ஞாயிறு, 9 மே, 2021

ஊரடங்கில் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு நடந்து கொள்ளக்கூடாது! முதல்வர் ஸ்டாலின் உறுதி

இறைச்சி கடைகள்

Velmurugan P - :tamil.oneindia.com :சென்னை: முழு ஊரடங்கு நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு மக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
ஏனெனில் வாகன சோதனையில் கடுமை கூடாது, வணிகர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிக்கையை வழக்கமானதாக பார்க்க முடியாது,
கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காலத்தில் தமிழக காவல்துறையினர் பல இடங்களில் கடுமையாக நடந்து கொண்டனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகே காவல்துறையினரிடம் மென்மையான அணுகுமுறை வெளிப்பட்டது.


அதுவரை கடைகளை குறித்த நேரததில் மூடாத வணிகர்கள், முககவசம் அணியாதவர்கள், ஊரடங்கு காலத்தில் ஊர் சுற்றிய இளைஞர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர். வாகனங்களை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு சீல் வைத்தனர். கடைகளுக்கு அபராதமும் விதித்தனர். முககவசம் அணியாமல் சுற்றியவர்களை விரட்டி விரட்டி அடித்தனர். இபாஸ் இல்லாமல் பக்கத்து மாவட்டத்திற்கு செல்ல முடியாது என்கிற அளவிற்கு ஊரடங்கு மிக கடுமையாக இருந்தது.

ஆனால் இப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் தேவை இல்லை என்றாலும், கடந்த ஆண்டு போட்ட ஊரடங்கிற்கு சற்றும் குறைவில்லாத ஊரடங்குதான் இனி அடுத்த 2 வாரங்களுக்கு போடப்பட உள்ளது. இது இரண்டு வாரங்களை தாண்டுமா அல்லது சொன்னபடி 24ம் தேதி காலையுடன் முடியுமா என்பது நோய் தொற்றின் தீவிர நிலையை பொறுத்து உள்ளது.

முக ஸ்டாலின் உறுதி இந்த ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்து, மக்கள் வருவாயை இழப்பார்கள் என்பதால் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்பதில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அதன் வெளிப்படாகவே ஊரடங்கில் காவல்துறையினர் கன்னியமாகவும், கனிவாகவும் மக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று டிஜிபி முழு நீள அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான அம்சங்களை இப்போது பார்ப்போம். பொது ஒலிபெருக்கியை பயன்படுத்தி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது. பொது மக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். ட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்

கண்ணியமான முறை வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளை கையாளுதல்: வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்

இறைச்சி கடைகள் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும் 09.05.2021 அன்று மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடம் கூட்டம் நடத்தி ஊரடங்கு கால கட்டத்தில் அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதை உறுதி செய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்துதல் கூடாது. மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான வட்டங்களை வரைவதை உறுதி செய்ய வேண்டும்

வாகன சோதனையின் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்: ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும். இ பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் படி அனுமதித்தல் வேண்டும்.சோதனை சாவடிகளில் வாகன பரிசோதனை மேற்கொள்ளும் போது அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வழிதடத்தில் வைத்து சோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்துதல் வேண்டும். கைப்பற்றப்படும் வாகனங்களை காவல்நிலையத்தில் வைத்திருத்தல் கூடாது. காவல் நிலையத்தில் அருகே உள்ள ஒரு மைதானத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: