tamil.samayam.com :கொரோனாவின் 2ஆவது அலையின்கீழ் இந்தியா தள்ளாடிக் கொண்டுள்ளது. பல
மாநிலங்கள் அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல்
போராடி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான
உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது.
அம்மாநிலத்தில் கொரோனா
தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வரும்
போதிலும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுதான் நிதர்சனமாக
உள்ளது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கொரோனா தவிர வேறு
சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை
என்பதுதான் உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம்.கான்பூரை சேர்ந்த நிரஞ்சன் பால் சிங்கின் 51 வயதான தந்தை கடந்த வாரம் இதே
நாள் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே
உயிரிழந்தார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 4 மருத்துவமனைகளில்
அவருக்கு அனுமதி கிடைக்காமல் கடைசியாக ஆம்புலன்ஸிலேயே அவர் உயிரிழந்தார்.
“இந்த நாள் எங்களை மனதளவில் மிகவும் பாதித்த மிகவும் மோசமான நாள். எனது தந்தைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் உயிரோடிருந்திருப்பார் என நம்புகிறேன். ஆனால் எங்களுக்கு, காவல்துறையினரோ, சுகாதார அதிகாரிகளோ, அரசாங்கமோ யாருமே உதவ வில்லை” என்றார்.
அதேபோல், மும்பையில் பணி புரியும் வினீத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உ.பி.யில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்க அவரது தாயார் கடுமையாக போராடினார். ஆனால், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தனது தாயின் கண்முன்னே ஆட்டோ ரிக்ஷாவில் அவர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பமும், அந்த புகைப்படத்தையும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
மற்ற மாநிலங்களை கொரோனாவின் முதல் அலை அழித்த போது உத்தரப்பிரதேசம் அந்த அளவுக்கு மோசமாக செல்லவில்லை அல்லது அதன் வீரியம் வெளியே தெரியவில்லை. ஆனால், இரண்டாவது அலை அம்மாநிலத்தை விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இடத்தில் முதல் அலையின் போது ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர், 2ஆவது அலையில் நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர் ஒருவர் கூறியதை நினைவுகூர வேண்டும்.
மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் போதிலும், பரிசோதனை மையங்களில் காணப்படும் கூட்டம், இடமில்லாமல் நோயாளிகளை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள், எங்கு திரும்பினாலும் ஆம்புலன்ஸ் சத்தம், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் உட்கார்ந்திருப்பவர்கள், லக்னோ, கான்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எரிந்து கொண்டேயிருக்கும் சுடுகாடுகளின் புகைப்படங்கள், நிலைமையின் வேறு பிம்பத்தை கொடுக்கின்றன.
கான்பூர் லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனை மைதானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் படுத்துக் கிடக்கிறார்கள். அவர்களுக்கான படுக்கை வசதி அங்கு இல்லை. மற்றொரு அரசு மருத்துவமனையான கன்ஷிராம் மருத்துவமனை வளாகத்தில் இளம் பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை எந்த மருத்துவமனைகளிலும் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று கூறி கண்ணீருடன் செய்வதறியாது நிற்கிறார். தலைநகர் லக்னோவிலும் அதே நிலைமைதான், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் வயதானவர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்துக் கொண்டே காத்துக் கொண்டிருக்கிறார். அவரது மகன்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும்
மேலாக ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் சந்திரா என்பரும், அவரது மணைவியும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு மருந்துகளும்
கிடைக்கவில்லை, மருத்துவ உதவிகளும் கிடைக்கவில்லை. இறுதியாக அவரது மனைவி
உயிரிழந்து விட்டார். அவரது சடலத்தை வீட்டில் இருந்து எடுத்துச் செல்லக்
கூட அரசின் உதவி கிடைக்கவில்லை. நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம்
என்று கூறி உதவி கேட்டு அவர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.
மருத்துவமனைகளில்
படுக்கைகள் உள்ளன, அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்று முதல்வர்
கூறுகிறார். ஆனால், அத்தகைய வசதிகள் எங்கே என்று அவர்கள் எழுப்பும்
கேள்விகள் நியாயமாகவே இருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான
வாரனாசியும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கு வசிக்கும் நிர்மலா கபூர் என்ற 70
வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்வதற்கு
சென்றபோது, ‘சுடுகாடுகளில் பிணக் குவியல்கள் இருந்தன. சடலத்தை தகனம் செய்ய
20 நிமிடங்கள் முதல் 6 மணி நேரம் வரைக் காத்திருக்க வேண்டியுள்ளது. சடலத்தை
எரிக்கும் கட்டைகளின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது’ என்கிறார் அவரது மகன்.
240 மில்லியன் மக்கள் தொகை கொண்ட உ.பி., இந்தியாவின் மிகப்பெரிய
மாநிலம். அம்மாநிலத்தை தனியாக பிரித்தால் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட
நாடுகளில் 5ஆவது இடம் அதற்கு கிடைக்கும். பாகிஸ்தானை விடவும் பெரிய நாடாக உ.பி.
இருக்கும். பிரதமர் மோடியின் தொகுதியை அடக்கிய மாநிலம்,
நாடாளுமன்றத்துக்கு அதிக எம்.பி.க்களை அனுப்பும் மாநிலம் என்பதால் அரசியல்
ரீதியாகவும் அம்மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர்
கட்டமைப்பில் நன்றாக இருந்ததாக கூறப்படும் உத்தரப்பிரதேசம், மதத்தால்,
சாதியால் பிளவுண்டு கிடப்பதுடன், வன்முறைகளின் தேசமாகவும் உள்ளது.
கொரோனா
வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க உத்தரப்பிரதேச அரசு போராடி வருவதும், மக்களை
அழிவுப் பாதையில் அரசு கொண்டு செல்கிறது என்பதும் தனிப்பட்ட முறையில்
பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது. அம்மாநிலத்தில் பல ஆண்டுகளாகவே
மருத்துவக் கட்டமைப்பு வசதி மிகவும் மோசமாகவே உள்ளது. சாதாரண நேரங்களில்
கூட மருத்துவருக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் மக்கள் போராடும் நிலையே
உள்ளது என்றால் பெருந்தொற்றில் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
எதிர்க்கட்சிகளும்,
சமூக ஆர்வலர்களும் உண்மையான நிலவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று
வலியுறுத்துவதுடன், கொரோனா தொற்றுகளையும், இறப்புகளையும் அரசு குறைத்துக்
காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஒன்று பரிசோதனை செய்ய
மறுக்கிறார்கள் அல்லது கொரோனா பாசிட்டிவ் என்ற தகவலை அரசு இணையதளத்தில்
பதிவிடுவதில்லை என்று பொதுமக்களும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். மேலே
சொன்ன நிரஞ்சன் பால் சிங்கின் தந்தையும், வாரணாசியில் உயிரிழந்த நிர்மலா
கபூரும் கொரோனாவால் இறந்தவர்கள். ஆனால், அவர்களது இறப்பு சான்றிதழில்
இறப்புக்கு காரணாம் கொரோனா என்று குறிப்பிடப்படவில்லை.
ஆனால்,
விமர்சனங்கள் அனைத்தையும் மறுத்துள்ள அரசு, முழு வீச்சில் செயல்பட்டு
வருவதாகவும், முன்பை விட மருத்துவக் கட்டமைப்புகள் சிறந்த முறையில்
இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், சுகாதார ஊழியர்கள் பலரும்
பாதிக்கப்பட்டுள்ளதால் முழு மனிதவளத்துடன் செயல்பட முடியவில்லை என்று
தங்களது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக