இலங்கையின் கிழக்கு கடலில் பனாமா நாட்டு கொடியுடன் மற்றொரு கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் படங்களை கடற்படை வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டு மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணை ஏற்றப்பட்ட இக்கப்பலில் தீ கட்டுப்படுத்தப்படாவிடில் கழிவு எண்ணெய் முழுவதும் கடலில் கலந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைச் சுற்றுச் சூழலுக்கு பேராபத்தை விளைவிக்கலாம் என்று உலக அளவில் அஞ்சப்படுகிறது.
குவைத்தில் இருந்து இந்தியாவின் ஒரிஸாவில் உள்ள பிரதீப் எண்ணெய் உற்பத்தி கார்ப்பரேட் நிறுவனத்துக்காக (Paradip refinery) மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘நியூ டயமன்ட்’ (New Diamond) என்ற கப்பலே அம்பாறைக் கரையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரிகின்றது.
கப்பலின் இயந்திரப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து மூண்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இலங்கை, இந்தியக் கடற்படைகள் கூட்டாக ஈடுபட்டுள்ளன.
இந்த வெடிப்பினால் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மாலுமிகள் உட்பட ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் மேலும் தீ பரவுவது கட்டுப்படுத்தப்படாவிடில் அண்மையில் மொறீஸியஸ் கரையில் நிகழ்ந்தது போன்ற எண்ணெய்க் கசிவு பேரனர்த்தம் சிறிலங்காவின் கிழக்கு கடலில் உருவாகலாம் என்று சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக