tamilminutes.com : பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளிடமிருந்து 40 லட்சம் ரூபாய்கள் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 25 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு செய்தி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.
அதே அதிகாரிகள்தான், அதே சட்டங்கள்தான். அமுல்படுத்தும் முறை மட்டும் இரண்டே நாட்களில் அதிரடியாகிவிட்டது. ஏனெனில் மக்களின் அவசரத் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பது இழவு வீட்டில் பணம் பிடுங்குவதற்குச் சமம். ஆம்னி பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றால் அதுவும் இல்லை. நீங்கள் மதுரை மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் வெறும் கையுடன் சென்று இறங்கினாலும் ஐந்தாறு பேர் வரை 'ஸார், சென்னையா?' என்று உங்களை அணுகுவார்கள். லாபம் கொழிக்காமல் இத்தனை ஏஜெண்ட்கள் சாத்தியமில்லை.
இதற்கும் மேலாக அரசு பஸ் டிரைவர்களுடனேயே ரகசிய ஒப்பந்தம், செல்லும் வழியிலுள்ள மோட்டல்களுடன் வருமானத்தில் பங்கு, அதீதப் பார்சல் கட்டணங்கள்... என்று ஆம்னி பஸ்களுக்கு வருமான மூலங்கள் மிக மிக அதிகம். இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான பயணிகளை ஏற்றுவதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்கள் எல்லாம் இவர்களுக்குப் பணம் காய்க்கும் மரங்கள். கோயம்பேட்டில் மூச்சுத் திணறி நிற்கும் கூட்டத்தைப் பார்த்துப் பின்வாங்கி அப்படியே சைடில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒதுங்கினால் அவர்கள் சொன்னதுதான் பயணக் கட்டணம், லக்கேஜ் கட்டணம் எல்லாம். சம்மதம் இல்லையென்றால் பண்டிகையைச் சாலையில் கொண்டாட வேண்டியதுதான். விலைபோகும் ஒவ்வொரு டிக்கெட்டும் ப்ளாக் டிக்கெட்தான்.
இந்தக் கொள்ளையை அசைத்துப் பார்த்திருக்கிறது புதிய அரசு. ஆம்னி பஸ்களில் பெரும்பாலானவை அரசியல் புள்ளிகளுக்கும் சொந்தமானவைதான். தேவையில் இருப்பவனிடம் தேட்டை போடுவது அசிங்கம் என்று ஒருவேளை இப்போது அவர்களுக்கு மட்டுமல்ல எல்ளோருக்குமே புரிய ஆரம்பித்திருக்கலாம். அதுவும் அரசு அமைந்த இரண்டாவது நாளிலேயே இம்மாதிரி மெகா நடவடிக்கைகள் என்பது இனி வரும் காலத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று அரசு தீர்மானித்து விட்டதாகவே தோன்றுகிறது.
லாஸ்ட் பட் நாட் ளீஸ்ட், இப்படி முறைகேடல் விஷயங்களில் நியாயமான அபராதம் வசூலிக்கப் பட்டாலே அதுவே அரசுக்குப் பெரிய வருமானமாக இருக்கும். ஏனென்றால் இன்று முறைகேடுகள் இல்லாத இடமே இல்லை, கல்விக் கட்டணக் கொள்ளைக் கல்விக் கூடங்கள், உயிரைப் போக்கும் அளவு கட்டணங்கள் வசூலிக்கும் உயிர் காக்கும் மருத்துவமனைகள் உடபட. அப்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த அபராதம் வசூலிக்கப்பட்டால் டாஸ்மாக் என்ற கருமாந்திரத்தை மட்டுமே வருமானத்திற்கு நம்பி அரசின் பட்ஜெட் அமையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக