ஞாயிறு, 9 மே, 2021

கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம்! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12 சித்த மருத்துவ மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
minnambalam.com :கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் சித்த கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 9) தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ வியாசர்பாடியில் சித்த கொரோனா சிகிச்சை மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் வழங்கிய அறிவுரையின் படி கொரோனாவிற்கு சித்தா, யுனானி ஆகிய சிகிச்சைகளை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது 12 இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் செயல்ப்பட்டு வருகின்றன. இன்னும் 1 வாரத்திற்குள் கூடுதலாக 12 மையங்கள் திறக்கப்படவுள்ளது.

கடந்தாண்டில் சித்தா மருத்துவ முறை மூலம் 2600க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். அந்த வகையில் மீண்டும் சித்தா மையங்கள் தொடங்கப்படுகிறது. இங்கு லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தொற்று வந்தவுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், ஆக்சிஜன் படுக்கை தேவை என்று மக்கள் என்ணாமல், இதுபோன்ற மையங்களை பயன்படுத்த வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகளில் மக்கள் நெருக்கடியை குறைக்கும் வகையிலும், லேசான அறிகுறி உள்ளவர்களை சித்த மருத்துவத்தின் மூலம் குணமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையிலும் இந்த சித்தா மருத்துவ மையம் தொடங்கப்பட்டு வருகிறது.

அம்பேத்கர் கலை கல்லூரியில் 240 படுக்கை வசதிகள் உள்ளன. 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளுக்கு உள்மருந்தாக கபசுர குடிநீர், அமுக்கார சூரணம் மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, வசந்த குசுமாகர மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு ஆகியவை வழங்கப்படுகிறது.

வெளிமருந்தாக கற்பூராதி தைலம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும் யோகா, மனநல ஆலோசனை, மூலிகை நீராவி சிகிச்சை போன்றவை வழங்கப்படுகிறது. சித்தா மருத்துவ மையத்தில் மிகச் சிறந்த தரத்தில், தரம் மிகுந்த சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு திடகாத்திரமான உணவுகளை வழங்குவதில் பெருமை அடைகிறோம்.

அதுபோன்று ஏ.எம் ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அடுத்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. ஏற்கனவே சென்னையில் 21 ஸ்கிரீனிங் சென்டர்கள் உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையினை கருத்தில் கொண்டு அதனை 30 ஸ்கிரீனிங் சென்டர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சித்த, ஆயுர்வேதம்,யுனானி போன்ற மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற துறைகளில் உள்ள மருத்துவர்கள், சேவை மனப்பான்மையுடன் புதிதாக எங்கேயாவது சித்த மருத்துவ மையத்தை தொடங்க விரும்பினால், அவர்களுக்கும் இந்த துறை உடனிருந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: