tamil.samayam.com/ : கந்தசாமி ஐபிஎஸ் : வலுவான ஆதரங்களை திரட்டி அமித்ஷாவை கைது செய்தவர்
கன்னியாஸ்திரி வழக்கை 16 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்து கண்டுபிடித்தவர்
கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
முதல்வரின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்டவர்கள் நியமனம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி ஐபிஎஸ், காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது உற்று நோக்கப்படுகிறது.
ஏனெனில், தேர்தலுக்கு முன்பு தமிழக ஆளுநரிடம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அமைச்சர்கள் மீது நீண்டதொரு ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை திமுகவினர் கொடுத்திருந்தனர். அதன் மீதான ஆரம்பகட்ட விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்னரும் கூட திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமி, வலுவான புலனாய்வு திறன்களுக்காக நன்கு அறியப்பட்டவர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு அரசியல் வாதிகளை அலறவிட்டவர்தான் இந்த கந்தசாமி ஐபிஎஸ். இன்னும் சொல்லப்போனால், விக்ரம் நடித்த கந்தசாமி என்ற திரைப்படத்தில் அவர் கந்தசாமி என்ற சிபிஐ அதிகாரியாக வேடமேற்றிருப்பார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
2007ஆம் ஆண்டு சிபிஐயில் பணியில் இருந்த கந்தசாமி ஐபிஎஸ், ரூ.375 கோடி மதிப்பிலான லாவ்லின் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயனுக்கு எதிராக ஆவணங்களை திரட்டியவர். கேரள மாநிலம் கோட்டயத்தில் 1992ஆம் ஆண்டு பிணமாக கிடந்த 19 வயது கன்னியாஸ்திரி வழக்கை 16 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்து, 2008ஆம் ஆண்டில் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் இரண்டு பாதிரியார்கள், ஒரு கன்னியாஸ்திரியை கைது செய்தது.
நாம் அனைவருக்கும் சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். குஜராத் மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த என்கவுன்டர்கள் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவரும், அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சரும், பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான அமித் ஷாவின் பெயரும் அந்த போலி என்கவுன்டரில் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதும், அவருக்கு எதிராக வலுவான ஆதரங்களை திரட்டி அவரை கைது செய்தவர்தான் இந்த கந்தசாமி ஐபிஎஸ்.
இதுபோன்று பல்வேறு அதிரடிகளை தன்னகத்தே கொண்டிருப்பவரும், நிதிக்குற்றங்களை சிறப்பான நுண்ணறியும் திறன் பெற்றவருமான கந்தசாமி ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அதிமுகவின் முன்னாள் மாண்புமிகுக்கள் கலக்கத்தில் உள்ளனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக