுக்கணும் அப்படிங்கறது என்னோட ஒரு வேண்டுகோள்.
தயாளு அம்மாள் என்ன சொல்லி வாழ்த்தினார்?
அத்தைக்கு என்னவோ புரிஞ்சிருக்கு. டிவி பார்க்கும்போதே, அதில் வர்ற நம்பர்களைப் பார்க்கிறப்போவே, `நாம ஜெயிச்சிட்டோமில்ல... #ஸ்டாலின்தானே_முதலமைச்சர்..!' அப்படின்னு அங்கே வேலை செய்ற பெண்கள்கிட்டே கேட்டாங்களாம். எங்க வீட்டுக்காரங்க ஜெயிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம் நாங்க அத்தையைப் பார்க்கப் போனப்போ, அப்படி ஒரு சந்தோஷம் அவங்க முகத்துல. `நீ ஜெயிச்சுட்டேதானே ஸ்டாலின்... முதலமைச்சர் ஆயிட்டியா?" ன்னு கேட்டாங்க. `ஆமாம்மா. நான் முதலமைச்சரா ஆயிட்டேன்'னு சொல்லி இவங்க, அம்மா கால்ல விழுந்ததும், ஆசீர்வாதம் பண்ணினாங்க.
இந்தத் தேர்தலில் நீங்கள் ரொம்பவும் ரசித்து மகிழ்ந்த தி.மு.க அல்லாத ஒரு வெற்றியாளர் என்றால் யாரைச் சொல்வீர்கள்?
மம்தாபானர்ஜிதான். ஒரு பெண்ணாக இருந்து அவங்க ரொம்ப போராடி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்காங்க. ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம். அவங்களுக்கு என்னோட வாழ்த்துகள்
.
மு க அழகிரி, ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்... ஸ்டாலின் என்ன சொல்கிறார்?
இந்த விஷயம் எனக்கும் தெரியாது. எங்க வீட்டுக்காரங்கதான் தனக்கு அவங்க அண்ணன் வாழ்த்து சொன்னதாவும், தானும் நன்றி
ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்தெல்லாம் சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களை, கேலிகளை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
சமூக வலைதளங்கள்ல நான் இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப பார்க்க மாட்டேன். யாராவது எனக்கு சிலதை அனுப்புவாங்க. அப்பல்லாம் தோணும், பழுத்த மரம்தான் கல்லடி படும்னு...
இதெல்லாம் பார்த்து எனக்கு சில நேரத்துல மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா இவங்களோ, எதைப் பத்தியும் கவலைப்படவே இல்லை. எதையும் காதில் போட்டுக்கல. தன் உழைப்புதான் நிச்சயம் தனக்கு வெற்றி தரும்னு நம்புறவங்க இவங்க. அதனால் தன் வேலையை அதே அர்ப்பணிப்போட பண்ணிகிட்டே இருந்தாங்க... எத்தனை பேச்சுகள், எத்தனை கிண்டல்கள் பண்ணாங்க... எனக்கென்னவோ ஒரு விஷயம் மனசுக்குள்ள தோணிகிட்டே இருந்தது. இப்படிப் பேசுறவங்க, ஒருநாள் நம்ம வீடு தேடி வருவாங்கன்னு தோணிட்டே இருந்தது. இப்போ அதான் நடக்க ஆரம்பிச்சிருக்கு. வார்த்தைகளைக் கொட்டிடலாம், ஆனா அள்ள முடியாதுங்கிறதை நாம புரிஞ்சுக்கணும்.
நடிகர், அரசியல்வாதி... உதயநிதி விஷயத்தில் உங்கள் முதல் சாய்ஸ் எது?
உதயாவை முதல்ல ஒரு மகனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க கேட்ட சாய்ஸ்படி பார்த்தா, உதயா ஒரு நடிகர் அப்படிங்கிறதைவிட அரசியல்வாதியாதான் எனக்குப் பிடிக்கும். உதயா நடிக்கப் போறப்பவே எனக்கு மனசுக்கு அவ்வளவா ஏற்பு இல்லை. சரி, உதயாவும் ஆசைப்பட்டுச்சு, கிருத்திகாவும் சரின்னுடுச்சு... அதனால் உதயா நடிக்கப்போனது. எங்க வீட்டுக்காரங்க டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் நடிச்சப்போவே, நடிப்பு வேணாம்னு ஒரு மனைவியா நான் விருப்பப்பட்டேன். இவங்களும் என் மனசை மதிச்சு, நான் கேட்டுகிட்ட அப்புறம் நடிக்கல. அரசியல், நடிப்புன்னு அதிலேயும் இதிலேயுமா இருக்கக் கூடாது.
அரசியல் ஒரு சமூக சேவைமாதிரி இறங்கினா முழுசாஇறங்கிச் செய்யணும்.
உதயாவை அரசியல்வாதியாதான் எனக்கு ரொம்பபிடிக்கும்.
நன்றி விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக