வியாழன், 3 செப்டம்பர், 2020

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து: எதிர்ப்பு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

   BBC  : வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வரும் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பாணையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்ததன் அடிப்படையில், கூட்டத்தொடர் அலுவல் தொடர்பான அறிவிப்பை மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. அதில் இந்த முறை கேள்வி நேரம் எதுவுமின்றி பிற நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொகுதி சார்ந்த முக்கிய கேள்விகளை எழுப்ப உறுப்பினர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றான கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இது குறித்து மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி உறுப்பினருமான கனிமொழி, கூட்டத்தொடர் முழுவதற்கும் கேள்வி நேரம் இல்லை என அறிவித்திருப்பது தேர்வுசெய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு அரசை கேள்விகேட்க உரிமை இல்லை என்ற செய்தியைத்தான் தெரிவிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். 

விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் து. ரவிக்குமார், "கேள்வி நேரத்தில் தான் மக்கள் தொடர்புடைய பிரச்சனைகளை எழுப்ப முடியும். அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முடியும். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது உடுகுறியிட்ட கேள்விகளுக்குத்தான் (ஸ்டார் கேள்விகள்) நேரடியாக துறை அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். அந்த கேள்விகளை கேட்க குலுக்கல் முறையும் உண்டு. மிகுந்த போட்டிக்கு நடுவில் கேட்கப்படும் இந்த கேள்விகளின் மூலம்தான், வேறு வகையில் கிடைக்காத தகவல்கள் கிடைக்கும். கேள்வி நேரம் இல்லாவிட்டால் கூட்டத்தொடரை நடத்துவதில் அர்த்தமில்லை" என்று கூறினார்.

மேலும், "கேள்வி நேரம் இருந்தபோது 10 கேள்விகள் இருந்தால், 10 கேள்விகளையும் கேட்பதற்கு நேரம் இருக்காது. 4-5 கேள்விகள்தான் கேட்கப்படும்.  அப்படியிருக்கும்போது சுத்தமாகவே கேள்வி நேரத்தை நீக்குவது உறுப்பினர்களின் உரிமைகளை பறிப்பதாகத்தான் இருக்கும்" ரவிக்குமார் கூறினார்.

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், "உடுகுறியிடாத கேள்விகளுக்கு (அன்ஸ்டார்டு கேள்விகள்) எழுத்து மூலமாக பதிலளிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லையென்கிறார்" என்றார்.

"பலரும் கேள்வி எழுப்பிய பிறகு, உடுகுறியிடாத கேள்விகளை அனுமதிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு உறுப்பினர் ஒரு நாளைக்கு ஐந்து கேள்விகள்தான் கேட்க முடியும். இதனை அடுத்த சில நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். துறைகள் அதிகமாக உள்ளன. அவற்றிடம் கேள்வி கேட்க கூடுதலாக அவகாசம் கொடுத்திருக்க வேண்டாமா? 20 நாட்களுக்கு முன்பே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே? எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்ள விரும்பாத அரசின் இரும்புத் திரை மனநிலைதான் இது.  அரசாங்கம், தான் செய்த நடவடிக்கைகளை நேரடியாகச் சொல்ல விரும்பவில்லை. நாடாளுமன்றம் மூலமாகவும் சொல்லவும் விரும்பவில்லை. எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, தான் செய்ய விரும்புவதை மட்டும் செய்ய அரசு நினைக்கிறது. மக்கள் மத்தியில், தான் சொல்ல விரும்பியதை சொல்வதற்கான வடிவத்தை தேர்வுசெய்கிறது. விவாதம் ஏற்படுவதை தவிர்க்க நினைக்கிறது" என்று குற்றம்சாட்டுகிறார் சு. வெங்கடேசன். 

விருதுநகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "மிக மோசமாக செயல்பட்டு வரும் அரசு, எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதைத் தவிர்க்க விரும்புகிறது" என்கிறார்.

 "கேள்விநேரத்தின் மூலம்தான் துறை அமைச்சர்கள் அவையில் நேரடியாக பதில் சொல்வார்கள். திங்கட்கிழமை 10 துறைகள் வருகின்றன. ஆகவே 20 கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு துறையிலும் பதில் சொல்லும் நேரத்தில் அமைச்சர்களுக்கு உதவுவதற்காக 5 முதல் 8 அதிகாரிகள் அவைக்குள் வந்து செல்வார்கள். இப்படி வந்து செல்வதால் சமூக இடைவெளி இருக்காது  என்பதை காரணமாகச் சொல்கிறார்கள். அப்படி நினைத்தால் பத்து துறைகளில் பதில் சொல்வதற்குப் பதிலாக இரண்டு துறைகளில் பதில் சொல்லலாமே..ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என நினைத்தால் செய்யலாம். ஆனால், அவர்கள் விரும்பவில்லை" என்கிறார் மாணிக்கம் தாகூர். 

திருச்சி தொகுதி எம்.பி சு. திருநாவுக்கரசர், "நாடாளுமன்ற நடைமுறையில் கேள்வி நேரம் என்பது முதுகெலும்பு மாதிரி. பல்வேறு தரப்பட்ட பிரச்னைகளை கேள்விகள் மூலம் எழுப்பும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கலந்துபேசி விளக்கமளிப்பார்கள். இதன் மூலம் தெளிவு ஏற்படும். அதற்கு வாய்ப்பு அளிப்பதுதான் கேள்வி நேரம். இப்போது கேள்வி நேரத்தை தவிர்த்துவிட்டு, சட்டமுன்வடிவின் மீது பேச அனுமதிக்கிறார்கள்" என்றார்.

"நாடாளுமன்றத்தின் நேரம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், சட்டமுன்வடிவை நிறைவேற்றத்தான் சரியாக இருக்கும். கேள்வி கேட்க வாய்ப்பிருந்தாலும் அந்த முன்வடிவு குறித்து மட்டும்தான் கேட்க முடியும். ஆனால், கேள்வி நேரத்தில்  எந்தப் பிரச்சனையையும் பேசலாம். துணைக் கேள்வி கேட்கலாம். இதன் மூலம் ஒரு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்தப் புதிய நடைமுறை நாடாளுமன்றத்திற்கும் நல்லதில்லை. நாட்டிற்கும் நல்லதில்லை" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: