நடராஜன் சுந்தர் - பிபிசி தமிழுக்காக : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள ஒட்டனந்தல் என்ற ஊரில் நடத்தப்பட்ட உள்ளூர் பஞ்சாயத்தில்,
பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள், ஆதிக்க சாதியினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போலத் தோன்றும் காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவின.
இதற்குக் காரணமானவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித்துகள் மீது எதிர்த் தரப்பினர் தந்த புகாரின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கேட்டறிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.அப்போது பேசிய அவர், "ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி கோயில் திருவிழா நடைபெற்றது.
கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக உள்ள இந்த சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை காவல்துறையினர் சுட்டிக்காட்டியதை அடுத்து கோயில் திருவிழாவை எளிய முறையில் அவர்கள் நடத்தி முடித்தனர்.
ஆனால், அன்று மாலை ஊரடங்கை மீறி தலித் பகுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.காவல்துறையினர் இசைக் கச்சேரி நடைபெற்ற பகுதிக்குச் சென்று நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கிருந்த இசைக் கருவிகள் மற்றும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்," என்றார் அவர்.
"இதையடுத்து அடுத்த நாள் தலித் தரப்பில் காவல் நிலையம் சென்று தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டனர். இசைக் கச்சேரி நடத்திய கலைஞர்களின் நலன் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகளை அவர்களிடமே ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் திரும்பி ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் கிராமத்திற்கு திரும்பிய அவர்கள், போலீசுக்கு சிலர் தகவல் கொடுத்த காரணத்தால்தான் இந்த நிகழ்ச்சி தடைப்பட்டது. மேலும் இதனால் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறி, கிராமத்தில் உள்ளவர்களிடம் பேசியுள்ளனர். போலீசுக்கு யார் மூலமாக தகவல் கொடுக்கப்பட்டது என்று அறிந்த அவர்கள், அந்த நபரிடம் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது," என்றார் ராதாகிருஷ்ணன்.
"பிறகு பிரச்சனை ஏற்படவே, இதை வளர்க்க வேண்டாம் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் பஞ்சாயத்தை கூட்டினர். பஞ்சாயத்து முடிவில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள் பஞ்சாயத்தார் காலில் விழுந்துள்ளனர்.
அவர்கள் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ இன்று காலை என் பார்வைக்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றவர் புகார் தந்துள்ளனர். இவற்றின் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலித் தரப்பில் தரப்பட்ட புகாரின் பேரில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தலித் தரப்பைச் சேர்ந்த குமரன் கொடுத்த புகாரில், "எங்கள் கிராமம் சார்பாக கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், அது தவறு என்பதால் காவல்துறையினர் நிகழ்ச்சியில் பயன்படுத்திய சவுண்ட் சர்வீஸ் பொருட்களைப் பறிமுதல் செய்து சென்றனர். பின்னர் அடுத்த நாள் காவல் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்த பொருட்கள் பெற கடிதம் எழுதிக் கொடுத்த வாங்கி வந்தோம். கிராமத்திற்கு வந்த பிறகு புகார் அளித்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார்," என்று குமரன் தெரிவித்துள்ளார்.
எதிர்த் தரப்பைச் சேர்ந்த ரமேஷ் அளித்த புகாரில், "கொரோனா தொற்று சூழலில், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சியால் நோய் பரவ வாய்ப்பு இருந்ததால் போலீசில் புகார் அளித்திருந்தேன். இதையடுத்து, கச்சேரியில் பொருள்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே இந்த பிரச்சனைக்கு நான்தான் காரணம் என்று கூறி, என்னைத் திட்டி, தள்ளிவிட்டனர். அந்த தரப்பை சேர்ந்த சிலர் இதனால் 2 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி மிரட்டினர்," என்று ரமேஷ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக