செவ்வாய், 1 செப்டம்பர், 2020

டாக்டர் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க யோகி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

BBC :உத்தர பிரதேச அரசால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த கஃபீல் கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் 

 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கூறியுள்ள உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. 

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டமொன்றில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியதாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது."அவரின் பேச்சு வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் நோக்கில் இல்லை, தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையிலேயே இருந்தது," என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

கோரக்பூர் குழந்தைகள் மரணம் 2017ஆம் ஆண்டு கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சையில் இருந்த 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கஃபீல் கான், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேச அரசு நடத்திய விசாரணை அறிக்கையில், குழந்தைகள் மரணம் தொடர்பாக அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கோரக்பூர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

  

கருத்துகள் இல்லை: