செவ்வாய், 20 ஏப்ரல், 2021

மதம் புகுந்த வீடும் ஜாதி புகுந்த வீடும் விளங்காது! ஹிந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி

May be an image of 3 people and text that says 'கோயில்களிலுள்ள குருக்கள் மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்! கங்கைக் கரைக்குச் சென்றால்,ஏழைக் கிராமவாசிகள் தக்ஷிணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக்(புரோகிதர்க காணலாம். குடும்பத்தில் கலியாணமோ சாவோ எது நேர்ந்தாலும் புரோகிதன் வந்துவிடுறோன்.உடனே அவனுக்குத் தகூிணை கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஒவ்வொரு மதத்திலும் இப்படியேதான். கிறிஸ்தவம் இஸ்லாம் ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி,இதற்கு விலக்கு இல்லை. -ஜவகர்லால் நேரு இந்திரா அம்மையாருக்கு எழுதிய கடிதத் தொகுப்பான 'Glimpses of World History" நூலிலிருந்து'

Dhinakaran Chelliah  :  குருட்டு நம்பிக்கையும் வெள்ளையுள்ளமும் படைத்த ஜனங்கள் எவ்வளவு தூரம் அக்கிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறார்கள் என்பதை நினைக்கும்போது நமக்கு ஆச்சரியம் உண்டாகிறது.
இந்தக் காரணத்தால்தான் மதம் என்பது பல நாடுகளில் மிகுந்த பண வருவாயுடைய  பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது.
கோயில்களிலுள்ள குருக்கள் மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்!
கங்கைக் கரைக்குச் சென்றால், ஏழைக் கிராமவாசிகள் தக்ஷிணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக் (புரோகிதர்கள்)காணலாம்.
குடும்பத்தில் பிரசவமோ, கலியாணமோ, சாவோ எது நேர்ந்தாலும் புரோகிதன் வந்துவிடுறோன்.உடனே அவனுக்குத் தக்ஷிணை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு மதத்திலும் இப்படியேதான்.
ஹிந்து,கிறிஸ்தவம், இஸ்லாம்,ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி,இதற்கு விலக்கு இல்லை. தன்னிடத்தில் நம்பிக்கை
கொண்டோரிடமிருந்து பணம் பறிப்பதற்கு ஒவ்வொன்றும் தனி முறைகளைக் கையாளுகிறது.
ஹிந்து மதத்தின் முறைகள் நமக்குத் தெரிந்தே இருக்கின்றன.
இஸ்லாம் மதத்தில் புரோகிதர்கள் இல்லை என்று கருதப்படுகிறது.
முற்காலத்தில் இது அம்மதத்தினரை மதச் சுரண்டலிலிருந்து ஓரளவு காப்பாற்றி வந்தது.
ஆனால், மத விஷயங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மனிதர்களும் வகுப்புக்களும் தோன்றலானார்கள்.
அம்மத சாஸ்திர பண்டிதர்கள் மௌல்விகள் என்றும் முல்லாக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


அவர்கள் நம்பிக்கை கொண்ட முஸ்லீம்களை ஏமாற்றிப் பிழைக்க ஆரம்பித்தார்கள்.
நீண்ட தாடியோ அல்லது சடையோ, நெற்றியில் பட்டை நாமமோ அல்லது விபூதியோ, பக்கிரியின் உடையோ அல்லது சந்நியாசியின் காவி உடையோ சாதுக்களின் சின்னமாகக் கருதப்படுகிற பொழுது ஜனங்களை ஏமாற்றுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?
மிகவும் முற்போக்கு வாய்ந்ததென்று கருதப்படும் அமெரிக்காவுக்கு நீ சென்றால், அங்கும் மதம் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பெரிய தொழிலாக விளங்குவதைக் காண்பாய்.
இது தந்தை மகளுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.எழுதியவர் பண்டிட் ஜவகர்லால் நேரு. மகள் இந்திரா அவர்களுக்கு நேரு அவர்கள் எழுதிய இது போன்ற கடிதங்களின் தொகுப்பே ‘Glimpses of World History’ எனும் நூலாகும்.மேலுள்ள பகுதி இந்த நூலின் தரத்திற்கு ஒரு சான்று, அவ்வளவுதான்.
சுதந்திரப் போராட்ட நாட்களில் 1921 லில் ஆரம்பித்து 1945 வரை ஒன்பது முறை 3259 நாட்கள் (கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள்) ஜெயிலில் தன் வாழ்நாளைக் கழித்தவர் ஜவகர்லால் நேரு. 1930 லிருந்து 1933 ஆண்டுகளில் நயினி(Naini,Allahabad),
பரேலி,டெஹராடூன் சிறைகளில் இருந்தபோது மகள் இந்திரா அவர்களுக்கு கிட்டத்தட்ட 196 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.இவற்றில் கப்பலில் பிரயாணித்த போது எழுதிய ஓரிரு கடிதங்களும் அடங்கும்.
இந்தக் கடிதங்களின் தொகுப்பே Glimpses of World History எனும் தலைப்பில் நூலாக பின்னாளில் வெளிவந்தது. 1933 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து வெளிவரும் வரை இந்தக் கடிதங்கள் இந்திரா அவர்களுக்கு அனுப்பப் படவில்லை.
ஒரு கடிதத்தில்,
சிறையில் உள்ளதால் என்னால் உனக்கு பெரிய பரிசுப் பொருட்கள் ஏதும் அனுப்ப இயலவில்லை,ஆனால் இதயத்திலிருந்து தொடர்ச்சியாக என்னால் முடிந்தவரை கடிதங்களை எழுதி அனுப்புகிறேன் எனக் குறிப்பிடுகிறார்.
தமிழில் இந்த நூலின்  தலைப்பு ‘உலக சரித்திரம்’ ஆகும். முதல் பாகம் மட்டும் 671 பக்கங்கள் உள்ளது. மொத்தம் மூன்று பாகங்கள் உண்டு. தமிழில் ஒ.வி.அளகேசன் அவர்கள் மொழிபெயர்த்த இந்த நூல் 1947 ஆம் ஆண்டுப் பதிப்பிக்கப்பட்டது.
நேரு தன் மகளுக்கு உலக சரித்திரத்தை சுருக்கமாக சுவாரஸ்யமாக விளக்கி எழுதியிருக்கிறார்,இதில் அவர் இந்திய வரலாற்றையும் குறிப்பிடத் தவறவில்லை.
1928 ஆண்டில் சிறையிலிருந்து மகளுக்கு என அவர் கடிதம் எழுதிய கடிதங்கள் ‘Letters from a Father to His Daughter’ எனும் தலைப்பில் நூலாகவும் வெளிவந்துள்ளது.
இந்தியா மத சார்பின்மையாக விளங்கியதற்கு  நேருவின் பங்களிப்பு முக்கியமானது.
சுதந்திரத்தின் போதும் அதன்பிறகும் மதங்களைப் பற்றிய தனது சரியான புரிதலினால் இந்திய மக்களுக்கு பல நல்ல காரியங்களை, மதங்களின் தலையீடு இல்லாமல் அவரால் செய்ய முடிந்திருக்கிறது.
வளர்ந்த நாடுகளாக கருதப்படும் எந்த ஒரு நாடும் மதங்களுக்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. மக்கள் நலன் சார்ந்து அவை இயங்குவதால் குற்றங்கள் குறந்துள்ளன,வன்முறைகள் குறைந்துள்ளன.அந்த நாடுகளின் அரசுகள் மக்களின் சுகாதாரம் கல்வி மனநலம், வேலை வாய்ப்பு,தொழில்,விளையாட்டு என நலவாழ்வுத் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தப் பதிவு எழுதுவதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு,பின்னூட்டதைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை: