/tamil.samayam.com : கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும்
ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படும்
ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த 10ஆம் தேதி வருகிற 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக, 2.07 கோடி அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
முதல் தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை இம்மாதமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் மீதமுள்ள ரூ.2000 வழங்கப்படவுள்ளது.
இதற்காக 4,153.39 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, நிவாரணத் தொகையை பொது மக்கள் பெறும் பொருட்டு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் குடும்ப அட்டைதாரர் பெயர், ரேஷன் கடை பெயர், பணம் வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. குடும்ப நபர்கள் யார் வேண்டுமானாலும் சென்று, பணம் வாங்கலாம். ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு வருகிற 16ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை பணி நாள் என்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக