சனி, 15 மே, 2021

அகதி முகாம் தமிழர்களின் வாழ்வு! நாம் தமிழரும் ஈழத்தமிழரும் IBC Tamil டிவியில் விவாதிக்க விரும்பாத விடயம்

 Maha Dev  :    நாம் தமிழர் கட்சியும் ஈழத்தமிழர்களும் ..   எனும் தலைப்பில் நடந்த உரையாடலில் ஒரு வரி கூட தமிழக அகதிகள் குறித்து உரையாடப்படவில்லை.
உண்மையில் நெறியாளரிடமும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசுபவருக்கும் இங்கு தமிழகத்தில் முகாம்களில் உள்ள அகதிகள் பற்றி தெரியமா அல்லது தெரியாதா ?
திராவிடம், தமிழ் தேசியம், இந்திய ஒன்றியம், தமிழக அரசு குறித்தெல்லாம் உரையாடும் உங்களது கருத்து பரிமாற்றங்களில் அகதிகள் குறித்து பேசுவதற்கான இடமே இல்லையா ?
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழப்பிரச்சினை தீர்க்கபடுமா எனும் கேள்வி கேட்க தெரிந்த உங்களால், நிச்சயம் வெளியுறவு கொள்கையில் மத்திய அரசுடன் பேசி மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கு எனும் பதிலளிக்கும் உங்களால்,
தமிழக அகதி முகாம்களில் உள்ளவர்கள் எதிர்காலம் பற்றியோ, அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், அவர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கை பற்றி நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன, அல்லது  அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக நாம் தமிழர் கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது  என ஒன்றைப்பற்றிக்கூடவா உங்களால் சிந்திக்க முடியவில்லை.


இப்படி திட்டமிட்டு புறக்கணிப்பதன் மூலம் என்ன கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் ?, அல்லது அகதிகள் குறித்த உங்களது பார்வைதான் என்ன ?
பேட்டி எடுத்துவரும் (நெறியாள்கை செய்தவரும்) , பதிலளித்தவரும் இலங்கையர்களே என அவர்களது உரையாடல்களிலிலிருந்து அறிய முடிகிறது,
5 இலட்சத்திற்கும் மேல் ஆதரவாளர்களை கொண்ட ஒரு செய்தி நிறுவனத்தில் உரையாடும் இரு இலங்கையர்கள், இலங்கை, இந்தியா, தமிழ்நாடு, தமிழக அரசியல், இலங்கை பிரச்சினை குறித்தெல்லாம் பேசுகையில் இலங்கையிலிருந்து போரினால் பாதிக்கப்பட்டு இந்தியாவில், தமிழகத்திலுள்ள முகாம்களை புறக்கணித்துவிட்டு பேசுவதை அவ்வளவு எளிதாக கடக்கமுடியவில்லை...
பொதுவாக புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் தமிழக அகதிகள் குறித்து ஒரு ஏளனம் கலந்த நாளாந்திர பார்வை வைத்துள்ளனர் என கேள்விப்பட்டதுண்டு. இதில் பல்வேறு கூறுகள் உள்ளடக்கம். குறிப்பாக போரின் போது தப்பித்து சென்றவர்கள்,உழைக்காமல் அகதி கொடுப்பணவில் வாழ்கிறார்கள், போருக்கு எந்த வகையிலும் உதவி செய்யாதவர்கள்,இவர்களில்பெரும்பான்மையானவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், குறிப்பாக மலையகத்தமிழர்கள்...
இந்த புறக்கணிப்பு என்பது இயல்பானது என்று நினைத்த காலங்கள் உண்டு, ஆயினும் நடப்பவை அப்படி தெரியவில்லை.இது திட்டமிட்டு நடத்தப்படுவதாகவே இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: