சனி, 24 ஏப்ரல், 2021

உத்தர பிரதேசம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி

உத்தர பிரதேச அவலம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி

tamil.news18.com :உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கடந்த 10 தினங்களில் வென்ட்டிலேட்டர் கிடைக்காமல் கொரோனா தொற்றுக்கு 6 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர்.l
ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உ.பி.யில் ஆறு பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.


இவர்களில் சிலர் தங்கள் சொந்த முயற்சியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்தும் அதற்கான வென்டிலேட்டர் கிடைக்காமல் இறந்துள்ளனர்.

லக்னோவின் ‘ஜதீத் அமல்’ உருது பத்திரிகையின் செய்தியாளாரான சச்சிதானந்த் குப்தா கடந்த 14-ம் தேதி காலமானார். இதன் பின்னணியில் அவருக்கு வென்டிலேட்டர் கிடைக்காதது தெரியவந்துள்ளது.

லக்னோவின் மூத்த பத்திரிகையாளரான வினய் ஸ்ரீவாத்ஸவாவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். உதவி கேட்டு, தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது ஊடகப் பிரிவினருக்கு ட்வீட் செய்து கொண்டிருந்தார் ஆனால் உதவி கிடைப்பதற்குள் இவர் உயிரும் பிரிந்தது.

பயனியர் ஆங்கிலே நாளேட்டின் அரசியல் செய்திப் பிரிவின் பொறுப்பாளரான தவிஷி ஸ்ரீவாத்ஸவாவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவருக்கு ஏப்ரல் 18-ம் தேதி அவசரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்ட து. இவர் விவகாரத்திலும் தேவையற்ற தாமதம் ஏற்பட்டதால் இவரும் பலியானார்.

இளம் பத்திரிகையாளரான பவண் மிஸ்ராவிற்குத் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். எனினும், பவணுக்குத் தேவைப்பட்ட வென்டிலேட்டர் கிடைக்காமல் அவர் இரு தினங்களுக்கு முன் பலியானார்.

ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அங்கிட் சுக்லா (32), கடந்த புதன்கிழமை பலியானார். பிரோமத் ஸ்ரீவாத்ஸவா (42) என்ற பத்திரிகையாளரும் கொரோனாவுக்கு பலியானார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர் மூலம் முதல்வர் யோகிக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், பத்திரிகையாளர்களை கரோனா போராளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவர்களில் பாதிக்கப்படுபவர்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனியாகப் படுக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்கவும் கோரியுள்ளனர்.
Published by:Muthukumar

கருத்துகள் இல்லை: