இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவுக்கு பலி - 3-வது நாளாக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
dailythanthi : இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக 2 லட்சத்துக்கு அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன. கடந்த ஆண்டு புரட்டியெடுத்த முதல் அலையில் கூட, நாளொன்றுக்கு 1 லட்சம் பாதிப்பு என்ற சோகத்தை எட்டவில்லை. ஆனால் இந்த 2-வது அலையோ 2 லட்சத்துக்கு அதிகமான பாதிப்புகளை சமீப நாட்களாக அளித்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கூட 2
லட்சத்து 34 ஆயிரத்து 692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது
இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் ஆகும்.
புதிதாக
பாதிக்கப்பட்டுள்ள இவர்களையும் சேர்த்து இந்தியாவில் 1 கோடியே 45 லட்சத்து
26 ஆயிரத்து 609 பேர் இதுவரை இந்த மோசமான தொற்றுக்கு ஆளாகி
இருக்கிறார்கள்.
இந்தியாவில் தொடர்ந்து 3-வது
நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் வந்திருக்கிறது. மொத்தத்தில்
கடந்த 38 நாட்களாக புதிய பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
மேற்படி
24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில்
63,729 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம்
(27,426), டெல்லி (19,486) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதுவும்
அந்தந்த மாநிலங்களில் கொரோனா தோற்றத்துக்கு பிறகு மிகவும் அதிகபட்சமாகும்.
மேலும் சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்திலும் இதுவரை இல்லாத
அளவுக்கு 6,910 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைப்போல பல மாநிலங்கள் புதிய பாதிப்பில் தினந்தோறும் உச்சத்தை தொட்டு வருகின்றன.
லட்சக்கணக்கில்
அதிகரித்து வரும் புதிய நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்,
சுகாதார மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆஸ்பத்திரி
வளாகங்கள் அனைத்தும் பெரும் சோகமும், பரபரப்புமாக நீடித்து வருகிறது.
இது
ஒருபுறம் இருக்க இந்தியாவில் மேற்படி 24 மணி நேரத்தில் 1,341 பேரின் உயிரை
கொரோனா காவு கொண்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.
குறிப்பாக
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது கடந்த செப்டம்பர்
15-ந் தேதி ஏற்பட்டு இருந்த 1,275 மரணங்களே ஒருநாள் அதிகபட்சமாக இருந்தது.
ஆனால் அதையும் தற்போதைய 2-வது அலை கடந்திருப்பது சோகத்துக்குரியது.
உயிரிழந்த
1,341 பேரையும் சேர்த்து இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை
1¾ லட்சத்தை கடந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 1,75,649 பேர்
கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள். இது மொத்த பாதிப்பில் 1.21 சதவீதம்
ஆகும்.
மேற்படி 24 மணி நேரத்தில் ஏற்பட்ட
மரணங்களில் மராட்டியம் 398 இறப்புகளை கொண்டிருக்கிறது. அடுத்ததாக டெல்லி
(141), சத்தீஷ்கார் (138), உத்தரபிரதேசம் (103) போன்ற மாநிலங்கள்
100-க்கும் மேற்பட்டோரை கொரோனா வுக்கு பறிகொடுத்துள்ளன.
இதைப்போல
குஜராத் (94), கர்நாடகா (78), மத்திய பிரதேசம் (60), பஞ்சாப் (50)
உள்ளிட்ட மாநிலங்களும் கணிசமான கொரோனா இறப்புகளை பெற்றுள்ளன.
நாட்டில்
24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும்
நிலையில், அதே காலகட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 354 பேர் தொற்றில்
இருந்து மீண்டிருக்கிறார்கள். இது ஒரு நேர்மறை அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதன்
மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 71
ஆயிரத்து 220 ஆகியிருக்கிறது. எனினும் நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 87.23
என்ற அளவில் குறைந்திருக்கிறது.
இந்தியாவில்
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், சிகிச்சை பெற்று வரும்
நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. நேற்று காலை
நிலவரப்படி பாதிக்கப்பட்டோரில் 11.56 சதவீதம் பேர், அதாவது 16,79,740 பேர்
சிகிச்சை பெற்று வந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக