Skp Karuna : ஒரு கேள்வி : : "சேம்சைடு கோல்தான்... இருந்தாலும் கேக்குறேன்.. திராவிடம்னு பேர் வச்ச கட்சிகள் எதுவும் தமிழ்நாட்ட தாண்டலை.. கேரளா, கர்நாடகா, ஆந்திராக்காரனுகளும் தங்கள திராவிடன்னு சொல்லிக்கிறதில்லை.. பெறகெதுக்கு நாம மட்டும் அந்த பேர தூக்கிட்டு சுத்தணும்?"
எனது பதில் :
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம் இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள்.
அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
மூத்த பிள்ளை மட்டும் பெருசோட கைபட்டு, கால்பட்டு வளர்ந்ததாலே பிடிவாதமா அங்கேயே தங்கிருச்சு. பிழைக்கப் போனவர்கள் எல்லாம் தனி மொழி தேடிகிட்டாலும், அந்த மொழியோட வேர்கள் எல்லாம் பழைய காரை வீட்டிலிருந்தே உருவானது. பிரிந்து போனவர்கள் கட்டின வீடுகளுக்குதான் புது பெயர் தேவைப்பட்டது.
பழைய வீட்டுக்காரனுக்கு பழைய பெயரே நிலைச்சு நின்றது.திராவிடம் என்பது வேர்ச்சொல். வீட்டைக் கட்டின மூப்பன் அந்தப் பெயரை வைத்திருக்கவில்லை. பிழைக்க வந்த ஆரியர்களும், வியாபாரம் செய்ய வந்த யவனர்களும் வைத்த பெயர் அது.
இப்பவும்கூட பிரிந்து போன அந்தப் பிள்ளைகளை எங்கேனும் கடைத்தெருவில் அவர்கள் காண நேரிட்டால் இவர்களை காரைவீட்டுப் பிள்ளைகள் என்றுதான் அழைக்கின்றனர். பிரிந்து போனவர்களுக்கு தனி அடையாளம் உருவாகி இருக்கலாம்.
ஆனால், ரத்தம் சிந்தி காரை வீட்டைக் கட்டிய அந்தக் கிழவனோட மூத்த பிள்ளைக்கு பழைய அடையாளத்தை விட்டுவிட மனசு இல்லை. அவனைப் பொறுத்தவரை, தனி அடையாளம் என்பதே தகப்பனோட அடையாளம்தான்.
திராவிடம் என்பது ஆரியத்துக்கு எதிர்ச்சொல். திராவிடம் என்பது ஆதிச்சொல். திராவிடம் என்பது மூத்தோனுடைய உரிமைச் சொல். திராவிடம் என்பது தம்பிகள் தன் மார்பில் உதைத்தாலும் கனிவுடன் கால்களைப் பற்றும் அரவணைப்புச் சொல். திராவிடம் என்பது நமது மூத்தகுடி கட்டிய பழைய காரைவீட்டுப் பத்திரம். திராவிடம் என்பது தமிழ்.
-எஸ்கேபி. கருணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக