Sathyaperumal Balusamy : தலித் கலை இலக்கியச் செயல்பாடு என்பது புனிதப் பசு நிலையை அடைந்துவிட்டது.
தலித் கலை இலக்கியத்தைப் பட்டியல் வகுப்பினர் மட்டுமே படைக்கமுடியும் என்ற நிலையிலிருந்து தலித் கலை இலக்கிய விமர்சனத்தையும் கூட பட்டியல் வகுப்பினர் மட்டுமே வைக்க வேண்டும் என்ற புனித நிலையை அடைந்திருக்கிறது.
தப்பித்தவறிப் பட்டியல் வகுப்பைச் சேராத யாராவதும் தலித் கலை இலக்கியச் செயல்பாட்டை எதிர்மறையாக விமர்சித்துவிட்டால் இருக்கவே இருக்கிறது அவருக்குப் பரிசளிக்கச் 'சாதிவெறியர்' என்ற பட்டம்!
தலித் அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சினிமாவாக முன்வைக்கப்படும் கர்ணன் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி என்னவாக இருக்கிறது என்றால்,
அந்தப் பட்டியல் வகுப்பினருக்கும் ஒரு நாடாண்ட பெருமை இருந்தது என்பதாக இருக்கிறது.
யானையின் மீது அமர்ந்து வாளேந்திப் பாண்டிய நாட்டை அரசாண்ட பரம்பரை இப்படி அடங்கிக் கிடக்கிறதே என்ற ஆதங்கம் முன்வைக்கப்படுகிறது.
எந்த ஒரு ஆண்ட பரம்பரையும் தான் ஆளுங்காலத்தில் மற்றவர்களை அடக்கி ஒடுக்கியே வைத்திருக்கும். அதே போல இன்றைக்கு ஐராவதம் என்ற யானையை வாகனமாகக் கொண்ட தேவேந்திரனின் வம்சமாகச் சொல்லிக் கொள்ளும் பரம்பரையும் ஆண்ட பரம்பரையாக இருந்த பொழுது மற்ற பரம்பரையினரை அடக்கி ஒடுக்கியே தனது ஆளுகையை நிலை நாட்டியிருக்கும்.
காலம் ஒரே போலச் சுழன்று கொண்டிருக்காது அல்லவா?
தேவேந்திரர்களால் முற்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பரம்பரைகள் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து ஆட்சியைப் பிடித்த பொழுது, பழைய வஞ்சத்தைத் தீர்க்கத் தேவேந்திரர்களை அடக்குவதும் ஒடுக்குவதும் இயல்பு தானே?
இப்படிப்பட்ட கண்றாவியான புரிதலைப் பார்வையாளனுக்கு வழங்கும் வகையில் காட்சிகளையும் கருத்தியலையும் அமைப்பதற்குப் பெயரா கலைச் செயல்பாடு?
இத்தனைக்கும் இன்றைக்குக் கணிசமான தேவேந்திரர்கள் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமியின் தலைமையில் பட்டியல் வகுப்பில் இருந்து வெளியேறப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டியல் வகுப்பினராகத் தாங்கள் நீடிப்பது அவமானமாக இருக்கிறது என்கிறார்கள். பறையர், அருந்ததியர் இடம்பெறும் பட்டியல் பிரிவில் தாங்களும் இருப்பது அசிங்கமானதாக இருக்கிறது என்கிறார்கள். காரணம், அவர்கள் தங்களுக்கான ஒரு ஆண்ட பரம்பரைக் காலம் இருந்ததாக உறுதியாக நம்புகிறார்கள், அதற்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டி நூலாக்கி வெளியிடுகிறார்கள். அதன் நீட்சியாக மாரிசெல்வராஜூம் ஆனை மீது அமர்ந்து வாளுயர்த்தித் தேவேந்திரர்கள் பாண்டியநாட்டை ஆண்ட நாட்களின் நினைவைக் குறியீடுகளாக்கிக் காட்டியிருக்கிறார்.
நிலைமை இப்படியிருக்க, என்ன விதத்தில் கர்ணன் தலித் சினிவாகக் கொள்ளப்படுகிறது?
அது தேவர்மகனாக இருந்தாலும் சரி, விருமாண்டியாக இருந்தாலும் சரி அவற்றில் இருந்த வன்முறையை அந்தத் திரைப்படங்களே கூட ஆதரித்ததில்லை. வாளைக் கீழே போட்டுவிட்டுப் 'புள்ள குட்டிகளப் படிக்க வைங்கடா' என்ற அளவிற்காவது நியாயமாக நடந்து கொண்டார்கள். மேற்குறிப்பிட்ட படங்கள் சாதிவெறியைத் தூண்டுவனவாக இருக்கிறது என்று சொல்லிப் போராடியவர் தான் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமியும்.
ஆனால், இன்றைக்குத் தேவேந்திரர்களின் படமாகப் பூடகமாக முன்வைக்கப்படும் கர்ணன் என்ன சொல்கிறது? மீட்சிக்கு வழி வாளெடுத்துப் போராடுவது மட்டுமே என்று உரக்கச் சொல்கிறது! வன்முறை மட்டுமே தங்களுக்கு எதிரான அநீதிகளுக்குத் தீர்வைத் தரும் என்று அடித்துச் சொல்கிறது. தேவேந்திர இளைஞர்கள் ஒவ்வொருவரும் கர்ணனைப் போல வாளெடுக்க வேண்டும் என்று போதிக்கிறது! இப்படியெல்லாம் இளைஞர்களை உசுப்பிவிட்டு வன்முறையைத் தூண்டுவது தென்னகத்தில் இப்போது பதற்றத்தை உருவாக்காதா?
கர்ணனில் மாரிராஜ் உண்டாக்கிக் காட்டும் பகைமை என்பதும் மிகவும் போலியானது. வஞ்சகமானது. அரசு இயந்திரத்திற்கு எதிராக வாளெடுத்து அரசாங்க ஊழியன் ஒருவனைக் கொன்றுவிட்டால் அரசு பணிந்துவிடும் என்பது எத்தனை போலியானது! அரசுகள் அத்தனை வலிமையற்றவை அல்ல என்பதே நடைமுறை.
ஒடுக்கப்பட்டவரின் எதிர்த் தாக்குதலாக அதையும் கூட எடுத்துக் கொண்டு பணிந்து வரும் அரசு இயந்திரத்தின் பின்னுள்ள அத்தனை பேரும் பட்டியல் வகுப்பினராக மட்டும் இருக்கமாட்டார்கள் தானே? அங்கேயும் அமைதியை, நல்லிணக்கத்தை விரும்பும் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களும் இருப்பார்கள் தானே?
சமூக நல்லிணக்கம் என்பது நாம் எல்லோரும் சேர்ந்திணைந்து சாதிப்பது அல்லவா? அதைச் சாதியாகப் பிரிந்து நின்று வாள் முனையில் சாதித்து விடலாம் என்றால் அதற்கொரு முடிவு என்பது இருக்குமா?
ஆனால், மாரிசெல்வராஜ் தனது சினிமாவின் வழி, சாதியாகப் பிரிந்து நின்று வாள் முனையில் சமூக நல்லிணக்கத்தைச் சாதித்து விட முடியும் என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்! இதுவா ஒரு கலைஞனின் கடமை? ஒரு கலைஞனின் அறிவுடைமை?
அம்பேத்கரைக் குறியீடுகளில் வைத்துவிட்டு அவரது வழிகாட்டுதல்களுக்கு எதிர்த் திசையில் பயணிப்பதற்குப் பெயரா தலித் சினிமா? இங்கே வெற்றிமாறனின் அசுரனை எண்ணிப்பாருங்கள். எதையும் விட கல்வி பெரியது. அதுவே மாற்றத்தைக் கொண்டுவரும், சுயமரியாதையை மீட்டுத் தரும் என்று அழுத்தமாகச் சொன்னது அசுரன். கொடியன்குளம் கூட அப்படித் தான் நிமிர்ந்து நின்றது. அம்பேத்கர் முதல் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமி வரை நிமிர்ந்து நின்றது கல்வியால் தானே தவிர வன்முறையால் அல்ல. ஆனால், வன்முறையையே சிறந்த தீர்வாக முன்மொழிகிறார் மாரி செல்வராஜ்.
இந்த நச்சைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்திக் கொள்வது புத்தரை, அம்பேத்கரை, உணர்ச்சிகரமான உரையாடல்களை. புத்தரையோ, அம்பேத்கரையோ வழிகாட்டிகளாக தேவேந்திரர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை. பின்னர் எதற்காக அவர்கள் இருவரையும் இந்தப் படத்திற்குள் வலிந்து திணிக்கிறார் மாரிசெல்வராஜ்? தமிழகத்தின் மற்ற பெரிய பட்டியல் வகுப்பினரான பறையர்களைத் தங்களது அரசியலுக்கு ஆதரவாகக் கைதட்ட வைத்துக் காசு பார்த்துவிட வேண்டும் என்ற வியாபார நோக்கத்தைத் தவிர இதில் எந்த நேர்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
மகாபாரதக் கதை என்பது தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. தமிழர்களை ஏமாற்றுவதற்காகப் பல வடிவங்களில் பார்ப்பனர்களால் பரப்பப்பட்டது. அதனால் தான் இன்று வரையிலும் ஜெயமோகன் உள்ளிட்ட நமது பஜனைமட எழுத்தாளர்கள் அதைச் சீவிச் சிணுக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மகாபாரதத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது அது எந்த வகுப்பினராக இருந்தாலும் தமிழருக்குக் கேடு தான். அரசியல் புரிதல் இன்மையில் இருந்தே மகாபாரதக் கதாபாத்திரங்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் செயல்பாடு தோன்றுகிறது. இந்தப் புரிதல் கூட இல்லாத போலி தான் தலித் சினிமாவைப் படைப்பவர்களின் நாயகராகக் கொண்டாடப்படுகிறார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக