வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ட்ராபிக் ராமசாமி தீவிர சிகிச்சை பிரிவில் . எப்படி இருக்கிறார்? - அரசு மருத்துவமனையில்

டிராபிஃக் ராமசாமி உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆ. விஜயானந்த் -     பிபிசி தமிழுக்காக : சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியின் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எப்படியிருக்கிறார் டிராபிஃக் ராமசாமி?
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை சட்டை, காக்கி உடுப்பில் வழக்குக் கட்டுகளோடு வலம் வரும் டிராபிஃக் ராமசாமியை பார்க்காதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.
சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் வழக்குக் கட்டுகளை வைத்திருப்பது அவரது பழக்கம்.
ஹெல்மெட் விவகாரம், கட்அவுட் கலாசாரம், வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வண்டிகள் என டிராபிஃப் ராமசாமி கையாண்ட பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல.


ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரையும் விமர்சிப்பதில் அவர் தயக்கம் காட்டியதில்லை. இவரது வாழ்க்கைக் கதை திரைப்படமாகவும் வெளிவந்தது.

கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் நடக்கும் வழக்குகளில் ஆர்வம் காட்டி வந்தவர், கடந்த சில வாரங்களாக படுத்த படுக்கையாகிவிட்டார். அவரது சிறுநீரகங்களும் கல்லீரலும் பாதிக்கப்பட்ட நிலையில், தி.நகரில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்துவிட்டார்.
விளம்பரம்

இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ` மிகவும் அபாயக் கட்டத்தில் டிராபிஃக் ராமசாமி இருக்கிறார். அவருக்கு 88 வயதாகிவிட்டதால் சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவக் குழுவுக்கு சிரமம் உள்ளது. அவரது குடும்பத்தினரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை' என்கின்றனர் ராமசாமிக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர்.

இந்நிலையில், செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு டிராபிஃக் ராமசாமி சிகிச்சைப் பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` எப்படியிருக்கிறார் டிராபிஃக் ராமசாமி?' என்பதை அறிய அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

"அவர் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 19 ஆம் தேதி இரவு வீட்டில் அரை மயக்கநிலையில், `அய்யோ அம்மா' என அழுது கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதன்பின்பு நடந்த பரிசோதனையில், `சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. கல்லீரலில் பிரச்னை உள்ளது. நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது' என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீராகாரங்களைக்கூட எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். இதனால் சிறுநீரகங்களில் தொற்று ஏற்பட்டுவிட்டது. சர்க்கரையும் 300 என்ற அளவுக்குக் கூடிவிட்டது" என்றவரிடம்,

"நீங்கள் அவரது உறவினரா?" என்றோம்.

"இல்லை. நான் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பி.எஸ்.ஓ. என் பேர் கண்ணபிரான். 24 மணிநேரமும் அவரோடுதான் இருக்கிறேன்"

அவரது குடும்பத்தினர் யாரும் இல்லையா?

`` அவர் சீரியஸாக இருந்த தகவலைக் கேள்விப்பட்டு அவரது மகள் மட்டும் வந்தார். அன்று அவரிடம் பேசிய மருத்துவர்கள், `அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளனர். அவரும் கையொப்பம் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். ஆனால், தினமும் போனில் விசாரித்து வருகிறார்.
டிராபிஃக் ராமசாமி உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை. சர்க்கரை குறைபாடு காரணமாக அவரால் நடக்க முடிவதில்லை. ட்ராபிஃக் ராமசாமியை அவரது வழக்கறிஞர் கணேசன் உடன் இருந்து கவனித்து வருகிறார். எங்களிடம் பேசும் மருத்துவர்களும், `சிகிச்சை கொடுத்து வருகிறோம். ஆனால், அவரது வயது காரணமாக சற்று சிக்கல் நீடிக்கிறது' என்கின்றனர். இப்போது ஓரளவுக்குத் தேறி வருகிறார்".

``உங்களிடம் டிராபிஃக் ராமசாமி எதாவது பேசினாரா?"

`` கடந்த 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு எங்களிடம் பேசியவர், `இப்போது நான் நன்றாக இருக்கிறேன், ஆபீஸ் போகலாம்' என்றார். ஆனால், எழுந்து நடக்கவே முடியாத சூழலில்தான் அவர் இருக்கிறார். முன்பிருந்த நிலையை ஒப்பிடும்போது தற்போது பரவாயில்லை. சிறுநீரில் யூரியா கிரியாட்டினின் என்பது 150 என்ற அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காலத்தில் அவருக்கு 3,000 என்ற அளவைக் காட்டியது. தற்போது ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேபோல், சோடியம் அளவும் அதிகமாக இருந்தது. அனைத்தும் ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது" என்றவர்,

`` அவரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் அவரது உடல்நிலையைப் பற்றித் தெரியும். அவர் அலுவலகத்தில் இருக்கும்போது வருகின்ற சிலர்தான், இப்போதும் உடல்நலனை விசாரிக்க வருகிறார்கள். நான் நான்காண்டுகளாக அவரது பாதுகாப்புப் பணியில் இருக்கிறேன். அவர் தற்போதுள்ள சூழலைப் பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது" என்றார்.

`பொதுநல வழக்கு' என்ற ஆயுதத்தின் மூலம் ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் சட்டத்தின் படிகளில் ஏறவைத்த ட்ராபிஃக் ராமசாமி, உடல்நலக் குறைவில் இருந்து மீள்வதற்கு மருத்துவத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். `இந்தப் போராட்டத்திலும் அவர் வெல்ல வேண்டும்' என்கின்றனர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர்

கருத்துகள் இல்லை: