LR Jagadheesan : பாதி கிணறு தாண்டியிருக்கிறது பிரிட்டன். கொரோனாவை சமாளிக்க முடியாமல் துவக்கத்தில் இந்தியாவைவிட மிக மோசமாக திணறிய பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.
ஆனால் கொள்ளைநோயின் பிற்பகுதியில் தடுப்பூசியை இலவசமாகவும் விரைவாகவும் பொதுமக்களுக்கு கொடுத்ததனால் தனது முந்தைய தவறுகளையும் கடந்து முழு முடக்கத்தில் இருந்து பிரிட்டன் பெருமளவு வெளியில் வந்திருக்கிறது.
இதற்கான காரணிகளில் முதன்மையான காரணி பரவலான இலவச தடுப்பூசி விநியோகமே. அதுவும் உலக அளவில் அதிகபட்ச விமர்சனங்களை இன்றளவும் எதிர்கொண்டுவரும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிதான் இங்கே பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட அதிகம் பேருக்கு கொடுக்கப்பட்டது.
அதன் எதிர்மறை பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுவருவதோடு அது தொடர்பான தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகளுக்கேற்ப இந்த தடுப்பூசியை யாருக்கு கொடுக்கலாம் யாருக்கு தவிர்க்கவேண்டும் என்கிற அளவுகோள்கள் தொடர்ந்து மாற்றி அமைக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு துவக்கத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி கொடுக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போது அந்த வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி என்றும் மற்றவர்களுக்கு அதாவது 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு வேறு தடுப்பூசிகள் என்றும் இப்போது மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
காரணம் அறிவியல் என்பதும் மருத்துவம் என்பதும் தொடர் ஆய்வுகளுக்கேற்ப தம்மை தொடர்ந்து மாற்றி அமைத்துக்கொண்டபடி முன்னேறிச்செல்லும் செய்முறைகள் என்பது குறித்து மருத்துவ அறிவியல் துறையினருக்கும் அரசுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இருக்கும் புரிதல். (இங்கும் தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் உண்டு. ஆனால் எண்ணிக்கை குறைவு)
இத்தகைய விஞ்ஞானக்கண்ணோட்டம் இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளில் இன்னும் உரிய அளவுக்கு உருவாகவில்லை என்பதே இந்த கொரோனா கொள்ளைநோயை விட மிகப்பெரிய ஆபத்து. அறிவியல் குறித்த ஆரோக்கியமான புரிதல் பொதுமக்களிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் வலதுசாரி அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மட்டுமல்ல ஊடகங்களும் சேர்ந்துகொண்டு ஓயாமல் உழைக்கின்றன என்பது தான் உண்மையிலேயே விபரீதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக