வியாழன், 3 செப்டம்பர், 2020

டெல்லி டூ லண்டன் பேருந்து பயணம் விரைவில்: 18 நாடுகள், 70 நாட்கள், 20,000 கி.மீ -

லண்டன்      BBC : 2020ஆம் ஆண்டில் பல இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நீங்கள் திட்டங்கள் வைத்திருந்திருப்பீர்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு, வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாமல் இருக்கும் சூழல் ஏற்படும் என்று நினைத்திருக்க மாட்டீர்கள்.

மீண்டும் அடுத்த ஆண்டாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் இப்போதே பலர் மனதில் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

நீங்கள் பயண ஆர்வம் மிக்கவராகவோ அடிக்கடி சுற்றுலா செல்லும் நபராகவோ இருந்தால், இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது.

டெல்லியில் இருந்து லண்டன் வரை பேருந்து பயணம் செய்யும் திட்டத்தை அட்வென்சர்ஸ் ஓவர்லாண்ட் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம். நீங்கள் படிப்பது சரிதான், "டெல்லி டூ லண்டன் பேருந்து".

பஸ் டூ லண்டன்

ஹரியாணாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அட்வென்சர்ஸ் ஓவர்லாண்ட் நிறுவனம், இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டன் வரை பேருந்து ஒன்றை இயக்கவுள்ளது.

20 பயணிகள், 18 நாடுகள் வழியாக 70 நாட்களில் 20,000 கிலோ மீட்டர் தூரம் இந்த பேருந்தில் பயணிக்கலாம்.

மியான்மார், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்க்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லித்துவேனியா, போலாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டன் செல்லும் இந்த பேருந்து, மீண்டும் அதே வழியாக இந்தியா திரும்பும்.


படக்குறிப்பு,

செங்குடு, சீனா

இந்த பயணத்தில் மியான்மாரின் கோபுரங்களை பார்க்கலாம், சீன பெருஞ்சுவரில் நீண்ட நடை பயணம் செய்யலாம், ச்சங்க்டு நகரின் அரிய வகை பாண்டா கரடிகளை பார்க்கலாம். அதோடு, உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களான புக்காரா, டாஷ்கென்ட் மற்றும் சமர்கண்ட் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.

டாஷ்கென்ட், உஸ்பெகிஸ்தான்
படக்குறிப்பு,

டாஷ்கென்ட், உஸ்பெகிஸ்தான்

மேலும், கஜகஸ்தானின் கேஸ்பியன் கடலில் கப்பல் பயணம். போகும் வழியில் மாஸ்கோ, விலினியஸ், பிராக், பிரசல்ஸ் மற்றும் ஃபிரேங்ஃபர்ட் ஆகிய ஐரோப்பிய நகரங்களையும் வலம் வரலாம் என இப்பயணம் குறித்து அந்நிறுவனத்தின் வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதுதான் முதல் பேருந்தா?

இவ்வாறு இந்தியாவில் இருந்து லண்டன் வரை இயக்கப்படும் முதல் பேருந்து இதுவல்ல என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

இதுதான் முதல் பேருந்தா?

1957ஆம் ஓஸ்வால்டு-ஜோச்ப் கேரோ ஃபிஸ்சர் என்ற ஆங்கிலேயேர்களால் லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்கு பேருந்து இயக்கப்பட்டுள்ளது.

இந்தியாமென் என்று பெயரிடப்பட்ட அந்த பேருந்து 20 பயணிகளோடு லண்டனில் இருந்து 1957, ஏப்ரல் 15ஆம் தேதி புறப்பட்டு, ஜூன் 5ஆம் தேதி கொல்கத்தா வந்தடைந்தது. பின்னர் அதே பேருந்து ஆகஸ்டு 2 ஆம் தேதி மீண்டும் லண்டன் சென்றது.

இதில் ஒரு வழி பயணத்திற்கான செலவு 85 பவுண்டுகள்.

பிரான்ஸ், இத்தாலி, யுகோஸ்லோவியா, பல்கேரியா, துருக்கி, இரான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இப்பேருந்து இந்தியா வந்தது.

பேருந்தில் 70 நாட்கள்

பயணம் சரி. ஆனால் இத்தனை நாட்கள் எப்படி பேருந்தில் செல்வது என்று சிந்திக்கிறீர்களா?

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்து, பயணத்திற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதாக அவர்களின் வலைதளம் கூறுகிறது.

பேருந்தில் 70 நாட்கள்

மொபைல் சார்ஜிங், 24 மணி நேர Wi-Fi வசதி, உங்கள் பொருட்களை வைக்க தனி லாக்கர், தனித்தனி இருக்கைகள் என பயணத்திற்கு தேவையான அனைத்தும் இந்தப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ளன.

அட்வென்சர்ஸ் ஓவர்லாண்டின் நிறுவனர்களான சஞ்ஜய் மதன் மற்றும் துஷர் அகர்வாலின் யோசனைதான் இந்த டெல்லி டூ லண்டன் திட்டம்.

கட்டணம் எவ்வளவு?

மே 2021ல் முதல் பேருந்து சேவை செயல்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்து, சர்வதேச எல்லை போக்குவரத்து திறந்த பிறகு, பாதுகாப்பான நிலையிலேயே இந்த பேருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணம் 20,000 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் ரூபாய்.

கருத்துகள் இல்லை: