புதன், 21 ஏப்ரல், 2021

அமெரிக்க ஜார்ஜ் பிளாய்ட் கொலை ! போலீஸ் டெரிக் குற்றவாளி 40 ஆண்டு சிறை வழங்கப்படலாம்? Derek Chauvin found guilty of the murder of George Floyd

daylithanthi : வாஷிங்டன், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 போலீசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. 

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இதில் டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் தொடங்கி நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 40-ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை: