வெள்ளி, 14 மே, 2021

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள் – 463 ஆந்திர ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவிலும்....

May be an image of map and text

Palanisamy Balakrishnan  :    சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்
– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர்
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.
புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான்.
இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.


பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன்
@ulagai_aanda_thamizhargal

கருத்துகள் இல்லை: