மின்னம்பலம் :மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (மே 9) காலை 11.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை நீடித்தது.
அமைச்சரவைக் கூட்டம் தொடங்கும்போதே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இருப்பது வழக்கம். அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள், நிதி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன,
மருத்துவத்துறை, வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் கொரோனா தடுப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு வழங்கினார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எல்லாம் வெளியே போன பின் அமைச்சர்களை மட்டும் அவரவர் இடங்களில் அமரச் சொல்லியிருக்கிறார் முதல்வர்.
அதன் பின் அமைச்சர்களிடம் மட்டும் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசியிருக்கிறார். சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
“உங்களை மட்டும் ஏன் இருக்கச் சொன்னேன் என்றால் இந்த அரசை எப்படி நடத்த வேண்டும் என்று முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சில தெளிவுகளை உங்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
உங்கள் துறைகளைப் பற்றி முதலில் ஆழ்ந்து படியுங்கள். அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். செய்தியாளர்களோ ஊடகங்களோ கேட்டால் துறை ரீதியான விஷயங்களை தடுமாறாமல் சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். தெரிந்த விஷயங்களை தெளிவாக சொல்லிவிடுங்கள்.
டிரான்ஸ்பர் உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் வெளிப்படையாக இருங்கள். எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுத்துவிட வேண்டாம்.
இங்கே சீனியர் அமைச்சர்களும் இருக்கிறீர்கள், புதுமுக அமைச்சர்களும் இருக்கிறீர்கள். அமைச்சர் என்ற அதிகாரத்தின் வலிமை உங்கள் எல்லாருக்கும் தெரியும். அதேநேரம், எக்காரணத்தை முன்னிட்டும் போலீஸ் தொடர்பான விஷயங்களில் தலையிடாதீர்கள். சட்டத்துக்குப் புறம்பாக ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, ஒருவரை சிக்க வைக்க வேண்டுமென்றோ, வேறு எந்த கோரிக்கைக்காகவோ போலீஸ் நிலையங்களுக்கோ, போலீஸ் அதிகாரிகளுக்கோ நீங்கள் போன் பண்ணக் கூடாது. நியாயமான விஷயமாகவே இருந்தால் கூட போலீஸ் அதிகாரிகளுக்கு போன் பண்ணக் கூடாது.
ஏனென்றால் நான் தான் போலீஸ் துறைக்கு அமைச்சர். அதனால், எனக்குத் தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால், . முதல்வர் அலுவலக அதிகாரிகளை தொடர்புகொள்ளுங்கள். நியாயமான விஷயமாக இருந்தால் அவர்கள் செய்து தருவார்கள்.
பத்து வருடம் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கிறோம். மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்திருக்கிறோம். இந்த ஆட்சியை தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் என்னுடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்கள் மீது ஏதேனும் புகார்கள் எனக்கு வந்தால் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரியவாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையே என்றும் எப்போது கிடைக்கும் என்று பலர் காத்திருக்கிறார்கள். அதை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நல்லவிதமாக செயல்பட்டு நமது அரசுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுங்கள்”என்று சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அமைச்சர்களுக்கு அறிவுரைகளையும், உத்தரவுகளயும் வழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக என்றால் “லோக்கல் ரவுடியிசம்” என்ற ஒரு முத்திரை பொதுவெளியில் நிலவுகிறது. அதை முறியடிக்க முதல்வர் உறுதி பூண்டிருக்கிறார். அமைச்சரவையில் பல இளைஞர்கள் இருக்கிறார்கள், ஆர்வக் கோளாறில் துடிப்பாக செயல்பட்டுவிடப் போய் அது கட்சிக்கும் ஆட்சிக்கும்கெட்ட பெயர் ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர். அதன் விளைவுதான் அமைச்சரவைக் கூட்டத்தில் இப்படி பர்சனல் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் என்கிறார்கள்.
முதல்வரின் உத்தரவுகளை அமைச்சர்கள் பின்பற்றினால், அப்படி பின்பற்றத் தவறியவர்களுக்கு முதல்வரின் எச்சரிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் இது நல்லாட்சியாகவே தொடரும்.
-ராகவேந்திரா ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக