கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்கள் நீட் தேர்வை எழுதவே விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் நீட் தேர்வு நடைபெறுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள், “நீட் தேர்வை நடத்தலாம் என ஆகஸ்ட் 17ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்து, தேர்வை தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து உத்தரவிட வேண்டும்” என்று மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (செப்டம்பர் 4) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி அசோக் பூஷண் தலைமையில், பி.ஆர். கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது. ஆகஸ்ட் 17 அன்று நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், "கொரோனா இன்னும் ஒரு வருடம் தொடரக்கூடும். அதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்கப் போகிறீர்களா?" என்று கேட்டது குறிப்பிடத் தக்கது. அருண் மிஸ்ரா தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக