சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் 23ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:"நான், எனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரனுடன் வசித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து 25.08.2019 அன்று திருமணம் செய்து கொண்டேன். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டோம். விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி தொடர் துணை இயக்குநர் நவீன்குமார் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதற்கு, நான் எனது முதல் திருமணம் பற்றியும், விவாகரத்துப் பற்றியும் கூறினேன்.
அதற்கு அவர், ‘பரவாயில்லை, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றார். அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே அவர் வேலை செய்து வந்த சீரியலில் இருந்து அவரை நீக்கிவிட்டனர். இதனால் செலவுக்குப் பணம் இல்லாமல் என்னிடம் கேட்டார். நானும் எனது பெற்றோருக்குத் தெரியாமல் ரூபாய் 1.5 லட்சம் கொடுத்தேன். மேலும், பணம் கேட்டதால் நகையை அடமானம் வைத்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
படப்பிடிப்பு தொடர்பாக நான் புதுச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு வந்த நவீன் குமார் செலவுக்கு 20 ஆயிரம் ரூபாய் கேட்டார். அதற்கு நான் பணம் இல்லை என்று கூறினேன். உடனே என்னை கடுமையாக தாக்கினார். மேலும், என்னை பலருடன் இணைத்துத் தவறாகப் பேசினார். பிறகு கடந்த 14ம் தேதி அவசரமாக 50 ஆயிரம் ரூபாய் கேட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போரூர் பகுதிக்கு வந்தார். என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். உடனே என்னை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு காரிலேயே எனது ஆடையைக் கிழித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். அதோடு இல்லாமல் நிர்வாணமான நிலையில் காரிலேயே சென்னை முழுவதும் முன் இருக்கையில் அமரவைத்துச் சுற்றி வந்தார். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், நிர்வாண வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு உன் வாழ்க்கையை அழித்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் எனக்கு வெளியே சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சம்பவம் குறித்து நவீன்குமார் தாய் பவானியிடம் கூறினேன். அதற்கு அவர், எனது மகன் சொல்வது போல் நடந்துகொள் என்றும், நவீன் குமார் தந்தை உதயகுமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை செய்து வருவதால் என் மீதும், எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டினார்.
அதன் பிறகு, எனது குடும்பத்துடன் காரில் சென்ற போது, பல்ஜிபாளையம் என்ற இடத்தில் நவீன் குமார் தனது பெற்றோருடன் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அதோடு இல்லாமல் எனது தங்கையின் ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தினார். இதுகுறித்து நான் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்படி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், நவீன் குமார் தந்தை உதயகுமார் அழுத்தம் காரணமாக மணலி இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறக் கோரி மிரட்டல் விடுக்கிறார். எனவே காரில் நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வரும் நவீன்குமார் அவரது குடும்பத்தினர் மீதும், புகாரை வாபஸ் பெறக் கோரி மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனிஃபர் புகார் மனுவில் தெரிவித்திருந்ததைக் கூறினார். மேலும், “என்னை மிரட்டி அரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்தார். அந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார். அடித்துத் துன்புறுத்தினார். அவர் மீது மணலி போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். என்னை அரை நிர்வாணமாக எடுத்த படங்களை அவரிடம் இருந்து போலீசார் மீட்டுத் தரவேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்துள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக