குறிப்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த மக்கள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், அதைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது அதிவேகத்தை அடைந்துள்ள கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் தங்களின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட ராமதாஸ் அதே அறிக்கையில் மேலும்,
“ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு பெரும் காரணமாக இருப்பவை மதுக்கடைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது மதுக்கடைகள் மூடப்படவிருப்பதால் அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுக்குள் வரக்கூடும்.
மதுக்கடைகள் மூடப்படுவது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் இருந்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும். மதுக்கடைகள் மூடப்படவுள்ள அடுத்த இரு வாரங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாக அமையும். மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வரக்கூடும். கொரோனா உதவியாக தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.2000 மதுக்கடைகள் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே செல்லாமல், ஏழைக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படும். இவை அனைத்தும் மதுக்கடை மூடலின் மகிழ்ச்சிகள்.
மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்படும் மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பது தான்”என்று குறிப்பிட்டவர் அரசுக்கு சில யோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தார்.
அதாவது, “மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழக அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. தமிழக அரசின் இன்றைய ஆண்டு வருமானத்திற்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும். தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தினால் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020&21 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சத்து, 91,896 கோடி ஆகும். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 4 லட்சத்து 18,379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். எனவே வருவாய் இழப்பு குறித்த கவலை வேண்டாம்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும். இளைய தலைமுறையினர் மது அரக்கனின் பிடியிலிருந்து மீள்வார்கள். மக்கள் நோயின்றி வாழ்வார்கள். இவ்வளவு நன்மைகளை வழங்கும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஒற்றைக் கையெழுத்து போதுமானது. எனவே, எந்த வித தயக்கமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு ஆணையிட வேண்டும்”என்று கேட்டுக் கொண்டிருந்தார் ராமதாஸ்.
இந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் சென்றது. தனது தந்தை கலைஞர் போலவே பத்திரிகை செய்திகளுக்கும், சமூக தள கருத்துகளுக்கும், தலைவர்களின் அறிக்கைகளுக்கும் மதிப்பு கொடுத்து அதற்கு பதிலளிப்பதை நடவடிக்கை எடுப்பதை முதல்வரான ஓரிரு நாட்களிலேயே ஸ்டாலினும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்.
டாக்டர் ராமதாஸின் அறிக்கையையும், அதில் மதுக் கடைகள் இல்லாமலும் வருமானம் ஈட்ட முடியும் என்ற அவரது புள்ளி விவரங்களையும் படித்த முதல்வர், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனிடம் விவாதித்துள்ளார்.
கொஞ்ச நேரத்தில் துரைமுருகனே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு போன் போட்டுள்ளார். பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு, ‘முதல்வர் உங்ககிட்ட பேச விரும்புறார். எப்ப ஃப்ரியா இருப்பீங்க?’என்று கேட்டதும் நெகிழ்ந்து போன டாக்டர் ராமதாஸ், சில நிமிடங்களில் பேசத் தயார் என்று கூறினார்.
அதன்படியே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொஞ்ச நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். பரஸ்பரம் இருவரும் உடல் நலம் விசாரித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். ‘அம்மா எப்படி இருக்காங்க?’என்று முதல்வரின் தாயார் தயாளு அம்மையாரின் உடல் நலம் குறித்தும் ராமதாஸ் விசாரித்தார்.
”உங்க அறிக்கைய படிச்சேன். ரொம்ப நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க” என்று ஸ்டாலின் கூற,
“சாராயத்தை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையே. போன ஊரடங்குலயே டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கேட்டிருந்தேன். இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம். அப்படியே அதை மூடிப் போட்டுடுங்க”என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸின் ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் நன்றி சொன்ன முதல்வர், “நன்றிங்க அய்யா. தொடர்ந்து ஆலோசனைகள் கொடுங்க. முடிஞ்சவரைக்கும் செயல்படுத்துறோம்”என்று தொலைபேசியில் விடைபெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து பாமகவின் தலைமை நிலையம் வெளியிட்ட செய்தியில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்கள். தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் மருத்துவர் ராமதாஸை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த மருத்துவர் ராமதாஸ், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக