சனி, 24 ஏப்ரல், 2021

திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?

திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?

minnampalam : சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் திருணமூல் காங்கிரஸ் என்ற கட்சியையே அழிக்க தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்துக்கு என நூற்றுக்கணக்கான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும், அண்மையில் தேர்தல் ஆணையம் மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்களை மேற்கு வங்காளத்துக்கு என்று நியமித்தது.

பிகார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவேக் துபே, ம்ன்ரல் காந்தி தாஸ் ஆகியோர்தான் அந்த மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள். மாநிலம் முழுதும் எங்கே எந்த நேரத்திலும் போலீஸ், துணை ராணுவப் படைகளை அனுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில்... இன்று (ஏப்ரல் 24) மேற்கு வங்காளத்தின் ப்ரிபம் மாவட்டத்தில் போல்பூரில் இருக்கும் கீதாஞ்சலி ஆடிட்டோரியத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் மம்தா பானர்ஜி.

“தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளத்துக்கு என மேலும் மூன்று தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது. அவர்கள் தேர்தல் நாளன்று திருணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த சதித்திட்டத்தை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் வரை செல்வேன்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்துவதற்காக பணி செய்தால், நான் எந்த பிரச்சினையும் எழுப்பப் போவதில்லை. ஆனால் அவர்கள் பாஜகவுக்கு உதவும் வகையிலேயே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருணமூல் காங்கிரஸ் கட்சியை தீர்த்துக் கட்ட நினைக்கிறார்கள்.

என்ன சதித்திட்டம் என்றால், இந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நமது கட்சியின் ஆங்காங்கே இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தேர்தலுக்கு முதல் நாள் இரவு கைதுசெய்து மறுநாள் அதாவது தேர்தல் நடக்கும் நாளில் மாலை 4 மணி வரை வெளியே விடாமல் இருக்க உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு, மாவட்ட எஸ்பிக்களோடும் நடத்திய வாட்ஸப் சாட்டிங் எனது கைக்கு சில பாஜகவினர் மூலமாகவே வந்திருக்கிறது. (அதை கட்சி நிர்வாகிகளிடம் காட்டுகிறார்) அதனால்தான் இதை நான் சும்மா விடப் போவதில்லை.

அந்த சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்னதான் பாஜகவுக்காக உழைத்தாலும் அவர்களால் ஏழு முதல் எட்டு தொகுதிகளில்தான் பாஜகவுக்கு ஆதாயம் ஈட்டிக்கொடுக்க முடியும். என்னைப் பொறுத்தவரை பாஜக என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் மேற்கு வங்காளத்தில் எழுபது தொகுதிகளை பாஜகவால் தாண்ட முடியாது என்பதே எனது தனிப்பட்ட கணிப்பு”என்று மம்தா பானர்ஜி அந்தக் கூட்டத்தில் தனது கட்சியினருக்குத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் எட்டு கட்டங்களாக நடத்தப்படும் சட்டமன்றத் தேர்தலின் ஆறு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்திருக்கின்றன. ஏழாவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும், எட்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடக்க இருக்கின்றன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: