minnamblam :கள்ளக்குறிச்சி
மாணவி நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட இடத்தில் செல்போன் உதிரிபாகங்கள் மற்றும்
கைக்கடிகாரம் கருகிய நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி
மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச்
சேர்ந்தவர் நித்யஸ்ரீ. கல்லூரி மாணவி. இவருக்கு இரு சசோதரிகள் உள்ளனர்.
இவர்கள் 12, 10ஆம் வகுப்புகள் பயின்று வருகின்றனர். ஆன்லைன் பாடங்கள்
நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு செல்போனை வைத்து பாடம் கற்பதில்
சகோதரிகளுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்
நித்யஸ்ரீ இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உடல்
அவரது கிராமத்தில் உள்ள இடுகாட்டில் எரிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பில்
கலந்துகொள்வதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார் என்று
தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் நித்யஸ்ரீ
குடும்பத்துக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.>இந்நிலையில்
வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட
இடத்தில் செல்போனின் உதிரிபாகங்கள், கூடுதல் மனித எலும்புகள், மற்றும்
கைக்கடிகாரம் ஆகியவை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
தகவலறிந்து வந்த போலீசார் எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக
அனுப்பியுள்ளனர்.
இதனிடையே மேட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த,
முருகன் என்பவரது மகன் ராமுவை காணவில்லை என்று காவல்துறையில் புகார்
அளிக்கப்பட்டிருக்கிறது. இவர், நித்யஸ்ரீயை ஒருதலையாகக் காதலித்து வந்தது
விசாரணையில் தெரியவந்தது என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே
அந்த கைக்கடிகாரம் மற்றும் கூடுதல் எலும்புகள் ராமுடையதாக இருக்கலாம் என்று
சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, நித்யஸ்ரீ எரியூட்டப்பட்ட இடத்தில் ராமு
சுற்றிச் சுற்றி வந்ததாகவும், நித்யஸ்ரீ உறவினர்கள் அங்கிருந்து சென்ற
பிறகு தீயில் பாய்ந்து ராமுவும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும்
கூறப்படுகிறது. நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட அன்று அந்த பகுதியில் ஒரு இளைஞரின்
அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும் போலீஸ் வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் கூறுகிறார்கள்.
-கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக