2019 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்து எஸ்பியாக பொறுப்பேற்ற வருண் குமார், கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றார். அது முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி மாலை ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் 23 வயதான அருண்பிரகாஷ் என்ற இளைஞரை, ஒரு கும்பல் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்தது. ராமநாதபுரத்தில் மதக்கலவரத்துக்கு ஏற்பாடு செய்த பாஜகாவின் திட்டத்தை முறியடித்ததால்
அருண் பிரகாஷும் அவரது நண்பர் யோகேஸ்வரனும் நின்று பேசிக் கொண்டிருந்தபோது மோட்டார் பைக்குகளில் ஆயுதங்களோடு சுற்றி வளைத்தது. அவர்கள் தப்பித்து ஓட விடாமல் துரத்திச் சென்ற கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அதில் அருண் மரணம் அடைந்தார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சேட், சதாம், அஜீஸ், காசிம் ரஹ்மான் என்று தெரிந்ததும் பதற்றம் அதிகமானது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது இஸ்லாமியர்கள் என்ற நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8.06 மணிக்கு ஃபேஸ்புக்கில், “இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று பதிவிடுகிறார்.
இந்த சம்பவத்தின் மீது கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் செப்டம்பர் 2 ஆம் தேதி, “இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.பி.க்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவர்களில் நான்கு பேர் நேற்று லால்குடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையில் பாஜகவின் இளைஞரணித் தலைவர் வினோஜ் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் செப்டம்பர் 3 ஆம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வினோஜ் தலைமையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கார்களில் பாஜகவினர் ராமநாதபுரம் நோக்கி விரைந்தனர். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் வரும்போது கரிசல் குளம் சோதனைச்சாவடியில் போலீஸார் மறித்தனர். செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மாவட்ட எல்லையில் வழக்கத்தை விட அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இத்தனை வாகனங்களையும் அனுமதிக்க முடியாது என்று போலீசார் சொல்ல,சுமார் அரைமணிநேரம் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் பின்னர் சில கார்களுடன் வினோஜ் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அருண் கொலையில் பாஜகவினர் எஸ்.பி. மீது கோபத்திலிருக்க, நேற்று மாவட்ட எல்லையில் பாஜகவினரை வழிமறித்த சம்பவமும் நடந்த நிலையில்தான் எஸ்பி. வருண் நேற்று மாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் மமக தலைவரும் ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், “ பாஜகவினர் அருண் என்பவரின் கொலைக்கு மதச் சாயம் பூசி ராமநாதபுரத்தில் பதற்றம் ஏற்படுத்த முயன்றனர். குறிப்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச் ராஜா என்பவரின் முன்னெடுப்பில் பல பாஜகவினர் தொடங்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ வார இதழான ஆர்கனைசர் வரை இந்தக் கொலையை ஒரு வகுப்புவாத கொலையாகச் சித்திரிப்புச் செய்து சமூக வலைத்தளத்தில் வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டனர். கடந்த காலங்களிலும் இதே போல் ராமநாதபுரத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பரப்புரை செய்துள்ளனர்.
நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்திய லஞ்ச லாவண்யத்திற்கு துணை போகாதஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான வருண் குமாரை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. தமிழக அரசு பாஜகவின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது தமிழகத்தை ஆளுவது அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “ராமநாதபுரம் எஸ்பி வருண் மீது மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் காவல்துறை மேலிடத்துக்கு ஏற்கனவே சென்றிருக்கின்றன. கடந்த வாரம் கமுதி அருகே அபிராமம் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு ஜேசிபி, டாரஸ், ஏழு டிராக்டர்கள் உள்ளிட்ட 14 வாகனங்கள் பிடிக்கப்பட்டன. இதில் மாலைக்குள் 8 வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. அதிமுக முக்கியப் புள்ளிகள் தலையீட்டில் எஸ்பி மூலமாக இந்த விவகாரத்தில் சிலர் காப்பாற்றப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஏற்கனவே வருண் சமுதாய ரீதியாக செயல்படுவதாக கருணாஸ் எம்.எல்.ஏ. வும் புகார் கூறியிருந்தார். இத்தனை புகார்களோடு பாஜகவினரின் அழுத்தமும் சேர்ந்து வருண் குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கின்றன” என்கிறார்கள்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக